You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தியில் திரண்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் - விஸ்வரூபம் எடுக்கும் ராமர் கோயில் விவகாரம்
'ஜெய் ஸ்ரீராம்' மற்றும் 'ராமர் கோயில் கட்டப்படும் ' ஆகிய முழக்கங்களால் அயோத்தி நகரம் இன்று நிரம்பி வழிகிறது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து துறவிகள் மற்றும் வலதுசாரி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள் திரண்டுள்ளனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று, கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் சுமார் இரண்டு வாரங்களே உள்ளன. இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ள மாநாடு இன்று அயோத்தியில் நடக்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992 டிசம்பர் 6ஆம் தேதி கர சேவகர்கள் கூடிய பிறகு, அங்கு அதிக அளவில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூடும் நிகழ்வாக 'தர்ம சபா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.
இன்று காலை 7 மணி முதலே இந்து அமைப்பினர் அங்கு கூடத் தொடங்கிவிட்டதாக அயோத்தியில் இருந்து பிபிசி செய்தியாளர் நிரஞ்சன் கூறுகிறார்.
அயோத்தி நகர தெருக்களும், அயோத்தியை நோக்கிச் செல்லும் சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் மிகுந்த கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றன.
அயோத்தியில் உள்ள உள்ளூர் செய்தியாளர்கள் அளித்த தகவல்களின்படி, விஷ்வ இந்து பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம்.
இதனிடையே, நரேந்திர மோதி அரசால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், பாரதிய ஜனதா கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என பாஜகவின் கூட்டணிக் காட்சிகளில் ஒன்றான சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.
"தேர்தல் வரும் சமயங்களில் ராமர்கோயில் கட்டுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால், அதன்பின் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆண்டுகள் கடக்கின்றன. தலைமுறைகள் மாறுகின்றன. ராமர் கோயில் மட்டும் கட்டப்படவில்லை, " என்று அயோத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய தாக்ரே, ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டுவந்தால், சிவசேனை அதை ஆதரிக்கும் என்று கூறினார்.
அயோத்தி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுவர்களில் ராமர் போருக்கு செல்வது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அயோத்தியில் உள்ள முஸ்லிம்களுக்கு இடையே இந்தக் கூட்டத்தினால் ஒரு விதமான அச்சம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
"பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், கோயில் கட்ட வேண்டும் என்று கூடிய மிகப் பெரிய கூட்டம் இதுதான். அவர்கள் பொதுமக்களையும் அவர்களது உணர்ச்சிகளையும் தூண்டுகின்றனர்," என முஸ்லிம் சமூக தலைவர் அஹமத் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோதி இந்த விவகாரத்தை தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :