பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா: '15 நாட்களுக்கு முன்புதான் விடுதி தொடங்கப்பட்டது'

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு தனியார் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கண்டறிந்துள்ளனர்.
பெண்கள் விடுதி
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). வேலைக்குச் செல்லும் பெண்கள் அந்த விடுதியில் தங்கி இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், நேற்று முன் தினம் காலையில் விடுதியில் இருந்த ஒரு பெண் தனது கூந்தலை உலர வைப்பதற்கான கருவியை மின்சார பிளக்கில் செருக முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராமல் பிளக் உடைந்துவிடவே, சுவருக்குள் பேட்டரியுடன் ஏதோ ஒரு கருவி இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அது ரகசிய வீடியோ கேமரா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக ஆதம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையும், கைதும்
விடுதியை பார்வையிட்ட காவலர்கள், அங்கிருந்து மேலும் சில கேமராக்களை கைப்பற்றினர்.

பட மூலாதாரம், Getty Images
இதனை தொடர்ந்து, அந்த விடுதியை நடத்திவந்த காப்பாளர் சம்பத்குமாரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
ரகசிய கேமராக்களை பெண்கள் கண்டறிந்தது எப்படி?
ரகசிய கேமராக்கள் இருந்ததை விடுதி பெண்கள் எவ்வாறு கண்டறிந்தனர் என ஆதம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் முரளியிடம் கேட்டபோது, ''ஞாயிற்றுக்கிழமையன்று தலைமுடியை காய வைக்க ஹேர் டிரையர் பயன்படுத்த ஒரு பெண் பிளக் பாக்சில் வையரை பொருத்தியபோது, அந்த பாக்ஸ் உடைந்துள்ளது. அதில் ஒரு கேமரா இருப்பதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். மற்றொரு அறையில் இருந்த சுவிட்ச் பாக்சை பார்த்தபோது அதிலும் ஒரு கேமரா இருந்தது. இதையடுத்து, எங்களை தொடர்பு கொண்டு அவர் உதவி கோரினார்,''என்றார்.
சம்பத்குமார் நடத்திய விடுதியை சோதனை செய்தபோது மொத்தம் ஆறு கேமராகளை கைப்பற்றியதாக கூறுகிறார் ஆய்வாளர் முரளி. ''இந்த விடுதி கடந்த 15 நாட்களாக மட்டுமே செயல்பட்டுவந்துள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து, அதை விடுதியாக நடத்தியுள்ளார் சம்பத்.
அவர் மீது தகவல்தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் சட்டம் போன்றவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து,புழல் சிறையில் அடைத்துள்ளோம். இவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதால், அவர்களைப் பற்றிய விவரங்களை தற்போது தெரிவிக்கமுடியாது,'' என்று முரளி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












