You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா வந்துள்ள முக்கிய வட கொரிய அதிகாரி: மீண்டும் டிரம்ப் - கிம் உச்சிமாநாடு?
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற சாத்தியமுள்ள இரண்டாவது உச்சி மாநாட்டுக்கு முன்பு வட கொரியாவின் அரசு தரப்பபை சேர்ந்த முக்கிய அதிகாரியொருவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
கிம் யோங்-சோல் என்ற அந்த வட கொரிய பேச்சுவார்த்தையாளர் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிலிருந்து கிம்மிடமிருந்து அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஒரு கடிதத்தை கொண்டு சென்றதாக தென் கொரிய ஊடக தகவல்கள் கூறுகின்றன.
வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோவை கிம் யோங்-சோல் சந்திக்கவுள்ளார் என்று தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹாப் குறிப்பிட்டுள்ளது.
டிரம்ப் மற்றும் கிம் இடையேயான இரண்டாவது உச்சி மாநாடு வியட்நாமில் நடக்கக்கூடும் என்ற யூகங்கள் தற்போது அதிகரித்துள்ளன.
வரும் பிப்ரவரியில் வட கொரிய தலைவர் கிம் கம்யூனிச நாடான வியட்நாமுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடாமல் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் கிம் மற்றும் டிரம்ப் இடையே நடந்த வரலாற்று சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சி மாநாட்டுக்கு பிறகு வட கொரியாவை அணுஆயுத பிரதேசமற்றதாக மாற்றும் திட்டத்தில் சிறிய அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
யார் இந்த கிம் யோங்-சோல்?
முன்னாள் உளவுப்படை தலைவரான ராணுவ ஜெனரல் கிம் யோங்-சோல், வட கொரிய தலைவர் கிம்மின் வலது கரமாக வர்ணிக்கப்படுகிறார்.
தற்போது அமெரிக்காவுடனான வட கொரியாவின் பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டின் சார்பாக பங்கேற்கும் முக்கிய பிரமுகராக இவர் உருவாகியுள்ளார்.
ஒரு சர்ச்சைக்குரிய நபராக அறியப்படும் கிம் யோங்-சோல், 2010 ல் ராணுவ உளவுத்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தென் கொரிய போர்க்கப்பல்களின் மீதான வட கொரியாவின் தாக்குதல் திட்டங்களில் பின்புலமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வாஷிங்டனுக்கு கிம் யோங்-சோல் சென்றிருந்தார், இரு நாடுகளுக்கும் இடையே நடந்த வரலாற்று பேச்சுவார்த்தைக்கு முன்பாக அவர் டிரம்ப்பை சந்தித்து வட கொரியாவின் சார்பாக ஒரு கடிதம் அளித்தார் .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்