மகாராஷ்டிரா சாதிய வன்முறை வழக்கு: தெலுங்கு கவிஞர் வரவர ராவ் மீண்டும் கைது

வரவர ராவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரவர ராவ்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஐந்து செயல்பாட்டாளர்களில் ஒருவரான தெலுங்கு கவிஞர் வரவர ராவ் இன்று இரவு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்டு 29 முதல் இவர் வீட்டுக் காவலில் இருந்தார். அவரை ஹைதராபாத்தில் இருந்து புனே கொண்டு செல்வதற்கான பிடி ஆணை மராத்தி மொழியில் இருந்ததால் அதை ரத்து செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் முறையிட்டதை புனே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து இந்தக் கைது நிகழ்ந்துள்ளது.

இன்று இரவு 11 மணிக்கு விமானம் மூலம் ஹைதராபாத்தில் இருந்து அவர் புனே கொண்டு செல்லப்பட்டு, நாளை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்படுவார் என்று காவல் துறை தங்களிடம் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் பிபிசி தெலுங்கு சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

"இந்தக் கைது சட்டவிரோதமானது. இடம் மாற்றுவதற்கான ஆணை செல்லாது என்று நேற்றுதான் நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் எப்படி கைது செய்ய முடியும். அவர்கள் புதிய கைதாணையையோ, உயர் நீதிமன்ற உத்தரவையோ காண்பிக்கவில்லை," என வரவர ராவின் உறவினர் வேணுகோபால், பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினியிடம் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி ஹைதராபாத்தில் வரவர ராவையும், அருண் ஃபெரேரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரை மும்பையிலும், சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியனை (பியூடிஆர்) சேர்ந்த சுதா பரத்வாஜை ஹரியானாவிலும், டெல்லியில் பியூடிஆரை சேர்ந்த கெளதம் நவ்லாகாவையும் புனே காவல் துறையினர் ஆகஸ்டு இறுதியில் கைது செய்திருந்தனர்.

எல்கார் பரிஷத்

பட மூலாதாரம், Getty Images

எல்கார் பரிஷத் அமைப்பின் பெயரில் தலித் அறிவுஜீவிகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள், 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடத்திய ஒரு கூட்டத்தில் ஆத்திரமூட்டும் உரைகளை அவர்கள் நிகழ்த்தியதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எல்கார் பரிஷத் திறந்த வெளியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சி என்றும் அதில் எவ்வாறு சதி நடக்க முடியும் என்று கொன்சல்வேஸின் வழக்கறிஞர் ராகுல் தேஷ்முக் புனே நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார்.

காவல் துறை ஒரு கதையை சொல்கிறது. கடிதங்களில் அவர்கள் பெயர்கள் இருந்ததினால் அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று அர்த்தம் கிடையாது என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

பீமா கோரகான் சண்டையின் 200வது ஆண்டை நினைவுகூர்வதற்கு புனே நகரில் தலித் குழுக்கள் கூடியிருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் சண்டையாக பிரிட்டிஷ் காலனியாதிக்க படைப்பிரிவுகேளோடு சேர்ந்து உயர் சாதி ஆட்சியாளருக்கு எதிராக தலித்துக்கள் சண்டையிட்டதுதான் கோரகான் மோதல்.

இவர்களின் கைதுக்கு முன்பாக ஹைதராபாத், மும்பை, டெல்லி, ராஞ்சி ஆகிய பல இடங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: