விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவாரா? லண்டன் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

விஜய் மல்லையா

பட மூலாதாரம், Getty Images

9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு சட்டரீதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவிருக்கிறது.

முன்னதாக, இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, நீதிமன்ற விசாரணைக்கு ஏதுவாக, மல்லையாவை லண்டன் பெருநகர போலீசார் கைது செய்தனர்.

விஜய் மல்லையா

பட மூலாதாரம், AFP

பிறகு, சுமார் 8 லட்சம் டாலர்கள் ஜாமீன் தொகையாக கட்ட வேண்டும்; தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின்படி, கைது செய்யப்பட்ட அன்றே லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கியது.

தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல்ரீதியானவை என்று விஜய் மல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அண்மையில் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் அவர் தெரிவித்திருக்கிறார். "நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. கடன் பெற்றது கிங் ஃபிஷர் விமான நிறுவனம்தான். உண்மையில் தொழிலில் நட்டம் ஏற்பட்டது எதிர்பாராமல் நிகழ்ந்தது. கடனுக்கு உத்தரவாதம் வழங்குவது என்பதற்காக, நான் ஏமாற்றினேன் என்று கூறக்கூடாது."

"நான் மூல கடன்தொகையை திருப்பிக் கொடுக்கிறேன் என்ற முன்மொழிவை கொடுத்திருக்கிறேன். அதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மல்லையா அந்த டிவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.

விஜய் மல்லையா

பட மூலாதாரம், Getty Images

ஓராண்டு காலமாக தொடரும் விசாரணை

கிளைர் மாண்ட்கோமெரி என்ற வழக்கறிஞரின் தலைமையில் மல்லையாவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடனை திருப்பிக் கொடுக்க முடியாததற்கு காரணம் தொழிலில் ஏற்பட்ட நட்டம்தான். இது, நிறுவன உரிமையாளரின் 'நேர்மையற்ற மற்றும் மோசடி நடவடிக்கை' அல்ல என்று வாதிட்டனர்.

2016ஆம் ஆண்டிலேயே 80% கடந்தொகையை திருப்பிக் கொடுப்பதாக மல்லையா ஒப்புக்கொண்டதாகவும், ஆனால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பிற வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் நீதிமன்றத்தில் மல்லையா தரப்பு தெரிவித்தது.

மல்லையாவுக்கு கடனை திருப்பித்தரும் எண்ணமோ இல்லை என்றும், ஏனெனில் அவரது கிங்ஃபிஷர் விமான நிறுவனம் கடனில் மூழ்கிவிட்டது என்று வங்கிகள் தெரிவித்தன.

"கடன் கொடுத்த வங்கிகள், தங்களுடைய வழிகாட்டு நெறிமுறைகளையே மீறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது" என்று வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆர்பத்னாட்ஹட் தெரிவித்தார்.

விஜய் மல்லையா

பட மூலாதாரம், AFP

சிறையின் காணொளிப் பதிவை கோரிய நீதிபதி

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் அங்கு அவர் தங்கவைக்கப்படும் சிறைச்சாலையின் தரம் பற்றியும் மல்லையா தரப்பு கேள்வி எழுப்பியது. சிறையின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், மனித உரிமைகளின் அடிப்படையில் இந்த விஷயத்தில் அணுகவேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

எனவே இந்தியாவிடம் மல்லையா ஒப்படைக்கப்பட்டால், அவர் சிறை வைக்கப்படும் சிறைச்சாலையின் காணொளிப் பதிவுகள் வேண்டும் என்று நீதிபதி கோரினார்.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், அங்கு அவர் சிறை வைக்கப்படவுள்ள சிறையின் காணொளிப் பதிவை காண்பிக்க வேண்டுமென்று, வழக்கு விசாரணையில் ஆஜரான இந்திய அதிகாரிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் 12ஆம் எண் கொட்டடியில் அவர் அடைக்கப்படுவார். அதைத் தவிர வேறு தகவல்கள் தரமுடியாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

பிறகு செப்டம்பர் 12ஆம் தேதியன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, இந்தியாவில் இருந்து லண்டனுக்கு கிளம்புவதற்கு முன்னர் இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தாக கூறியது இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறுத்தார்.

"இன்றைய சட்ட நடைமுறைகள் சரியாக இருப்பதாக நீதிபதி கருதினால், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் சட்டச் சிக்கல் எதுவும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கலாம். தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக வந்தால், பிறகு விவகாரம் வெளியுறவு அமைச்சகத்து அனுப்பப்படும். அதன்பிறகு அரசுதான் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றி முடிவு எடுக்கும்" என்று பிரிட்டனைச் சேர்ந்த சட்ட நிபுணர் பாவ்னி ரெட்டி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

அதற்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால், நீதிமன்ற தீர்ப்பை மல்லையா ஏற்றுக் கொள்வதாகக் கருதப்பட்டு அவர் 28 நாட்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்.

விஜய் மல்லையா

பட மூலாதாரம், AFP

கிங்ஃபிஷர் பீர் உற்பத்தி ஆலையை நடத்திவந்த மல்லையா, பிறகு கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தை தொடங்கினார். போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் அணியின் இணை நிறுவனராகவும் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் விஜய் மல்லையா.

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தனது இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 62 வயதாகும் விஜய் மல்லையா பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :