You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏமன் போரில் சௌதிக்கு வழங்கும் ஆதரவை திரும்ப பெற அமெரிக்க செனட் நடவடிக்கை
ஏமனில், சௌதி அரேபியாவின் தலைமையில் நடைபெற்று வருகின்ற போருக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவதற்கான முயற்சி ஒன்றை அமெரிக்க செனட் அவை முன்னெடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பலத்த அடியாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது,
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை பற்றி டிரம்ப் தெரிவித்த கருத்துகளை பல அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் விரும்பவில்லை.
ஏமனின் நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்பதால், இந்த மசோதாவுக்கு செனட் அவை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என்று வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோவும், பாதுகாப்புத்துறை செயலாளர் ஜிம் மேத்திஸும் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், இருகட்சிகளும் கொண்டு வரும் முன்மொழிவாக இதனை எடுத்து செல்ல செனட் அவை உறுப்பினர்கள் 63 - 37 என்ற அளவில் வாக்களித்து ஆதரவு அளித்துள்ளனர்.
செனட் அவை உறுப்பினர்களுக்கு டிரம்பிடம் வருத்தம் ஏன்?
கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி துருக்கியின் இஸ்தான்புல்லில் இருக்கும் சௌதி துணைத் தூதரகத்திற்கு சென்ற அமெரிக்க வாழ் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டார்.
அதன் பின்னர், சௌதி அரேபியா மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்த கொலையை செய்ய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆணையிட்டுள்ளார் என்று அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், சிஐஏ உறுதியான முடிவுக்கு வரவில்லை என்று கூறி இந்த கருத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
சௌதி அரேபியா இன்றியமையாத நட்பு நாடு என்று தெரிவித்திருக்கும் டிரம்ப், சௌதி அரசின் தலைமைக்கு எதிராக தடைகள் விதிப்பதற்கு எழுந்த கோரிக்கைகளை ஏற்கவில்லை.
சௌதி அரேபியாவோடு கொண்டிருக்கும் உறவுகள் பற்றிய ரகசிய விசாரணை அமர்வில் சிஐஏ இயக்குநர் ஜினா ஹாஸ்பல் பங்கேற்கவில்லை என்பதால் செனட் அவை உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர்.
கஷோக்ஜியின் கொலை தொடர்பான ஆடியோ பதிவு என்று என துருக்கி கூறுவதை ஹாஸ்பல் கேட்டுள்ளார். இந்த வழக்கின் சான்றுகளை அவர் ஆய்வு செய்துள்ளார்.
ஹாஸ்பல் பங்கேற்காதது பற்றி கருத்து தெரிவித்த செனட் அவை உறுப்பினர் ஒருவர் "இது மூடிமறைக்கும் செயல்" என்று கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏமனில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கான மனிதாபிமான பேரழிவு ஆகியவற்றை உருவாக்கியுள்ள சௌதி அரேபியாவுக்கு எதிரான சமிக்ஞையை அனுப்ப வேண்டிய நேரமிது என்று ஜனநாயக கட்சியின் செனட் அவை உறுப்பினர் பாப் மெனெண்டெஸ் கூறியுள்ளார்.
செனட் அவையின் வெளியுறவு குழுவின் தலைவரான குடியரசு கட்சியை சேர்ந்த செனட் அவை உறுப்பினர் பாப் கோர்கெர், "இங்கு சிக்கல் உள்ளது. சௌதி அரேபியா நமது நட்பு நாடு. ஓரளவு முக்கியமான நாடு. ஆனால், அந்நாட்டு பட்டத்து இளவரசரோ வரம்பு மீறுகிறவராக இருக்கிறார்" என்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே போன்ற தொரு தீர்மானம் எழுந்தபோதும், நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது என்று வாஷிங்டனிலுள்ள பிபிசியின் செய்தியாளர் பார்பரா பிளெட் உஷர் கூறுகிறார்.
ஆனால், இப்போது நிலைமை மாறியுள்ளது. தாக்குதல்களில் அதிக குடிமக்கள் உயிரிழப்பதால் இந்தப் போரை சௌதி அரேபியா தலைமை தாங்கி வழி நடத்துவதில் அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் அதிக கவலை அடைந்துள்ளனர் என்று இந்த செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த முன்னெடுப்பு அடுத்த வாரத்தில் சௌதிக்கான அமெரிக்க ஆதரவு குறித்த மேலதிக விவாதத்துக்கு வழி வகுக்கும். இந்த முன்னெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்த பல செனட்டர்கள் உண்மையில், ஏமனில் கூட்டணி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு இந்த முன்னெடுப்பு என்பது ஜமால் கஷோக்ஜி பிரச்சனையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கையாண்ட விதம் குறித்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம்.
கடைசியில் ஏமனில் சௌதிக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு ஆதரவாக செனட் அவை தீர்மானம் நிறைவேற்றிவிட்டாலும், மக்கள் பிரதிநிதிகள் அவையில் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்படலாம். ஆனால், புத்தாண்டில் பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுகிறது என்பதால் அப்போது இது நிறைவேற்றப்படும் வாய்ப்பும் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்