5 மாநிலத் தேர்தலுக்குப் பின் 29 மாநிலங்களில் ஒரேயொரு பெண் முதலமைச்சர்

    • எழுதியவர், சிந்துவாசினி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பல விஷயங்களை புரட்டிப்போட்டுவிட்டன. இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒரே ஒருவர்தான் பெண் முதலமைச்சர் என்பதும் தேர்தல் ஏற்படுத்திய மாற்றம்தான்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவி, வசுந்தரே ராஜேவிற்கு கைநழுவிப் போனதால், தற்போது மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி மட்டுமே இந்தியாவின் ஒரே பெண் முதல்வர் என்று நிலைமை மாறிவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் நான்கு மூலைகளிலும் தலா ஒருவர் என நான்கு பெண் முதல்வர்கள் பதவி வகித்தார்கள். தற்போது அந்த எண்ணிக்கை ஒன்றாக சுருங்கிவிட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெஹபூபா முஃப்தி, குஜராத்தில் ஆனந்திபென் படேல், ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே மேற்கு வங்கத்தில் மமதா பேனர்ஜி, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் முதலமைச்சராக பதவி வகித்தார்கள்.

ஜெயலலிதாவைத் தவிர, மீதி நான்கு பேரும் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர்கள். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு முன்னரே பெண் முதலமைச்சராக பதவி வகித்தார் ஜானகி ராமச்சந்திரன்.

இது இந்திய பெண்களுக்கு நல்ல செய்தியல்ல என்று கவலையை வெளியிடுகிறார் இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சிங்.

நாடு விடுதலை அடைந்த பிறகு இந்தியாவில் இதுவரை 16 பெண் முதலமைச்சர்கள் மட்டுமே ஆட்சி புரிந்திருக்கிறார்கள். உமா பாரதி, ராப்ரி தேவி, ஷீலா தீக்ஷித் ஆகியோரின் பெயர்களும் இதில் அடங்கும்.

"இந்தியாவில் பெண் முதலமைச்சர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றாலும், ஜெயலலிதா, மாயாவதி போன்றவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. பலமுறை முதலமைச்சராக பதவி வகித்திருக்கும் இவர்கள் இருவருமே திறமையாக ஆட்சி புரிந்தவர்கள். தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஜெயலலிதாவும், உத்தரப்பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையை கட்டுப்பாட்டில் வைப்பதில் மாயாவதியும் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது" என்கிறார் ஸ்மிதா சிங்.

அரசியலில் பெண்கள் என்ற தலைப்பில் 2017 ஆம் ஆண்டில் நாடாளுமன்றங்களுக்கான சர்வதேச அமைப்பான, இண்டர் பார்லிமெண்ட் யூனியன் (IPU) மற்றும் ஐ.நா பெண்கள் அமைப்பு ஆகியவை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெண்களின் பங்களிப்பு 11.8%, மாநிலங்களவையில் 11% என்று தெரியவந்துள்ளது.

பல மாநிலங்களில் பெண்கள் முதலமைச்சர்கள் ஆட்சியில் இருந்தது ஆரோக்கியமானது என்றாலும், அது தொடரவில்லை. தற்போது அந்த எண்ணிக்கை ஒன்று என்ற அளவில் சுருங்கிவிட்டதும் கவலையளிப்பதாக கூறுகிறார் ஸ்மிதா சிங்.

மூத்த அரசியல் நிபுணர் அதிதி ஃபட்னீஸின் கருத்து இதில் இருந்து சற்றே மாறுபடுகிறது.

பெண்கள் முக்கியப் பதவிகளில் இருந்தால், பெண்களின் நலன் மேம்படும், அதற்கேற்றவறையில் திட்டங்கள் செயல்படுத்தபடும் என்று பொதுகருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் அது சரியல்ல. இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தபோது, எந்தவித புரட்சியும் ஏற்படவில்லை. அதேபோல், பெண்கள் முதலமைச்சராக இருந்த மாநிலங்களின் நிலையும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் பெரிய அளவு மேம்பட்டிருந்ததாக கூறமுடியாது. அதுமட்டுமல்லாமல், ஆண் அரசியல்வாதிகள் பெண்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தமாட்டார்கள் என்றும் கூற முடியாது" என்கிறார் அதிதி.

இருந்தாலும், முடிவு எடுக்கும் நிலையில் பெண்கள் இருக்கும்போது, முடிவுகள் ஆக்கப்பூர்வமானதாகவும் சமத்துவமானதாகவும் இருக்கும் என்கிறார் அதிதி.

பெண் முதலமைச்சர்கள் மகளிர் நலனுக்கான முடிவுகளை ஏன் எடுப்பதில்லை?

பெண் ஆட்சியாளர் ஒருவர் பெண்களின் நலன்களுக்கான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று சொல்லிவிடமுடியாது என்று சொல்கிறார் ஸ்மிதா. ஆனால், அரசியலில் பெண்களில் பங்களிப்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்கவேண்டியது அவசியம். என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

"மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசியலில் உயர் பதவியை அடைவதற்கான அனைத்து தடைகளையும் ஒரு பெண் தாண்டி வந்துவிட்டாலும், முந்தைய ஆட்சியாளர்களுடன் போட்டிபோட்டு அதற்கு ஏற்றாற்போல செயல்படவேண்டும் என்ற நிர்பந்தம் அவருக்கு இருக்கும். அதுமட்டுமல்ல, அடுத்தமுறையும் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமானால், பிற ஆண்கள் மேற்கொள்வதற்கு நிகரான உபாயங்களையும் கையாளவேண்டும். அரசியலுக்குள் வந்துவிட்டால், ஆண் பெண் என்ற கண்ணோட்டத்தை தாண்டி பார்க்க வேண்டியிருப்பதால், பெண்களின் பிரச்சனைகள் பின்தங்கிவிடுகின்றன" என்கிறார் ஸ்மிதா.

ஆண்களை போன்று பெண்கள் லட்சியங்களை வைத்திருக்கமாட்டார்கள் என்றும், அவர்கள் வித்தியாசமாக செயல்படவேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோமா? என்ற கேள்வியை எழுப்புகிறார் ஸ்மிதா.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தால்தான் உண்மையிலேயே மாற்றங்கள் ஏற்படும் என்கிறார் ஸ்மிதா. அரசியலில் ஆண்கள் பெரும்பான்மையினராகவும், பெண்கள் சிறுபான்மையினராகவும் இருப்பதால் ஆண்களில் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்கிறார் அவர்.

அரசியலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?

அரசியல் பின்னணி கொண்ட பெண்களே இந்திய அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு உதாரணமாக இந்திரா காந்தி, வசுந்தரா ராஜே போன்றவர்களை சொல்லலாம்.

பெண்கள் அரசியலில் வருவதற்கு தயங்குவதற்கு, பணம், வன்முறை உட்பட பல காரணங்களைக் கூறலாம் என்கிறார் ஸ்மிதா.

"அரசியல் ஒரு கடினமான தொழில், நிலையற்ற இந்தத் தொழிலில், சம்பாதிக்கவேண்டும் என்ற திடமான முடிவும், கூடுதல் விருப்பமும் இல்லாவிட்டால், இதில் ஒருவர் ஈடுபட முடியாது. அப்படியென்றால், அரசியல் குடும்பத்தை சாராத மாயாவதி மற்றும் ஜெயலலிதா எப்படி வெற்றி பெற்றார்கள் என்ற கேள்வி எழுகிறதா?" என்று எதிர்கேள்வி கேட்கிறார் ஸ்மிதா.

"ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால், மாயாவதிக்கு கன்ஷிராம் என அவர்களின் அரசியல் ஆசான்களே இந்த இரு பெண்களின் அரசியல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள்" என்று சுட்டிக்காட்டுகிறார் ஸ்மிதா சிங்.

அரசியலில் மட்டுமல்ல, பெண்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அவர்கள் இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும் என்று கூறும் அதிதி, "ஆண்களுக்கு தாங்கள் சமம் என்பதை நிரூபிப்பதற்காக பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு அரசியல் மட்டும் விதிவிலக்கல்ல" என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

சமீபத்திய பெண்கள் முதலமைச்சர்களின் வரலாறு

மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்ற மமதா பானர்ஜியின் இரண்டாவது பதவிக்காலம் இது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் மமதா பானர்ஜி. அரசியலில் தனது சொந்த முயற்சியிலேயே உருவாகி நிலைத்து நிற்கும் பெண் அரசியல்வாதி என்ற பெருமையும் அவருக்கே உரியது. மேற்கு வங்க மாநிலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியை பலவீனப்படுத்திய மமதா பானர்ஜியின் கருத்துகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல.

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சரான வசுந்தரா ராஜே, இரண்டாவது முறையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார். ஆனால் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரச பரம்பரையை சேர்ந்த வசுந்தரா ராஜே, பலமான அரசியல் பின்னணியையும் கொண்டவர். முரட்டுத்தனமான செயல்பாடுகளுக்காக பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டவர் வசுந்தரா ராஜே.

தனது தந்தை முஃப்தி முகமது சையீதின் மறைவுக்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஜம்மு காஷ்மீர் மாநில முதல் முதலமைச்சரானார் மெஹபூபா முஃப்தி. ஆனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதால், பதவியேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே பதவி விலக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு மறைந்தார். அவருடைய மறைவுக்கு பிறகு, தமிழக அரசியலில் அவரது இடத்தை வேறு எந்த பெண் அரசியல்வாதியாலும் நிரப்ப முடியவில்லை.

குஜராத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆனந்திபென் படேல். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமராக பதவியேற்பதற்காக குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோதி பதவி விலகினார். அவருக்கு பதிலாக பதவியேற்ற ஆனந்திபென் படேல் இரண்டு ஆண்டுகளுக்கு பின் பதவியை ராஜினாமா செய்தார். ஆனந்திபென் படேலுக்கு பிறகு முதலமைச்சராக விஜய் ரூபாணி பதவியேற்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார் மாயாவதி.

தலித் தலைவரான மாயாவதி மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை சீர்படுத்தியதற்காக பரவலாக அறியப்பட்டார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகள் அவரது புகழை குறைத்துவிட்டன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: