குஜராத் கலவர வழக்கு: 'நான் நரேந்திர மோதியை மன்னிக்கவே மாட்டேன்'

    • எழுதியவர், மெஹுல் மக்வானா
    • பதவி, பிபிசி குஜராத்தி

குஜராத் கலவரத்தின் போது குல்பர்க் வழக்கில் பிரதமர் நரேந்திர மோதிக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஜக்கியா ஜஃப்ரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரிக்கப்படுகிறது.

குஜராத் 2002 கலவர வழக்கில், பிரதமர் மோதி உள்ளிட்டவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சாக்கியா ஜஃப்ரி மற்றும் அரசு சாரா அமைப்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

இந்த கலவரத்திற்கு பின் ஒரு பெரிய சதி இருப்பதாகவும், அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதிக்கும் மற்றும் பல மூத்த அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நரேந்திர மோதிக்கும், கலவரத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மோதியும், குஜராத் மாநில அதிகாரிகளும் குற்றமற்றவர்கள் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு 2013ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, மோதி மற்றும் பிறரை, 2017 அக்டோபர் 5ஆம் தேதியன்று குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஜக்கியா ஜஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணை நவம்பர் 26ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

நரோடா பாட்டியா, நரோடா கம் மற்றும் குல்பர்க் சமுதாய வழக்குகள் பெரிய சர்ச்சையின் ஒரு பகுதியாக இருந்ததாக சாக்கியா குற்றஞ்சாட்டி இருந்தார். அதே போல, மோதி மற்றும் பிறரும் மீதும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த வழக்கு ஏன் முக்கியமானது?

குல்பர்க் சமுதாய படுகொலை மற்றும் 2002 குஜராத் கலவரம் தொடர்பான பிற வழக்குகளில் மோதி நரேந்திர மோதி உள்ளிட்ட பல பெரும் அரசியல் புள்ளிகள் குற்றமற்றவர்கள் என சிறப்புப் புலனாய்வு குழு கூறியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

"தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும என்று சாக்கியா போராடுகிறார்" என டீஸ்டா செடல்வாட் கூறினார்.

"இந்த வழக்கின் முக்கியத்துவம் ஒரே ஒரு நபர் சார்ந்தது மட்டுமல்ல. இது அரசியல்சாசன கடமைகளை பூர்த்தி செய்யாதது, மற்றும் எப்படி முதலமைச்சரில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதோடு மூத்த அதிகாரிகள் தங்கள் கடமைகளை தவறிவிட்டதாக கூறப்படுவதை சார்ந்தது" என்கிறார் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் ஷம்சத் பதன்.

"2002 கலவரத்தில் மாநில அரசிற்கு தொடர்பு இருக்கிறது என்பதை வெளிப்படையாக்க தொடரப்பட்ட இது, வரலாற்றில் முக்கியமான வழக்கு. இது சாக்கியாவிற்கு நீதி கிடைப்பதற்கான வழக்கு மட்டுமல்ல. கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குமான நீதி."

'நான் மோதியை மன்னிக்கவே மாட்டேன்'

"இந்த கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட நரேந்திரா மோதி அல்லது வேறு யாரும் மன்னிக்கப்படக் கூடாது. நான் எப்படி அவர்களை மன்னிப்பது? இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது, தற்போது நான் எப்படி மன்னிப்பது?" என்று கேட்கிறார் ஜக்கியா ஜஃப்ரி.

"நான் கஷ்டத்துடன் இருந்த நாட்கள், எனக்கு மீண்டும் கிடைக்குமா? இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இது மீண்டும் நடக்காமல் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை

தற்போது தன் 80களில் உள்ள சாக்கியா ஜஃப்ரி மேலும் கூறுகையில், "எனது கணவர் வழக்கறிஞராக இருந்தார். எங்கள் குடும்பத்திற்கு நீதியின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்தது"

"என் தந்தை வீட்டிற்குள்தான் வழக்கறிஞர் அலுவலகத்தை வைத்திருந்தார். அதனால், என் அம்மா அவர் வழக்குகள் நடத்திய விதத்தை பார்த்திருக்கிறார். இது எங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான வழக்கு மட்டுமல்ல. என் அம்மாவிற்கு சட்டமும் தெரியும் அதன் செயல்பாடுகளும் தெரியும்" என்கிறார் ஜக்கியாவின் மகன் தன்வீர்.

ஜக்கியாவிற்கு குஜராத்தி மற்றும் இந்தி மொழிகள் நன்றாக தெரியும். ஆனால், தற்போது இந்த வழக்கினால், அவருக்கு ஆங்கிலமும் சற்று புரிகிறது.

"2010ஆம் ஆண்டு வரை அனைத்து வழக்கு ஆவணங்களையும் என் அம்மா தானாகவே படிப்பார். தற்போது வயதாகிவிட்டதால் படிக்க முடியவில்லை. அதனால், நாங்கள் செய்தித்தாள்களை படித்து, அவருக்கு அனைத்து முன்னேற்றங்களையும் நாங்கள் சொல்கிறோம்" என்றும் தன்வீர் தெரிவித்தார்.

அமைப்பை மாற்றுவதற்கான போராட்டம்

"இது தனிநபர் பற்றியது அல்ல. ஆனால் வெளிப்படையான தேவைக்கு என்ன நேரிடும் என்பதற்கு இடையிலேயே விசாரணை நடந்திருந்தால்? பிப்ரவரி 27க்கு முன்னரே தயாரிப்பிற்கான கூட்டங்கள் நடந்தன, ஆனால், உள்துறை அமைச்சம் அமைதியாக இருந்தது.

2002, பிப்ரவரி 27 அன்று நடந்த கூட்டம் நடந்ததை தவிர வேறு ஆதாரங்களும் இருந்தன.இது நீதிக்கான முதல் போராட்டம் கிடையாது, அதே மாதிரி இது கடைசியும் கிடையாது. ஆனால், நாம்தான் இந்த அமைப்பை மாற்ற முடியும். வழக்குகள் எப்படி விசாரிக்கப்படுகின்றன மற்றும் ஆதாரங்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என்ற அமைப்பை நாம் மாற்ற வேண்டும்" என் டீஸ்டா செடல்வாட் தெரிவிக்கிறார்.

"இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டுமென்றால், செயல்முறையில் உயர் தரத்தை வளர்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்"

டீஸ்டா கூறுவதை சாக்கியா மற்றும் தன்வீர் இருவரும் ஒப்புக் கொள்கின்றனர். "என் குடும்பத்திற்கு மற்றும் பல குடும்பங்களுக்கு நடந்த இது மீண்டும் நடக்கக் கூடாது. இதை நீதியால் மட்டும்தான் உறுதிபடுத்த முடியும்" என தன்வீர் கூறுகிறார்.

வாழ்க்கையின் முக்கிய புள்ளியாக மாறிய இந்த வழக்கு

சூரத்தில் தன் மகனுடன் வாழும் சாக்கியா மேலும் கூறுகையில், "2002 கலவர வழக்குகள் சுற்றியே தற்போது என் வாழ்க்கை இருக்கிறது. என் கண் முன்னே நடந்ததையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அந்த வேதனையை மறப்பது மிகவும் கடினமானது. என் மனதில் தற்போது இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், நான் எப்படி நீதியை வெல்வேன் என்பதுதான்" என்கிறார்.

"இத்தனை ஆண்டுகளில் நான் ஒரே ஒரு முறை என் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அமெரிக்கா சென்றிருக்கிறேன். ஒரு முறை ஹஜ் பயணம். அவ்வளவுதான்."

"2002ல் எங்கள் குழந்தைகள் அவர்களது இளம் வயதில் இருந்தனர். இந்த வழக்கினால் அவர்களது படிப்பும் பாதிக்கப்பட்டது. வழக்கினால், எங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிட முடியாமல் போனது. 2013ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு வேலை நிலுவையில் இருக்கும். என் குடும்பத்தினருக்கு நேரம் கொடுக்க முடியவில்லை" என்கிறார் தன்வீர்.

"என்ன நடந்தது என்பதை என் குழந்தைகள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் வளர்கின்றனர்."

நீதிக்கான செலவு

வழக்கு விசாரணையின் செலவு குறித்து பேசிய தன்வீர், "இந்த போராட்டத்திற்கு பல நிறுவனங்கள் மற்றும் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அதனால்தான் எங்களால் இவ்வளவு காலம் போராட முடிந்தது."

"இது கடினமான போராட்டம். இதனால் 15 வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. சட்டப் போராட்டத்திற்கு ஆகும் செலவினைத் தவிர, சமூக மற்றும் உளவியல் ரீதியான அழுத்தத்தை எதிர்கொள்வது கடினமானது" என்கிறார் டீஸ்டா.

கலவர நாளில் நடந்தது என்ன?

2002 பிப்ரவரி 28 அன்று, அதாவது கோத்ரா சம்பவம் நடந்த இரண்டாவது நாள், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் அகமதாபாத் குல்பர்க் சொசைட்டியை பெரும் கும்பல் தாக்கியது. அதில் கொல்லப்பட்ட 69 நபர்களில் காங்கிரஸ் முன்னாள் எம்பி-யான சாக்கியா ஜஃபரியின் கணவர் இஹெசன் ஜஃபரி-யும் ஒருவர்.

தன் கணவர் காவல்துறையை அழைக்க முயன்றதாகவும், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்ததாகவும் சாக்கியா கூறுகிறார். அப்போது முதலமைச்சராக இருந்த மோதியையும் அவர் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

2006 ஜூன் மாதம், மோதி உள்ளிட்ட 63 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யுமாறு கோரி அம்மாநில டிஜிபி-ஐ அணுகினார் சாக்கியா. வேண்டுமென்றே மோதியும், மற்ற பொறுப்புகளில் இருந்த நபர்களும் கலவரங்களில் தாக்கப்பட்ட மக்களுக்கு உதவ முயற்சிக்கவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு.

இதனை டிஜிபி தள்ளுபடி செய்ய, ஜக்கியா குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2007ல் உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

குல்பர்க் சொசைட்டி சம்பவம்

மார்ச் 2008ல் ஜக்கியா ஜஃபரி மற்றும் அமைதி மற்றும் நீதி என்ற அரசு சாரா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

வழக்கு விசாரணைக்கு வழிநடத்துவதற்காக பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

ஏப்ரல் 2009ல் குஜராத் கலவரத்தை விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக்குழு, இந்த வழக்கையும் விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

2010ஆம் ஆண்டு தொடக்கத்தில் நரேந்திர மோதியை இது தொடர்பாக விசாரிக்க அழைத்த அக்குழு, அதே ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

2010ஆம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து பிரசாந்த் பூஷன் தன்னை விலக்கிக் கொண்டார். பிறகு உச்சநீதிமன்றம் ராஜூ ராமசந்திரனை நியமித்தது. அவர் தனது அறிக்கையை 2011 ஜனவரி மாதம் தாக்கல் செய்தார்.

மார்ச் 2011 - சிறப்புப் புலனாய்வுக்குழு வழங்கிய ஆதாரங்களில் முரண்பாடுகள் இருந்ததால் உச்சநீதிமன்றம் இதனை மேலும் விசாரிக்க உத்தரவிட்டது.

செப்டம்பர் 2011 - மோதி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. ஆனால், சிறப்புப் புலனாய்வுக்குழு அறிக்கையை குஜராத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்பையடுத்து, மோதி மற்றும் ஜக்கியா இருவரும் தாங்கள் வெற்றிப் பெற்றதாக கூறிக் கொண்டனர்.

'சாவு குறித்து பயமில்லை'

2002ஆம் ஆண்டிலிருந்து நீதிக்காக போராடி வரும் ஜக்கியா ஜஃபரிக்கு தற்போது 80 வயது. அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்தாலும் அவர் தனது நம்பிக்கையை கைவிடவில்லை.

"தற்போது என்னை பார்க்க யாரும் வருவதில்லை. என்னை மிரட்டவும் எவரும் இல்லை. ஆனால் நாட்டில் இருக்கும் சூழல் அபாயகரமானதாக உள்ளது. ஆனால், எனக்கு பயமில்லை. அப்போது அவர்கள் கொல்ல வேண்டியிருந்தது, இப்போதும் கொல்லலாம். ஆனால், நீதிக்கான பாதையில் இருந்து நான் மாறமாட்டேன்" என்கிறார் ஜக்கியா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :