You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செல்லமாக வளர்த்த கால்நடைகளை கொன்ற கஜ: பெண்கள் கண்ணீர் #GroundReport
கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்ட மக்கள் மட்டும் இல்லாமல் கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய கஜ புயலின் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கஜ புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வீடு, கால்நடைகள் மற்றும் தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
வேதராண்யம், திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, உள்பட பல ஊர்கள் கடுமையான சேதத்தை சந்தித்திருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் வட்டம் தகட்டூர், அரைக்கால்கரை,பெத்தாச்சிக்காடு உள்ளடக்கிய பதினெட்டு பட்டி கிராமங்களில் உள்ள மக்கள் அதிகளவில் முரா, சுருடலடை, நாட்டு எருமைகள் ஆகிய இனங்களைச் சேர்ந்த மாடுகளும் வெள்ளாடு, ஜம்முன்னாபுரி, செம்மரி ஆடு ஆகிய ஆட்டு வகைகள் மற்றும் நாட்டு கோழிகள் அதிகளவில் வளர்த்து வந்தனர். கடந்த 15ம் தேதி நள்ளிரவு ஏற்ப்பட்ட கஜா புயலால் கால்நடைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அப்பகுதிகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாடுகள் 250க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் என கால்நடைகள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள் அனைத்தும் இரவு நேரத்தில் கொட்டகையில் கட்டி இருந்த போது புயலில் மாட்டிக்கொண்டன. மேலும் சூறைக்காற்றில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளைக் காணவில்லை என கோழி வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து புயலில் மாடுகளை இழந்த பூங்கொடி பிபிசி தமிழிடம் கூறியபோது, "நள்ளிரவு வீசிய புயல் மற்றும் சூறைக் காற்றால் மாட்டுப் பட்டி இடிந்து விழுந்தது. இதனால் அதில் கட்டியிருந்த 15 மாடுகள் இறந்தன.கோழிகள் அனைத்தும் காற்றில் பறந்து சென்றன. இதுவரை கோழிகள் எங்கு உள்ளன எனத் தெரியவில்லை மிகவும் கஷ்ட்பட்டு வளர்த்த கால்நடைகள் அனைத்தும் கண் முன்னே இறந்து போனது மிகுந்த வேதனையளிக்கிறது" என கண்ணீருடன் தெரிவித்தார்.
புயலின் போது முதலில் வடக்குப் பக்கத்தில் இருந்து கடுமையான சூறைக்காற்று வீசியது. பின் காற்று திசை மாறி வீசியது. அப்போது மாட்டு கட்டிடம் இடிந்து விழுந்து அதில் அடைத்து வைத்திருந்த 60 ஆடுகள் மற்றும் பதினைந்து மாடுகள் உயிரிழந்தன. "இவை அனைத்தையும் நான் கால்நடைகளாக நினைத்து வளர்க்கவில்லை. வீட்டியில் ஒரு நபராக நினைத்து வளர்தேன். ஒரே நேரத்தில் இவை அனைத்தும் இறந்தது மனதுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது" என பிபிசி தமிழிடம் பேசிய சுப்ரமணி என்பவர் கூறினார்.
எங்களுக்கு மொத்தம் நான்கு மாடுகள், இருபது ஆடுகள். அந்த மாட்டுகளிடம் பால் கறந்து விற்றுதான் வாழ்ந்து வருகிறோம். திடீரென ஏற்பட்ட இந்த புயலால் அனைத்து மாடுகளையும் இழந்து விட்டு தற்போது அடுத்த வேளை சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லாமல் தானும் தனது பிள்ளைகளும் உள்ளதாக வேதனையுடன் கூறினார் இந்திரா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :