You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஜ புயல்: அரசு பாடம் கற்க மறுப்பது ஏன்?
- எழுதியவர், ஆர். மணி
- பதவி, மூத்த பத்திரிகையாளர்
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
கஜ புயல் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களை - நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை புரட்டிப் போட்டு விட்டது. நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகில் கரையை கடந்தது கஜ புயல். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும் அதிக பாதிப்பு மேலே குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களுக்குதான்.
இதுவரையில் 63 பேர் இறந்துள்ளதாகவும், பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழித்துள்ளதாகவும், 2.5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறுகிறது. ஆனால் உண்மையான இழப்பு இதனை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் இருக்கும் தன்னார்வ குழுக்கள் (NGO) கூறுகின்றன. இதனிடையே இந்த நான்கு மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் சுணக்க நிலையில் இருப்பதாக கூறியும், சம்மந்தப்பட்ட இந்த நான்கு மாவட்டங்களையும் தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 22-ஆம் தேதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'ஒரு வார காலமாகவே இந்த நான்கு மாவட்டங்களில் உணவு, குடிநீர், மின்சார வசதிகள் இல்லை. பலியான விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும். உடனடியாக நிலைமை சீர் செய்யப்படாவிட்டால் பெரியளவில் பிரச்சனைகள் உருவெடுத்து விடும்' என்றும் வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த தமிழக அரசு நிவாரணப் பணிகள் செவ்வனே நடைபெற்று வருவதாக கூறியது.
தற்போது இந்த நான்கு மாவட்டங்களில் நிலவும் முக்கிய பிரச்சனைகளில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து நின்று கொண்டிருப்பது அரசுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வந்து கொண்டிருக்கும் பல்வேறு தன்னார்வ குழுக்குளுக்கும் இடையில் எந்த விதமான ஒருங்கிணைப்பும் (coordination) இல்லாமல் இருந்து கொண்டிருப்பதுதான். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், தமிழகத்துக்கு வெளியே இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. உணவுப் பொட்டலங்கள், மருந்துகள், போர்வைகள் உள்ளிட்டவை லாரி, லாரியாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இவற்றை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக விநியோகிக்கத்தான் அரசு தரப்பில் தேவைப்படும் அளவுக்கு முனைப்பு காட்டப்படவில்லை. இரண்டாவது, நான்கு மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டாலும், கிட்டத்தட்ட 75 முதல் 80 சதவிகித நிவாரண பொருட்கள் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு மட்டுமே வந்து கொண்டிருப்பதுதான்.
''இது ஒரு முக்கிய பிரச்சனை. பெரும்பாலான நிவாரணப் பொருட்கள் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பாதிப்புகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு இணையாகவேதான் இருக்கின்றது. ஆனால் வெளியுலகிற்கு நாகப்பட்டினம் மாவட்டம்தான் பெரியளவில் பாதிக்கப்பட்டதாக ஏற்பட்ட கருத்தோற்றம்தான் இன்று இந்த மாவட்டத்துக்கு மட்டுமே பெரும்பாலோனோர் நிவாரணப் பொருட்களை அனுப்பும் நிலையை உருவாக்கியிருக்கிறது'' என்று தொலைபேசியில் என்னிடம் கூறினார் தஞ்சாவூரில் இருக்கும் என்னுடைய பள்ளிக்காலத்து நண்பர் ஒருவர்.
ஒருங்கிணைப்பு ஏன் இல்லை?
நவம்பர் 13, 14 ம் தேதிகளில் பெரியளவில் தமிழக அரசின் அனைத்து தரப்பு அதிகாரிகளும் - வருவாய் துறை, மின் துறை, சுகாதார துறை - மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்த (National Disaster Relief Force or NDRF) வீரர்களும் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர். 16-ஆம் தேதி தஞ்சாவூர் அதிராமப்பட்டிணம் அருகே கரை கடந்தது கஜ புயல். பாதிப்புகள் நாகப்பட்டணத்திற்கு இணையாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் அதிகம் என்பதை அரசு உணரவே நான்கு நாட்களாகி இருக்கிறது. அதன் பிறகுதான் நவம்பர் 19-ஆம் தேதி அளவில் மற்ற மூன்று மாவட்டங்கள் பக்கம் அரசின் கவனம் திரும்பியிருக்கிறது.
மற்றொரு முக்கிய விஷயம் வந்து குவியும் நிவாரணப் பொருட்களை வாங்கி, அவற்றை முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிப்பது. இதனையும் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரையில், செய்யாமல் அரசு கோட்டை விட்டுக் கொண்டிருப்பது. நவம்பர் 22-ஆம் தேதி முன்னணி தமிழ் நாளிதழில் வந்த செய்தி 'சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட நான்கு லாரி நிவாரணப் பொருட்களை நாகப்பட்டினத்தில் வாங்க மாவட்ட அதிகாரிகள் மறுத்ததுடன், அவற்றை மாவட்டத்தின் கிடங்கிற்கு (Wearhouse) கொண்டு போகுமாறு கூறி விட்டனர். அங்கு இந்த லாரிகள் போனவுடன் வந்த பிரச்சனை, நிவாரணப் பொருட்களை லாரிகளில் இருந்து கீழே இறக்க சுமை கூலித் தொழிலாளர்கள் (Loarders) லாரிக்கு தலா 2,000 ரூபாய் கேட்டனர்' என்று கூறுகிறது. பிறகு எப்படியோ சமாளித்து நிவாரணப் பொருட்கள் கீழே இறக்கப்பட்டன.
இதுதான் மிக முக்கியமானது. அதாவது, ''ஒருங்கிணைப்பு'' (Coardination). இன்று பணத்துக்கும், நிவாரணப் பொருட்களுக்கும் நம்மிடம் பஞ்சமில்லை. ஆனால் அவற்றை ஒருங்கிணைத்து உரியவர்களிடம், அதாவது, தேவைப்படுபவர்களுக்கு கொண்டு போய் நிவாரணப் பொருட்களை சேர்ப்பது மற்றும் ஒரே இடத்தில் பெரும்பாலான நிவாரணப் பொருட்கள் குவியாமல் தடுப்பது. இதுதான் முக்கியமானது.
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பல உதவி செய்யும் அமைப்புகளும் (UN Aid Agencies) மற்றும் உலக சுகாதார நிறுவனமும் (World Health Organization or WHO) திரும்ப, திரும்ப வலியுறுத்துவது எந்த விதமான பேரிடர்களாக இருந்தாலும், பெருவெள்ளம், சூறாவளி, பூகம்பம் என்று எதுவாக இருந்தாலும் அடிப்படையில் அந்தந்த சம்மந்தப்பட்ட அரசுகள் முதலில் உறுதி செய்ய வேண்டியது ஒருங்கிணைப்பு. நாலா திசைகளிலிருந்தும் வந்து குவியும் நிவாரணப் பொருட்களை பெறுவதும், பெற்றதை உரியவர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கும் தேவையானது ஒருங்கிணைப்பு. இதற்கான முதல் பணி, ஒரு கட்டமைப்பை, முழு அதிகாரங்களை கொண்ட, மூத்த அதிகாரிகளை உ றுப்பினர்களாக கொண்ட கட்டமைப்பை ஏற்படுத்துவது. (Unified Command Structure of senior officers). குறிப்பாக ஒரே இடத்தில் எல்லா உதவிப் பொருட்களும் அல்லது பெரும்பாலான உதவிப் பொருட்களும் வந்து குவிவதை தடுப்பது.
இதுதான் முக்கியமானது. இந்த கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால், ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி இந்த 'நிவாரண ஒருங்கிணைப்பு பணிகளுக்கான தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார். அவருக்கு கீழே பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்ப குறைந்தது ஆறு முதல் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டாவது வளையத்தில் இருப்பார்கள். எவராவது நிவாரணப் பொருட்களை கொடுக்க விரும்பினால் அவர்கள் நேரடியாக அதனை பாதிக்கப்பட்டவர்களிடம் கொண்டு போய் கொடுப்பது அனுமதிக்கப்படாது.
மாறாக அதனை கொடுக்க விரும்புபவர்கள் மேலே சொன்ன தலைமை அதிகாரியை தொடர்பு கொள்ள வேண்டும். அந்த தலைமை அதிகாரிக்கும் இரண்டாவது வளையத்தில் இருக்கும் அதிகாரிகள் குழுக்களுக்கும் இடையே இருக்கும் ஒரு உள் ஒருங்கிணைப்பில் (Internal Co ordination) இருக்கும் அதிகாரிகள் இந்த தகவலை தலைமை அதிகாரியிடம் தெரிவிப்பார்கள். அதற்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் எந்த இடத்திற்கு என்ன தேவைப்படுகிறது, எவ்வளவு தேவைப்படுகிறது என்பது கண்டறியப் பட்டு, அதனடிப்படையில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் சம்மந்தப்பட்ட இடத்துக்கு திருப்பி விடப்படும். சம்மந்தப்பட்ட இடத்தின் பொறுப்பு அதிகாரிக்கும், அவரது குழுவினருக்கும் இந்த லாரிகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்படும். அதே போல நிவாரணப் பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கும் எங்கு போகிறார்களோ அந்த இடத்தின் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை கொடுக்கப்படும்.
சென்னை வெள்ளத்தின் அனுபவம்
இவை எல்லாம் செய்யப்படாததால் ஏற்பட்ட குளறுபடிகளை, நேரில், நான் 2015 டிசம்பர் சென்னை பெருவெள்ளத்தில் பார்த்தேன். தென் சென்னை திருவான்மையூரில் 12 தனியார் நிவாரணக் குழுக்கள் தேவையான அனைத்து பொருட்களுடன் நின்று கொண்டிருக்கிறார்கள். வட சென்னையின் திருவெற்றியூர் பகுதியில் 4 நிவாரணக் குழுக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருவெற்றியூருக்கு 8 நிவாரணக் குழுக்கள் தேவைப்படுகின்றன. திருவான்மியூருக்கு, 4 நிவாரணக் குழுக்கள் இருந்தால் போதும். பிறகு 2 நாட்கள் கழித்துத்தான் இந்த நிலைமை சரி செய்யப்பட்டது.
ஆகவே, இந்த ஒருங்கிணைப்புதான் மிக, மிக, முக்கியமான தேவையாக எல்லா பேரிடர் காலங்களிலும், சம்மந்தப்பட்ட அரசுகளுக்கும், சம்மந்தப்பட்ட அரசு சாரா அமைப்புகளுக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பெருந்தவறை இந்த கஜ புயலிலும் பார்த்தோம். ஆனால் ஆறுதலான ஒரு செய்தி நவம்பர் 21-ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை சற்றே ஏற்றங் கண்டிருக்கிறது. ஒருங்கிணைப்பு பணிகள் முன்னேற்றங் கண்டு கொண்டிருக்கின்றன என்பதுதான்.
இது தவிர நான் சொல்ல விரும்பும் இரண்டு விஷயங்கள். ஒன்று தொற்று நோய்கள் பரவாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள், இரண்டாவது காப்பீட்டு நிறுவனங்கள், அதாவது, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயற்பாடுகள்.
எப்போதெல்லாம் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உணவு, குடிநீர் விநியோகத்திற்கு அடுத்தபடியாக தேவைப்படுவது மருத்துவ உதவிகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள். இதில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து சொல்லி வருவது நேரடி பாதிப்புகள், மறைமுக பாதிப்புகள், மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுவது (Loss or disruption in the delivery of health care) போன்றவைதான். நேரடி பாதிப்புகள் எனும் போது மழை, வெள்ளத்தால் வந்த வியாதிகள், ஏற்கனவே ஒருவருக்கு இருக்கும் வியாதிகள் தீவிரமடைவது மற்றும் தொற்று நோய்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ கருவிகள், வியாதிகளை கண்டறியும் உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை கட்டடங்கள் அழிந்து போவது. இதனுடைய பாதிப்புகள் உடனடியானதாக இருப்பது மட்டுமின்றி, நீண்ட கால பாதிப்புகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.
முடங்கிய மருத்துவக் குழுக்கள்
கஜ புயல் கரை கடந்த பின்னர் வந்த அடுத்த ஏழு நாட்கள் கிட்டத்தட்ட, சம்மந்தப்பட்ட பெரும்பாலான இடங்களில் மருத்துவ குழுக்களின் செயற்பாடுகள் முடங்கியே கிடந்திருக்கின்றன. பேராவூரணியில் இருக்கும் என்னுடைய உறவினர் ஒருவர் சொன்ன தகவல் பரிதாபகரமானதாக இருந்தது. அவர் சொன்னார்; ''புயல் வருவது இரண்டு வாரங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் ஒருங்கிணைப்பு இல்லை. உதாரணத்திற்கு நேரில் பார்த்ததை சொல்லுகிறேன். பேராவூரணி அரசு மருத்துவமனையில் கஜ புயல் கரை கடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது. இது வழக்கமானதுதான்.
ஆனால் அதற்கு மாற்றாக முக்கிய சிகிச்சைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்கு ஜெனரேட்டர்கள் இருந்திருக்க வேண்டும். மின்சாரம் நிறுத்தப் பட்டபோது பேராவூரணி அரசு மருத்துவமனையில் மூன்று நோயாளிகள் 'வெண்டிலேட்டர்' கருவி சிகிச்சையில் இருந்திருக்கிறார்கள். மின்சாரம் நிறுத்தப்பட்டவுடன் அவர்களது உறவினர்கள் அலற ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலைமை சில மணி நேரங்கள் நீடித்தது. ஆனால் நல்லவேளையாக சில மணி நேரங்கள் கழித்து எப்படியோ தருவிக்கப்பட்ட ஜெனரேட்டர் 'வெண்டிலேட்டரை' இயங்க வைத்து, மூவரும் காப்பாற்றப்பட்டு விட்டார்கள்'' என்றார். ஆகவே அரசு மருத்துவமனையுடனான, மின் வாரியத்தின் 'ஒருங்கிணைப்பு' என்ன தரத்தில் இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இதே போல தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான பணிகள் பேராவூரணி நகரில் செய்யப்பட்டது, ஆனால் கிராமங்களில் கோட்டை விடப்பட்டிருக்கிறது. நில வேம்பு கஷாயம் பேராவூரணி நகரில் கொடுக்கப்பட்டது. ஆனால் பேராவூரணியின் 37 கிராமங்களுக்கு இது விரிவு படுத்தப்படவில்லை.
இரண்டாவது விஷயம் நான்கு மாவட்டங்கள் சந்தித்திருக்கும் பேரிடரினால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெரியளவுக்கு பாரம் ஏறவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் ஏற்பட்ட இழப்பு ரூபாய் 15 ஆயிரம் கோடி என்று கூறியிருக்கிறார். பயிர்களுக்கான இழப்பு 625 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதில் 225 கோடியிலிருந்து 250 கோடி வரையில்தான் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதி தொகைக்கான பயிர்கள் காப்பீடு செய்யப்படவில்லை. அந்தளவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் பல நூறு அல்லது சில ஆயிரம் கோடி ரூபாய்களை காப்பீட்டு தொகையாக பாதிக்கப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டிய நெருக்கடியிலிருந்து தற்போதைக்கு தப்பிப் பிழைத்திருக்கின்றன.
இதை சொல்லுவதற்கு காரணம், 2015 சென்னை பெருவெள்ளத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய அழிவில் சில ஆயிரம் கோடி ரூபாய்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் (பொது துறை மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்) ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எப்போதுமே இயற்கை சீற்றங்கள் நகர்ப்புறங்களில் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிலைமை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும். அதுவே கிராம பகுதிகளில் பாதிப்புகள் என்றால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதி நெருக்கடி அவர்கள் தாங்கிக் கொள்ளக் கூடியதாகவே இருக்கும். ஏனெனில் கிராமங்கள் எனும் போது பெரும்பாலான இடங்கள் வயல் வெளிகளாகவும், தோட்டங்கள், தோப்புகளாகவும் இருக்கும். வீடுகள் குறைவானதாகவும், முழு அளவிலான கட்டடங்களும் குறைவானவையாகவும் தான் இருக்கும்.
இதனை சொல்லுவதற்கான காரணம் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் திடீர் பெரும் நிதி நெருக்கடி, இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் நின்று போகாது. அது மீண்டும் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் தலையில்தான் வந்து விழும். அப்போது பாலிசிதாரர்கள் புதியதாக எடுக்கும் பாலிசிகளையும் பாதிக்கும், பெரும்பாலான மாநில அரசுகள் இன்றைக்கு பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் அடிக்கடி கடன் வாங்கித்தான் தங்களது நிதி சுமைகளை சமாளித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே அந்த பின் புலத்தில் பார்த்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள், அரசுகளை பாதித்து, பின்னர் மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த முறை தமிழகம் ஓரளவுக்கு தப்பி பிழைத்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் இன்றைய தமிழக அரசின் தற்போதய அணுகுமுறை இப்படியே தொடர்ந்தால் வரும் காலங்களில் இயற்கை பேரிடர் ஏற்படும் போது தற்போது நமக்கிருந்த அதிர்ஷ்டம் அப்போதும் தொடருமா என்று கேட்டால் அது மில்லியன் டாலர் கேள்விதான்.
'வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள் மீண்டும் அவர்களது தவறுகளை செய்வதற்கு சபிக்கப்பட்டவர்கள்தான்' என்ற ஒரு மேலை நாட்டு அறிஞரின் பொன் மொழிகள்தான் நினைவுக்கு வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :