HIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி

HIV

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அனகா பதக்
    • பதவி, பிபிசி மராத்தி

"நான் 15 ஆண்டுகளாக தனியாக போராடி வருகிறேன். HIVக்கு எதிராக போராடி வருகிறேன். எனக்கு HIV இருக்கிறது என்ற உண்மையை மறைக்க போராடுகிறேன். இதையெல்லாம் விட, நான் என்னுடனே போராடி வருகிறேன்.

நான் இவ்வளவு ஆண்டுகளாக எதிலும் வெற்றிப் பெற்றதில்லை. எனக்கு HIV இருக்கிறது என்பதினால் என்னை பணிநீக்கம் செய்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் நான் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் ரஜனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

என்னுடன் தொலைப்பேசியில் பேசும்போது அவரது மகிழ்ச்சி வெளிப்பட்டது. பெரும் மூச்சிற்கு பிறகு, தன் கதையை அவர் சொல்லத் தொடங்கினார். அவரை யாரும் பாராட்டியது எல்லாம் இல்லை. அவரை முறைத்து, ஏதோ ஒரு குப்பையை போலத்தான் அவரை பார்ப்பார்கள்.

புனேவில் வாழ்ந்து வரும் 35 வயதான ரஜனி, தன் பணியை திரும்பப் பெற மூன்று ஆண்டுகளாக போராடி வந்தார். சமீபத்தில் புனே தொழிலாளர் நீதிமன்றம் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. அவரது பணிநீக்க காலத்துக்குமான ஊதியத்தையும் அந்நிறுவனம் வழங்க வேண்டும்.

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த ரஜனி, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு 22 வயது இருந்தபோது, அவரது கணவர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

"2004ஆம் ஆண்டில்தான் என் கணவருக்கு HIV தொற்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் 2006ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதற்கு பிறகு என் கணவரின் பெற்றோர் என்னை வீட்டை விட்டு துறத்தி விட்டார்கள்."

தன் பெற்றோராலும் தனக்கு ஆதரவு தர இயலவில்லை என்பதை நினைவு கூர்கிறார் ரஜனி. "அவர்களின் நிதி நிலைமை சரியில்லை. என்னால் அவர்களுக்கு பாரமாக இருக்க முடியாது." என்கிறார் அவர்.

அதனால் சிறு சிறு வேலைகளை ரஜனி பார்க்க ஆரம்பித்தார். "நான் ஒரு வேலைக்காக 15 நாட்கள் புனே வந்தேன். சமூக அழுத்தத்தில் இருந்து விடுபட்ட மாதிரி உணர்ந்தேன். இங்கு ஒரு புது வாழ்க்கை தொடங்கலாம் என்று நினைத்தேன். என் கிராமத்தில் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். எனக்கும் HIV இருந்தது. ஆனால், எனக்கு அது அப்போது தெரியவில்லை. ஆனால், புனே வந்த பிறகு நான் நன்றாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உணர்ந்தேன். அதனால், என்னை புனேவில் தங்கி வேலை பார்க்குமாறு என் தாய் என்னிடம் சொன்னார்" என்கிறார் ரஜனி.

விரைவில் ரஜனிக்கு புனேவில் வேலையும் கிடைத்தது. அப்போது மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்த பிறகே HIV இருப்பது அவருக்கு தெரிய வந்தது. "மீண்டும் என் வாழ்க்கை மோசமடைந்தது. உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உடைந்து போனேன். எங்கு போவதென்று தெரியவில்லை. புனேவில் புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்ற கனவும் சிதறிப்போனது" என்று அவர் கூறுகிறார்.

அவரது குடும்பமும் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் தனியே நின்றார்.

HIV

பட மூலாதாரம், Getty Images

"எனக்கு யாருமே இல்லை என்பதை உணர்ந்தேன். நான் இறந்தால் கண்ணீர் சிந்தக்கூட யாரும் இல்லை. நான்தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என் உணவுமுறையில் கவனம் செலுத்த தொடங்கி, சிகிச்சை எடுக்க பதிவு செய்தேன்."

விரைவில் மருந்து கம்பெனி ஒன்றில் ரஜனிக்கு வேலை கிடைத்தது. நன்கு பணியாற்றியதால் வேலை நிரந்தரமாக்கப்பட்டது. 10 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். அவருக்கு HIV இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவரை வேலையை விட்டு செல்ல நிறுவனம் தன்னை நிர்பந்தப்படுத்தியதாக அவர் தெரிவிக்கிறார்.

என்ன நடந்தது?

தனக்கு உடம்பு முடியாமல் போனதால், சிறிது காலம் மருத்துவமனையில் தாம் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். மீண்டும் பணிக்கு திரும்பியபோது, அங்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்துள்ளார்.

"மருத்துவமனை செலவுகளை சமர்பித்தால் அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்று கேள்விப்பட்டேன். எனக்கு எப்போதும் நிதி பற்றாக்குறை இருந்ததினால், இது எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு HIV இருப்பது தெரிய வந்த 30 நிமிடங்களில் என்னை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள்" என்று ரஜனி கூறுகிறார்.

ஆனால், ஏன் அவரை வேலையை விட்டு போக சொன்னார்கள்? "மருத்துவ கம்பெனி என்பதால், அந்நிறுவனம் தயாரிக்கும் மருந்துப் பொருட்களில் ஏதேனும் பரவி விடும் அபாயம் இருப்பதினால் நான் வேலையை விட்டு போக வேண்டும் என்றார்கள். அப்படி ஏதும் நடக்காது என்று நான் கூறினேன். நான் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்று நான் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று நான் மீண்டும் மீண்டும் கெஞ்சினேன். எனக்கு இந்த வேலை வேண்டும் என்று எவ்வளவோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை" என்பதை அவர் நினைவு கூற்கிறார்.

HIV

பட மூலாதாரம், Getty Images

மற்றவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியும், அதனை ரஜனி ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு அவரது சகோதரரின் உதவியுடன், ஒரு ஊழியருக்கு HIV உள்ளது என்ற காரணத்திற்காக அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டார். புனே தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

"ஒவ்வொரு முறையும் ஏதேனும் எனக்கு ஒரு நல்லது நடக்கும்போது, எனக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், நான் இறுதிவரை போராட முயற்சித்தேன். இவை அனைத்தையும் விட்டு ஓடிவிட வேண்டும் என்று பலமுறை நினைத்தது உண்டு. எனினும், நான் விட்டுக் கொடுக்கவில்லை" என்கிறார் அவர்.

'என் முகத்தை மறைத்திருக்கக் கூடாது…'

டிசமபர் 3ஆம் தேதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "HIV இருக்கிறது என்பதற்காக ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது" என்று அந்த தீர்ப்பு வந்ததில் இருந்து, ஊடகத்தினரிடம் இருந்து அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவரது தைரியம் பாராட்டப்படுகிறது. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு வேலை விட்டு துறத்திய அதே நிறுவனத்திற்கு போக நினைக்கிறாரா?

"ஆம், எனக்கு அங்கு போக வேண்டும். இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு HIV இருக்கிறது என்பதை மறைக்க முயற்சித்து வந்தேன். ஆனால், இப்போது அனைவருக்கும் தெரியும். குறைந்தது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். அதனால், இனி எதையும் மறைக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. இதையெல்லாம் விட, எனக்கு இனி எதைப் பற்றியும் கவலை இல்லை. தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும்போது என் முகத்தை மறைத்திருந்தேன். அதை திரும்பி நினைத்துப் பார்த்தால், என் முகத்தை காண்பித்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று ரஜனி தெரிவத்தார்.

HIV இருக்கும் பெண்களுக்கு பாதிப்பு அதிகம்

ஆண்களுக்கு HIV இருந்தால் ஏற்படும் பிரச்சனையை விட, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிகம் என்று ரஜனி நம்புகிறார்.

"நான் ஒவ்வொரு மாதமும் மருந்து வாங்க போகும்போதும், என்னை கீழ் தரமாகவே பார்ப்பார்கள். பெரும்பாலான பெண்களுக்கு கணவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். கணவர் இழந்தால் வீட்டை விட்டு துறத்தப்படுவார்கள். பெற்றோரும் ஆதரவு தர மாட்டார்கள். இவைதான் எனக்கும் நடந்தது. ஆனால், இது எனக்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: