இலங்கை அரசியல் குழப்பம்: ராஜபக்ஷ பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: இலங்கை அரசியல் குழப்பம்: "ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை"

இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, ராஜபக்ஷ பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட அவையில் 123 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர். இது ராஜபக்ஷவுக்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

இதுபோன்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகளால் கொண்டுவர முடியாது. அரசு சார்பில் மந்திரி ஒருவர்தான் கொண்டுவர முடியும் என்று சிறிசேன கட்சி எம்.பி. திசநாயகே தெரிவித்தார்.

இதற்கிடையே இலங்கை அதிபர் சிறிசேனவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய சந்தித்து பேசினார். அப்போது அவர், பிரதமர் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்ஷவை நியமித்த பின்னர் இலங்கையில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் மீதான எதிர்மறையான தாக்கம், வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது போன்ற பல பிரச்சினைகள் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து: "லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தமிழகத்தில் தொடக்கம்"

முதல்வர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிப்பதற்கான 'லோக் ஆயுக்தா' அமைப்பை தமிழகத்தில் உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை (மையச் சட்டம் 1/2014) இயற்றியுள்ளது. அதன் பிரிவு 63-ன்படி ஒவ்வொரு மாநிலமும் 'லோக் ஆயுக்தா' என்ற அமைப்பை நிறுவ வேண்டும். அதன்படி தமிழகத்தில் பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக தமிழக அரசு 'தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் - 2018' என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி, தற்போது லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நேற்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா வெளியிட்ட உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், லோக் ஆயுக்தா அமைப்புக்கு செயலாளர் நிலையில் இருந்து 26 பணியிடங்கள் உருவாக்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தாவில் பணிபுரிவோர் மீதான புகார்கள், லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டிக்கப்பட முடியாததாக இருந்தாலும், வேறு விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பதிவாளர் கிடைக்கப்பெற்ற புகார்களை பதிவு செய்வார். புகார்தாரர் அளித்த மனுவில், சட்டப் படி உறுதிப்படுத்த முடியாத விவரங்கள் இருந்தால், அவற்றை நிரூபிக்கவும், தேவையான ஆவ ணங்களை அளிக்கவும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அளிக்கப்பட்ட அவகாசத்தில், உரிய சான்றாவணங்கள் அளிக்கப்படாவிட்டால், புகார்களை நிராகரிக்க பதிவாளருக்கு அனுமதியுள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் - "அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை"

நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், புகையிலை பொருட்களை எடுத்து வருவதற்கும், பயன்படுத்துவதற்கும், மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

"டில்லியில், மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள நிர்மாண் பவனில், புகையிலை பொருட்கள் எடுத்து வருவதற்கும், அவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் புகையிலை பயன்பாட்டுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்களில், 'பான் மசாலா' மற்றும், 'குட்கா' போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு, உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், சுற்றுப்புறமும் அசுத்தமாகிறது. இதனால், மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

எனவே, அலுவலகங்களை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்க, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால், 200 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். இதுகுறித்து, விழிப்புணர்வு விளம்பர பலகைகளை, அலுவலக வளாகங்களில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - "முடிந்தால் அமித் ஷாவை கைது செய்யவும் - மம்தாவிற்கு சவால் விடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்"

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, டிசம்பர் முதல் வாரத்தில் மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை தொடங்கும் போது, முடிந்தால் அவரை கைது செய்யுங்கள் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜிக்கு சிபிஐ(எம்)-ன் மாநில செயலாளர் சுர்ஜ்ய கந்த மிஸ்ரா சவால் விடுத்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"முதலமைச்சர் நன்றாக பேசுகிறார். ஆனால், கடந்த காலத்தில் லாலு பிரவாத் யாதவ் அத்வானியை கைது செய்ததுபோல, அமித் ஷாவை கைது செய்ய மம்தாவிற்கு தைரியம் உள்ளதா" என ஒரு கூட்டத்தில் மிஸ்ரா பேசினார்.

திரிணாமூல் காங்கிரசின் போட்டி வகுப்புவாதம், மாநில மக்களின் வாழ்க்கையை பாதிப்பதாக அவர் வாதிட்டார் என்கிறது இந்நாளிதழ் செய்தி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: