You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யேமன் போர்: முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்வீடனில் தொடக்கம்
யேமனில் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற நோக்கிலான அமைதிப் பேச்சுவார்த்தை, யேமன் அரசுப் பிரதிநிதிகள் மற்றும் ஹூதி கிளர்ச்சிக் குழு இடையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தொடங்கியுள்ளது.
இதுவொரு முக்கிய திருப்புமுனை என்று ஐநா சிறப்பு தூதர் மார்ட்டின் கிரிஃபித்திஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாவது ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைய செய்யும் என்று ஐநாவின் சிறப்பு தூதர் கூறியுள்ளார்.
உலகை உலுக்கிய ஏமன் சிறுவன்
ஒரு வாரம் நீடிக்கின்ற இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு ஏமன் அரசுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஐநா அணியினர் மிக நெருக்கமாக பணிபுரிந்துள்ளனர்.
சமீப காலத்தில் உலகில் மிக மோசமான மனிதநேய நெருக்கடி உருவாக இந்த ஏமன் போர் காரணமாகியுள்ளது.
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்லியன் கணக்கானோர் பசி, பட்டினியால் துன்புற வேண்டிய நிலைமை யேமனில் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் கடந்த 2016ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இப்போது தொடங்கியுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தைகளில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கலந்து கொள்ளாமல் போனதால், கடந்த செப்டம்பர் மாதம் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சி தோல்வியடைந்தது.
என்ன நடக்கும்?
தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
ஆயிரகணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ள செங்கடலில் இருக்கின்ற ஹுடைடா துறைமுக நகரில் ஏற்படும் முழுமையான போரை தடுக்கும் முக்கிய நோக்கம் இந்த அமர்வில் உள்ளது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
யேமனில் ஏற்படும் எதிர்கால அரசியல் தீர்வுக்கு பேச்சுவார்த்தை திட்டத்தை ஐக்கிய நாடுகள் அவை கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது.
வருகின்ற நாட்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய தருணத்தை கொண்டிருப்போம் என்று ஸ்டாக்ஹோமில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கிரிஃபித்திஸ் தெரிவித்திருக்கிறார்.
இருதரப்புக்கும் இடையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாவது நம்பகத்தன்மையை உருவாக்கும் நடவடிக்கையாக இருக்கும் என்றும் ஐநா தூதர் தெரிவித்தார்.
சரியான எண்ணிக்கையை குறிப்பிடாத அவர், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த நடவடிக்கையால் பயன்பெறும் என்று கூறியுள்ளார்.
முக்கிய அம்சங்கள்
இந்த அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், ஹுடேடாவில் இருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி, கட்டுப்பாட்டை அரசிடம் வழங்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவிட்டு ஏமன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளையில், இந்த பேச்சுவார்த்தைகள் சானாவிலுள்ள விமானநிலையத்தை எல்லா பயணியர் விமான போக்குவரத்துக்கும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால், இந்த விமான நிலையத்திற்கு வருகின்ற ஐக்கிய நாடுகளின் விமானங்களை நிறுத்தப்போவதாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். போர் காரணமாக இந்த விமான நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானாவையும், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அரசு நாட்டின் தெற்கில் அமைந்துள்ள ஏடன் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஏமன் மோதல்: யார், யாரோடு, ஏன் மோதுகிறார்கள்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்