You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலையை தெற்கின் அயோத்தியாக மாற்ற பாஜக-வால் முடியுமா?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி
மிகச்சிறிய கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனும் விவகாரத்தை முன்வைத்து 1990களின் மத்தியில் ஆளும்கட்சியாக உருவெடுத்தது. இது வரை ராமர் கோயில் கட்டப்படவில்லை என்பது வேறு விஷயம்.
இன்னும் ஒரு வட இந்தியக் கட்சியாக மட்டுமே பார்க்கப்படும் பாரதிய ஜனதா கட்சி, கேரளாவில் உண்டாகியுள்ள சபரிமலை விவகாரத்தை தென்னிந்தியாவில் வளர்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறது.
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கேரள மாநிலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பாஜக-வுக்கு சங்கடம் தந்துவந்தது.
இரண்டு மாதங்களில் நிலைமை மாறியுள்ளது. பாஜக கேரளாவில் வளரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாதவர்கள் வெகு சிலரே. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழையலாம் என நீதிமன்றம் அளித்த அனுமதி, பெண் உரிமைக்கு எதிராக பாரம்பரியத்தை முன்னிறுத்தி இந்துக்களை ஒன்று திரட்டும் வாய்ப்பாக பாஜகவுக்கு அமைந்தது.
நவம்பர் 17 அன்று, 64 நாட்கள் நடக்கும் மண்டல மகர விளக்கு வழிபாட்டுக்காக ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது முதலே ஆளும் இடதுசாரி அரசுடன் பாஜக மோதலைக் கடைபிடித்து வருகிறது.
பாஜகவைச் சேர்ந்த ஒருவரும், வேறு ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவரும் காவல்துறையின் புதிய விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டது போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தங்கள் அமைப்பினர் கைது செய்யப்பட்டாலும், மிகச் சிறு நகரங்களில் நடக்கும் போராட்டங்களில்கூட இந்து அமைப்பினர் 200-300 பேர் கலந்து கொள்கின்றனர்.
"சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்புத் தெரிவித்து நடக்கும் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கே தள்ளாடும் நிலை உண்டாகியுள்ளது," என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஜோ ஸ்கேரியா.
"பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியாகவும், அதைவிட முக்கியமாக சமூக ரீதியாகவும் வளர்ந்து வருகிறது. இடதுசாரிகள், வலதுசாரிகள் என இருதரப்பிலுமே பழமைவாதம் நிலவி வந்தது. இதுவரை இடதுசாரிக் கட்சிகள் அரசியல் ரீதியாக முற்போக்காகவும் சமூக ரீதியாக பிற்போக்காகவும் இருந்தனர்," என்கிறார் வரலாற்று ஆய்வாளரும் பெண்ணியவாதியுமான ஜே.தேவிகா.
"1957இல் இந்தியாவின் முதல் கம்யூனிச அரசுக்கு தலைமை வகித்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தான். ஆனால் அவர் எப்போதுமே தன் மனைவி கோயில்களுக்குச் சென்றபோது உடன் சென்றவர்," என்கிறார் மூத்த அரசியல் விமர்சகர் பி.ஆர்.பி.பாஸ்கர்.
இந்த நிலை இன்னும் மாறவில்லை. இப்போதைய நடப்புகள் இடதுசாரிக் கட்சிகளுக்கு விளங்காமல் இல்லை. முன்னரே பெண்ணியவாதிகள் இதுகுறித்து இடதுசாரிக் கட்சிகளிடம் எடுத்துரைத்தாலும், அக்கட்சிகள் அவர்களைப் பொருட்படுத்தவில்லை என்கிறார் தேவிகா.
"சமூகப் பழமைவாதத்தை வலதுசாரிகள் ஒருங்கிணைக்கின்றனர். இடதுசாரிகள் அதைச் செய்வதைவிட வலதுசாரிகளுக்கு அது மிகவும் நன்றாகக் பொருந்துகிறது. இதை எப்படி சமாளிப்பது என்பது இடதுசாரிகளுக்குப் புரியவில்லை, " என்கிறார் தேவிகா.
"பெண்கள் நுழைவதை எதிர்க்கும் அமைப்புகளுடன் அரசு பேசியிருக்கலாம். குறைந்தபட்சம் பாரதிய ஜனதாவில் இருந்து விலகி வந்த தலித் அமைப்பான கேரள புலையர் மகாசபையிடமாவது அவர்கள் பேசியிருக்கலாம். இப்போது பாஜகவை எதிர்கொள்வதற்கான வழிமுறை அவர்களுக்குத் தெரியவில்லை, " என்கிறார் ஆசியாநெட் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதைத் தவிர இடதுசாரி அரசுக்கும் வேறு வழியில்லை என்கின்றனர் சட்ட வல்லுர்கள் .
சபரிமலையில் பெண்கள் நுழைவதை ஆதரித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததால், கேரள அரசு தரப்பிலிருந்து மறு ஆய்வு மனுவோ, தீர்ப்பை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் கோரும் மனுவோ தாக்கல் செய்யப்படாது என கேரளா முதமைச்சர் பினராயி விஜயன் பலமுறை கூறியுள்ளார்.
சபரிமலை விவகாரத்தால் பாஜக கேரளாவில் வலுப்பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆதரவு வாக்குகளாக மாறுமா?
"பாஜக நினைக்கும் அளவுக்கு அவர்களால் இங்கு எதையும் செய்ய முடியும் என நான் நம்பவில்லை. திரிபுராவில் செய்ததைப் போல இங்கும் எதையாவது செய்ய முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், போராட்டங்கள் நடத்தப்படும் விவகாரங்களும், வாக்களிப்பதை முடிவு செய்யும் முறையும் இங்கு வெவ்வேறாகவே இருந்துள்ளன," என்கிறார் பாஸ்கர்.
2011இல் 8.98%ஆக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம் 2016இல் 15.20%ஆக உயர்ந்துள்ளது. பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் வென்றுள்ளது.
கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகள் சிறிய அளவிலான சமூக ஆதரவையே பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் நாயர் சமூகத்தினரின் ஆதரவு உள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவற்றுக்கு இஸ்லாமியர்கள் ஆதரவு உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 80% உறுப்பினர்கள் இந்துக்கள். மிகப்பெரிய பிற்படுத்தப்பட்டோர் சமூகமான ஈழவர் சமூகத்தினரும் இதில் அடக்கம். கேரளாவின் மக்கள்தொகையில் 55% பேர் இந்துக்கள். சிறுபான்மை மதத்தினரையும் கவர மார்க்சிஸ்ட் முயன்று வருகிறது.
இப்போது அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக இழப்பு என்கிறார் ராதாகிருஷ்ணன்.
"மண்டல பூசையின் தொடக்க நாட்களிலேயே பாஜக வேலை நிறுத்தம், கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. அது எங்களுக்கும் உதவியாக இருந்தது. ஏனெனில், அவர்களுக்கு உள்நோக்கம் உள்ளது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க அது எங்களுக்கு வாய்ப்பாக இருந்தது. அதனால் சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டனர்," என பிபிசியிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.
"சமீபத்திய வெள்ளத்தின்போது கேரள மக்கள் சாதி-மத உணர்வுகளை மீறி ஒருவருக்கொருவர் உதவினர். கேரளாவில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்கள் அப்போது நினைவுகூரப்பட்டன. ஆனால், அதைத் தொடர்ந்தே சபரிமலை விவகாரமும் வந்துள்ளது. கேரளாவில் பெருமைப் பட்டுக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் பின் ஆழமான மத உணர்வு உள்ளது, " என்கிறார் பாஸ்கர்.
பிபிசியிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர், "பக்தர்களின் நலனை முன்னெடுக்கும் கட்சியாக பாஜகவே பார்க்கப்படுகிறது. எங்களுக்கு மாநிலம் முழுதும் ஆதரவு உள்ளது. நாங்கள் புதிய கட்சி உறுப்பினர்களைச் சேர்க்கக்கூடத் தொடங்கவில்லை. ஆனால், பிறவற்றைப் பற்றி தேர்தல்தான் சொல்லும்," என்று கூறினார்.
இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களே உள்ளன. அதுவரை இதே ஆதரவை பாஜக தக்கவைத்துக் கொள்ளுமா? இந்த நிலை இன்னும் மாறவில்லை. இப்போதைய நடப்புகள் இடதுசாரிக் கட்சிகளுக்கு விளங்காமல் இல்லை. முன்னரே பெண்ணியவாதிகள் இதுகுறித்து இடதுசாரிக் கட்சிகளிடம் எடுத்துரைத்தாலும், அக்கட்சிகள் அவர்களைப் பொருட்படுத்தவில்லை என்கிறார் தேவிகா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :