எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா? #Factcheck

எகிப்து

பட மூலாதாரம், AFP/Getty images

இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

அந்த புகைப்படத்தில், `இஸ்லாமிய நாடான எகிப்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளன` என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில், இம்மாதிரி உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுள்களின் சிலையை நாம் கண்டறியலாம்; இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்தது என்பதை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அது ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் போல காட்சியளிக்கிறது. அங்கு ஆள் ஒருவரும் காணப்படுகிறார். மேலும் சில சிலைகளின் பின்புறம் தெரிகிறது.

இந்த புகைப்படத்தை கூகுளில் 'ரிவர்ஸ் இமேஜ் தேடல்' ஆய்வு செய்தால் இது ஒரு உண்மையான புகைப்படம் என்பது தெரியவருகிறது; ஆனால், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

எகிப்து

பட மூலாதாரம், AFP/Getty images

எகிப்தில், அகழ்வாராய்ச்சி செய்யும் இடத்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்ததாக எந்த ஓர் ஆதாரமும் இல்லை.

கி.மு. 2500 முதல் கி.மு. 2350 வரை எகிப்தை ஆண்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சிலைகள் கிடைத்துள்ளன.

கடந்தவாரம் எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள், அரிய கல்லறை ஒன்றை கண்டறிந்தனர். அது 4,400 ஆண்டுகள் பழமையான இடம் என்றும், மதகுரு ஒருவர் புதைக்கப்பட்ட இடம் என்பதும் கண்டறியப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளில் இம்மாதிரியான தலம் கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என எகிப்தின் தொல்பொருள் ஆய்வு முதன்மை கவுன்சிலின் பொதுச் செயலர் முஸ்டஃவா வசிரி தெரிவித்துள்ளார்.

இவர்தான் சமூக வலைதளங்களில் வலம் வரும் அந்த புகைப்படங்களிலும் தென்படுகிறார்.

எகிப்து

பட மூலாதாரம், Reuters

இந்த கல்லறை கெய்ரோவுக்கு அருகில் உள்ள சக்காரா பிரமிட் வளாகத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் பழங்கால எகிப்தின் எழுத்துமுறை, பழம்பெரும் எகிப்து மன்னர்களின் சிலை ஆகியவை கண்டறியப்பட்டன.

அதில் அலங்கரிக்கப்பட்ட இடங்களில் ராஜ மதகுரு வாதாய் தனது தாய், மனைவி மற்றும் பிற உறவினர்களுடன் இருப்பது போன்ற சிலைகளும் காணப்பட்டன.

பிபிசி உள்பட, நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் போன்ற செய்தி ஊடகங்களால் உலகம் முழுவதும் இந்த செய்தி வெளியிடப்பட்டது.

எகிப்தின் தொல்பொருளியல் அமைச்சகமும் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்திருந்தது.

இந்த தனியார் சமாதிகள், சக்காராவில் உள்ள பழம்பெரும் கல்லறைகளின் ஒரு பகுதியாகும். அங்குதான் பழம்பெரும் எகிப்திய பிரமிடுகளும் இருந்தன.

இந்த சமாதி மண்ணில் புதைந்திருந்ததால் அது திருடர்களிமிருந்து தப்பியது. இந்த சமாதியின் சுவர்களில் பழம்பெரும் எகிப்து குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

எகிப்து

பட மூலாதாரம், EPA

சுவர்களில் இருந்த அலங்காரங்கள், பழம்பெரும் எகிப்து சமூகத்தில் கடவுளுக்கு நெருக்கமான இந்த மதகுருக்கள் முக்கியமானவர்களாக கருதப்பட்டனர் என்பதை காட்டுகிறது.

போலித் தகவல்களைத் தாங்கிய இந்தப் புகைப்படங்கள் அயோதியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்ட நேரத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

இதேபோன்ற மற்றொரு போலிச் செய்தி சமூக ஊடகங்களில் வலம் வருவதை பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு கண்டறிந்தது.

நவம்பர் 25ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என நடத்தப்பட்ட கூட்டத்தின் புகைப்படம் என இந்துத்துவா அமைப்புகளின் சமூக வலைதளங்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டன. ஆனால் அது கூட்டத்தை அதிகபடியாக காட்டும் போலி புகைப்படம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: