எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பது கட்டாயமாக்கப்படுகிறதா?

எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பது கட்டாயமாக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பது கட்டாயமாக்கப்படுகிறதா?

இந்தியா முழுவதும் பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பதை கட்டாயமாக்கும் வகையிலான பரிந்துரை மத்திய மனிதவள மேம்பட்டுத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்திருந்தது.

இந்நிலையில், அந்த அறிக்கையில், இந்தியாவிலுள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை இந்தி மொழிப்பாடத்தை கட்டாயமாக்குவது, அறிவியல், கணிதம் போன்ற படங்களுக்கு நாடுமுழுவதும் ஒரேமாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது, திறன் மேம்பாடு சார்ந்த படிப்புகளை வழங்குதல், கல்விக்கென பிரதமர் தலைமையிலான குழு ஒன்றை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

தமிழ் இந்து: அங்கன்வாடியில் பயிலும் நெல்லை ஆட்சியரின் மகள்

அங்கன்வாடியில் பயிலும் நெல்லை ஆட்சியரின் மகள்: இணையத்தில் குவியும் பாராட்டு

பட மூலாதாரம், Twitter

பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடி மையத்தில் தனது இரண்டரை வயது மகள் கீதாஞ்சலியை சேர்த்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷின் செயல் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் இந்து நாளிதழ்.

"திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி பொறுப்பேற்றார். 2009-ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவரது இரண்டரை வயது மகள் கீதாஞ்சலி, தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தின் அருகே செயல்படும் அங்கன்வாடி மையத்தில் பயில்கிறார்.

இம்மையத்தில் பயிலும் 20 குழந்தைகளுடன் கீதாஞ்சலியும் பயில்கிறார். அவர்களுடன் நட்புடன் பழகி விளையாடுகிறார். மாவட்ட ஆட்சியரின் மகளை அங்கன்வாடி தொடங்கும் நேரத்தில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தினமும் கொண்டுவந்து விட்டுச் செல்கிறார்கள்.

கீதாஞ்சலி அங்கன்வாடி மையத்தில் சேர்ந்து 2 மாதங்களே ஆவதால் அவருக்கு இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. விரைவில் சீருடை வழங்கப்படும் என்று இம்மையத்தின் அமைப்பாளர் செல்வராணியும், உதவியாளர் ரேவதியும் கூறுகிறார்கள்.

ஆட்சியர் தனது மகளை அங்கன்வாடியில் சேர்த்து பயில வைப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

சமூகத்திலுள்ள அனைத்து தரப்பு குழந்தைகளுடன் பழகவும், படிக்கவும், தமிழைக் கற்கவும் தனது மகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக ஆட்சியர் கருதுகிறார் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினத்தந்தி: "தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறை செல்வார்கள்" - மு.க.ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளை சாடிய ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று தஞ்சையில், மு.க.ஸ்டாலின் கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

"ஜெயலலிதா அரசியல் ரீதியாக நமக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர். அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நாங்கள் முதலில் இருந்தே கேட்டு வருகிறோம். ஆனால் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும், அது இ.பி.எஸ், ஓ.பி.எஸ், டி.டி.வி., சசிகலா என யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

தற்போது உள்ள ஆட்சி, டெல்லியின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதேபோல் உங்கள் கோரிக்கைகளும் நிறைவேற நாம் எதிர்பார்க்கிறவர் மத்தியில் பிரதமராக வர வேண்டும். எனவே இந்த 2 ஆட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது தி.மு.க. ஆட்சிக்கு தொடக்கப்புள்ளியாக அமைய வேண்டும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினமணி: பெண்கள் குறித்த கருத்து: பாண்டியா, ராகுலிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ

பெண்கள் குறித்த கருத்து: பாண்டியா, ராகுலிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ

பட மூலாதாரம், Twitter

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது பெண்கள் குறித்து தவறான வகையில் கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அந்த நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்குமாறு இருவருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காஃபி வித் கரன் என்ற பெயரில் உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாண்டியா மற்றும் ராகுல் பங்கேற்றிருந்தனர். அப்போது இரவு விடுதி நிகழ்வுகளை மையப்படுத்தி பெண்கள் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பாண்டியா, ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் அதிருப்தியையும், விமர்சனத்தையும் வெளிப்படுத்தினர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்குமாறு பாண்டியா மற்றும் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.

இதனிடையே, கிரிக்கெட் தொடர்பில்லாத இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: