You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரகதீஸ்வரர் கோயிலில் 'வாழும் கலை' நிகழ்ச்சிக்கு தடை: அனுமதி அளித்தது யார்?
தஞ்சாவூரில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி?
1010ஆம் ஆண்டு சோழப் பேரரசனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தக் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் அமைப்பான வாழும் கலை அமைப்பு டிசம்பர் 7, 8ம் தேதிகளில் ‘Unveiling Infinity’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதாகத் திட்டமிட்டிருந்தது.
இதற்காக கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் பிரதான கோவிலுக்கும் இடையிலான திறந்த வெளியில் 3000க்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியை டிசம்பர் 7ஆம் தேதியன்று மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையிலும் டிசம்பர் 8ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த என். வெங்கட் என்பவர் இந்த நிழச்சியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், தஞ்சைப் பெரிய கோயில் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, அங்கே தனியார் நிகழ்சிக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டுமென்றும் கோரியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ‘ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு‘ யமுனை ஆற்றின் குறுக்காக நடத்திய நிகழ்ச்சிக்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் 6 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென என். வெங்கட் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாழும் கலை அமைப்பின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கு வெறும் தியான நிகழ்ச்சியே நடத்தப்படவிருப்பதாகத் தெரிவித்தார். வெறும் தியான நிகழச்சியென்றால் அதனை ஒரு மண்டபத்தில் நடத்தலாமே என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வாழும் கலை அமைப்பின் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால், இந்து சமய அறநிலையத் துறையின் வழக்குரைஞர், தனியார் நடன நிகழ்ச்சி அங்கு நடத்தப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
வேண்டுமானால், பந்தலை அகற்றிவிட்டு நிகழ்ச்சியை நடத்துகிறோம் என வாழும் கலை அமைப்பின் தரப்பில் சொல்லப்பட்டபோது, பந்தலை அகற்றிவிட்டால் நிகழ்ச்சியை எங்கே நடத்துவீர்கள் என நீதிபதிகள் கேட்டனர்.
கோயிலின் ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கூடாரங்களை ஒட்டி நடத்துகிறோம் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்தது.
நீதிபதிகள் அதனை ஏற்கவில்லை. கோயில்களில் ஏற்படும் தீ விபத்துகளைச் சுட்டிக்காட்டி உடனடியாக பந்தலையும் கூடாரங்களையும் அகற்ற உத்தரவிட்டனர். நிகழ்ச்சிக்கும் இடைக்காலத் தடை விதித்தனர்.
நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருப்பதையும் பந்தல், கூடாரங்கள் அகற்றப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறை கண்காணிப்பாளரும் உறுதிசெய்து திங்கட்கிழமையன்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து பெரிய கோயிலில் நடப்பதாக இருந்த நிகழ்ச்சியை தஞ்சாவூரில் உள்ள காவிரி என்ற மண்டபத்தில் நடத்துவதாக 'ஆர்ட் ஆஃப் லிவிங்' தெரிவித்துள்ளது.
அனுமதி அளித்தது யார்?
இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இவ்வளவு பெரிய நிகழ்வை நடத்த அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் இந்த கோயிலின் துணை ஆணையராக உள்ள பரணீதரனிடம் கேட்டபோது, "இதற்கான அனுமதியை மத்திய தொல்லியல் துறைதான் வழங்கியது. அவர்கள் அனுமதியின்றி எதுவும் நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கேட்டதாலேயே நிகழ்ச்சிக்கு தொல்லியல் துறை அனுமதி அளித்ததாகத் தெரிகிறது.
'பஜனை நிகழ்ச்சி' என்று குறிப்பிட்டு அனுமதி கேட்கப்பட்டதாகவும் வழக்கமாக அனுமதி தருவதைப் போல இந்த நிகழ்வுக்கும் அனுமதி தந்ததாகவும் தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியானால், இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் சார்பில்தான் அனுமதி கோரப்பட்டதா? "ஆமாம். நாங்கள்தான் அனுமதி கோரினோம். இதுபோல பல நிகழ்வுகளுக்கு அனுமதி கோரியிருக்கிறோம். எல்லாவற்றுக்குமா மத்திய தொல்லியல் துறையில் அனுமதி அளிக்கிறார்கள்? சில நிகழ்ச்சிகளுக்கு மறுக்கிறார்களே? அதேபோல இந்த நிகழ்ச்சிக்கும் மறுத்திருக்க வேண்டியதுதானே?" என்கிறார் பரணிதரன்.
இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறையின் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்