You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனா: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - சினிமா விமர்சனம்
இசையமைப்பாளராக இருந்து இயக்குனராகியிருக்கும் அருண்ராஜா காமராஜின் முதல் படம் இது. தயாரிப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் முதல் படம் இதுவே. ஒரு சிறு கிராமத்திலிருக்கும் பெண்ணின் கிரிக்கெட் கனவும் அது நனவாக அவர் நடத்தும் போராட்டமும்தான் ஒருவரிக் கதை.
குளித்தலையில் வசிக்கும் விவசாயியான முருகேசன் (சத்யராஜ்) ஒரு கிரிக்கெட் பைத்தியம். தந்தையைப் பார்த்து மகள் கௌசல்யாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் ஏற்படுகிறது. தன் ஊரில் இருக்கும் பையன்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்கிறார். முருகேசனுக்கு இது பிடித்திருந்தாலும் தாய் (ரமா) கடுமையாக எதிர்க்கிறார். ஊருக்குள்ளும் கேலிசெய்கிறார்கள். இதையெல்லாம் மீறி கௌசல்யா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, அணி உலகக் கோப்பையைப் பெறுவதற்கு காரணமாக மாறுவது மீதிக் கதை. அதற்கு இணையாக, முருகேசன் விவசாயத்தில் ஏதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சொல்லப்படுகின்றன.
விளையாட்டை பின்னணியாகக் கொண்ட கதைகளை படமாக எடுப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அந்த விளையாட்டைச் சொல்லும் விதம் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாறவில்லையென்றால், விளையாட்டு தெரியாதவர்கள், ஆர்வமில்லாதவர்கள் மத்தியில் படம் சுத்தமாக எடுபடாமல் போய்விடும். ஆனால், அந்த சவாலை மிக எளிதாகக் கடந்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ். பரவலாக எல்லோரும் அறிந்த கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து, ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையைச் சொல்லியிருப்பதோடு, காவிரி பிரச்சனை, நிலம் கையகப்படுத்துவது, கடன் பிரச்சனை போன்றவற்றை இணையாக சொல்லிக்கொண்டே போகிறார்.
கிராமத்தில் அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்ணுக்கு கிரிக்கெட் மீது ஆசை வருவது, அந்த ஆசை பள்ளிக்கூடத்தைத் தாண்டுவதில் ஏற்படும் சிக்கல், கிராமத்தைத் தாண்டிய பிறகு இந்திய அணியை அடைவதில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என மிக துவக்கத்திலிருந்தே படம் விறுவிறுப்பாக நகர்கிறது. விளையாட்டில் ஈடுபட விரும்பும் பெண், கிராமத்தில் உள்ள இளைஞர்களுடன் மிக இயல்பாக விளையாடும் காட்சிகளும் அவர்கள் மிகுந்த நல்லுணர்வுடன் அந்தப் பெண்ணை அரவணைத்துச் செல்வதும் என நேர்மறையான காட்சிகளுடன் படம் முழுவதும் நகர்கிறது.
படத்தின் முக்கியமான பிரச்சனை, முருகேசன் விவசாயத்தில் எதிர்கொள்ளும் சிக்கலைச் சொல்லும்போது உள்ள இயல்புக்கு மாறான காட்சிகள்தான். ஒரு கட்டத்தில் இந்தக் காட்சிகள், படத்தின் மையம் எது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன. ஆனால், பிறகு சுதாரித்துக்கொள்கிறார் இயக்குனர்.
ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகிகளை மட்டும் மையப்படுத்தும் திரைக்கதைகளுக்கு என இன்னும் ஒருவர் கிடைத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. அவரது திரைவாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கக்கூடும்.
சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் படத்தின் பிற எனர்ஜி பூஸ்டர்கள். அதிலும் நரைத்த தாடியுடன் வரும் சிவகார்த்திகேயன், தன் வழக்கமான பாணியைக் கைவிட்டுவிட்டு, பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.
கதாநாயகியின் தாயாக வரும் ரமா, முருகேசனின் நண்பராக நடிக்கும் இளவரசு ஆகியோருக்கும் மனதில் பதியும் கதாபாத்திரங்கள்.
இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸின் இசை படத்திற்கு பக்கபலம். 'சவால்' பாடல், படம் முடிந்த பிறகும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு இது பெயர் சொல்லும் படம். குறிப்பாக கிரிக்கெட் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் அசத்துகிறது.
படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும் பார்த்து, ரசிக்கத்தக்க படம்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்