You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
India vs Australia : தோனி, சாஹல் அபாரம் : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை
மெல்பர்னில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
மகேந்திர சிங் தோனி 87 ரன்கள் அடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு பக்கபலமாக 57 பந்துகளில் ஏழு பௌண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார் கெதர் ஜாதவ்.
231 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தோடு இலக்கை விரட்டத் துவங்கியது இந்தியா. ரோஹித் ஷர்மா 9 ரன்களுக்கும், ஷிகர் தவான் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 62 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
விராட் கோலி ஆட்டமிழந்ததும், தோனியும் கேதர் ஜாதவும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. 49 வது ஓவரில் இந்திய அணி 13 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் கெதர் ஜாதவ் வின்னிங் ஷாட் விளாசி ஆட்டத்தை நிறைவு செய்தார்.
யுவேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மகேந்திர சிங் தோனி தொடர் நாயகனானார்.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியில் நாதன் லயன், பெஹண்டிராஃப் ஆகியோருக்கு பதிலாக ஸ்டான்லேக், ஆடம் ஜாம்பா ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்கு பதிலாக கெதர் ஜாதவ் மற்றும் சாஹல் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் முதல் முறையாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கினார்.
முதல் பவர்பிளேவில் இந்திய பந்து வீச்சாளர்கள் புவனேஷ் குமார் மற்றும் மொஹம்மத் ஷமி அபாரமாக பந்து வீசினர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் கரே, ஆரோன் பின்ச் இருவரும் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் வீழ்ந்தனர். அதன்பின்னர் உஸ்மான் கவஜா, ஷான் மார்ஷ் இணை நிதானமாக விளையாடியது. எனினும் ஆட்டத்தின் 23-வது ஓவரில் சாஹலின் பந்துவீச்சில் ஷான் மார்ஷ், கவாஜா இருவரும் ஆட்டமிழந்தனர்.
பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 63 பந்துகளை சந்தித்து அரை சதம் விளாசினார். கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 5 பௌண்டரிகள் விளாசிவிட்டு அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சாஹல் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்
ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது நபரானார் சாஹல். முன்னதாக அஜித் அகர்கர், ஸ்டார்க், கிறிஸ் வோக்ஸ் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
இந்திய வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றுவது இது ஏழாவது முறை. முன்னதாக ஸ்டூவர்ட் பின்னி, அனில் கும்ப்ளே, ஆஷிஷ் நெஹ்ரா, குல்தீப் யாதவ், முரளி கார்த்திக், அஜித் அகர்கர் ஆறு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்