You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல என்றும் பல ஆண்டு காலமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு ஏற்பாடு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ். பாரதி, இந்த பத்து சதவீத இடஒதுக்கீடு பொது நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த பத்து சதவீத இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது பாதிக்கப்படுமென்றும் தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீதம் உள்ள நிலையில் இந்த கூடுதல் பத்து சதவீத இடஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீட்டின் அளவை 79 சதவீதமாக அதிகரிக்கும். ஆகவே, மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்; சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்க வேண்டுமென்றும் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே நடப்பில் உள்ள இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படாததால், பெரும்பாலான இடங்களை முன்னேறிய வகுப்பினரே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையில் , இந்த பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், "தான் செய்த துரோகத்திற்கு பிராயசித்தமாக மத்திய அரசு துறைகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சென்றடைய பிரதமர் நரேந்திர மோதி எஞ்சியிருக்கின்ற நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகையில் மத்திய அரசு பணிகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும்" என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுவரை இடஒதுக்கீடு பெறாத பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு, ஜனவரி 8-9 ஆகிய தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்