You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துபாய் நாளிதழ் ராகுல் காந்தியை அவமதித்ததா? - உண்மை என்ன?
துபாயைச் சேர்ந்த நாளிதழொன்று ராகுல்காந்தியை அவமதித்து செய்தி வெளியிட்டதாக தெரிவிக்கும் வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் இவ்விவகாரத்தை வைரலாக்கின.
ராகுல் காந்தியின் சமீபத்திய துபாய் பயணத்தில், இந்தியாவுக்கு அவர் இழுக்கு ஏற்படுத்தியதாக வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் கூறின.
இதற்கு ஆதாரமாக கல்ஃப் நியூஸ் நாளிதழின் முதல் பக்கத்தையும் வெளியிட்டன. அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில், கல்ஃப் நியூஸ் நாளிதழின் முதல் பக்கத்தில் ராகுல் காந்தியை 'பப்பு லேபிள்' என குறிப்பிட்டு கேலிச் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது.
அந்த புகைப்படத்தில் உள்ள அந்த செய்தித் தாளின் முதல் பக்கம் சாதுர்யமாக மடிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள சில வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் '' பாருங்கள், அயல்நாட்டுக்குச் சென்று நமது நாட்டை இழிவுபடுத்துபவர்களுக்கு இது போன்ற மரியாதைதான் கிடைக்கும். அபுதாபி நாளிதழ் போலவே கல்ஃப் நாளிதழும் தனது கட்டுரையில் ராகுல் காந்தியை ‘பப்பு‘ என குறிப்பிட்டுள்ளது.
நாட்டை 65 ஆண்டுகள் ஆண்ட ஓர் அரசியல் கட்சியின் தலைவர் அயல்நாட்டுக்கு சென்று இந்தியாவில் ஊழலும், வறுமையும் ஆழமாக வேரூன்றியுள்ளது எனக்கூறினால், 65 ஆண்டுகளாக தமது கட்சி என்ன செய்தது என சிந்திக்க வேண்டும்.
பல பாஜக தலைவர்கள் கடந்த காலங்களில் ராகுல்காந்தியை தாக்குவதற்காக “பப்பு” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.
சரி, உண்மையில் அந்த நாளிதழ் ராகுல் காந்தியை இழிவுபடுத்தியதா?
உண்மை நிலவரம் அவர்கள் கூறுவதற்கு மாறாக உள்ளது.
நாளிதழ் வைத்துள்ள முழுமையான தலைப்பு '' பப்பு என்ற பட்டம் ராகுலை எப்படி மாற்றியது?'' என்பதே.
அந்த தலைப்பும் கேலி சித்திரமும் ராகுல் காந்தியின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது என அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.
சரி. தலைப்பில் ஏன் 'பப்பு' என குறிப்பிட்டிருந்தார்கள்?
“பப்பு” என அவருக்கு பட்டப்பெயர் சூட்டி அழைப்பதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பதை குறிப்பிடும் பொருட்டு அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நாளிதழின் கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் என்ன?
'' 2014-ம் ஆண்டில்தான் எனக்கு சிறந்த பரிசு கிடைத்தது. வேறு எங்கும் என்னால் கற்றிருக்க முடியாததை அப்பரிசின் மூலமாக கற்றுக்கொண்டேன். எனது எதிராளிகள் என் வாழ்க்கையை எவ்வளவுக்கெவ்வளோ கடினமாக்குக்கிறார்களோ, அது எனக்கு கடினமானதாகவும் நல்லதாகவும் இருக்கிறது. “பப்பு” என அவர்கள் சொல்வது குறித்து நான் கவலையடையவில்லை. எனது எதிராளிகளின் தாக்குதல்களை பாராட்டுகிறேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்'' என பதிலளித்திருக்கிறார்.
ஆகவே, ராகுல் காந்தியை இழிவுபடுத்துவதற்காக “பப்பு” என்ற பதத்தை அந்நாளிதழ் பயன்படுத்தவில்லை என்பது தெளிவு.
வலது சாரி சமூக வலைதள பக்கங்கள் இவ்வாறு புகைப்படம் போட்டு அவர்களது கருத்துக்களை கூறி வைரலாக்கிக்கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தியை தங்களது நாளிதழ் இழிவுபடுத்தியதாக கூறுவது போலிச் செய்தி என கல்ஃப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் ஒரு ஸ்டேடியத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களை துபாயில் சந்தித்து பேசினார் ராகுல் காந்தி.
இந்நிகழ்வு பிரதமர் மோதி அயல் நாடுகளுக்குச் சென்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவதை ஒத்திருந்தது.
பிற செய்திகள்:
- 10YearChallenge: 10 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியுள்ளது?
- தோனி, சாஹல் அபாரம் : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை
- பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு
- #10YearChallenge: நாம் ஏன் இந்த சேலஞ்சை தவிர்க்க வேண்டும்?
- உலகின் 2வது இளைய கிராண்ட் மாஸ்டரான தமிழ் சிறுவன்: இலக்கை எட்டியது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்