1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்

பட மூலாதாரம், Getty Images
தினத்தந்தி - 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
ரூ.1,200 கோடியில், கே.ஆர்.எஸ். அணை பூங்காவில் காவிரி தாய்க்கு 360 அடி உயரத்தில் சிலை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், "சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கத்தில் 'டிஸ்னிலேண்ட்' பூங்காவை போல் கே.ஆர்.எஸ். அணை பூங்காவை மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
கே.ஆர்.எஸ். அணை பகுதியில் 300 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு, அதில் அருங்காட்சியக கட்டிடம் கட்டப்படும். அதன் மீது காவிரி தாய்க்கு உயரமான சிலை அமைக்கப்படும். அங்கு 'ஈபிள்' டவரை போல் ஒரு பெரிய டவரும் நிறுவப்படும். அந்த டவரில் ஏறிச்சென்று, கே.ஆர்.எஸ். அணையை பார்க்க வசதி செய்து கொடுக்கப்படும்.
கர்நாடகத்தின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அங்கு அருங்காட்சியக கட்டிடம் கட்டப்படுகிறது. அதன் மீது காவிரி தாய் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலையின் உயரம் 125 அடியாக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அருங்காட்சியக கட்டிடத்தின் உயரத்தையும் சேர்த்தால் காவிரி தாயின் சிலை 360 அடி உயரமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து தமிழ் - பேரிடர்களை அறிய உதவும் செயலி
புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் புதிய செல்போன் செயலியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
புயல், மழை, வெள்ளம் போன்றவற்றின் நிலை, வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் TNSMART எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மழையின் அளவு, வெள்ளம் தொடர்பாக ஒவ்வொரு பகுதி குறித்த முந்தைய தகவல்கள், நிகழ்கால தகவல்களைப் பெற்று கணித்து, தகவல்கள் அனுப்பும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பாங்காக்கில் செயல்படும் ஆர்ஐஎம்இஎஸ் உதவியுடன் இந்த TNSMART செயலி செயல்படும்.
இதன் மூலம் அந்தந்த நேரத் தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களையும், அதன் பாதிப்புகளையும் கணிக்க முடியும். இந்த செயலி தகவல்களைப் பெற்று, உடனுக்குடன் எச்சரிக்கை விடுக்கும் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன.
இந்த சொத்துகள் யாரைச் சென்றடைய வேண்டும் என ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. எனவே, இந்த சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கரையை கடந்தது 'கஜ' புயல் : தொடரும் கனமழை
- டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
- வரைவு பிரெக்ஸிட் ஒப்பந்தம்: எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டன் அமைச்சர்கள் பதவி விலகல்
- "கஜ புயல் வரும்போது செல்ஃபி எடுக்காதீர்கள்"
- இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் - மீண்டும் ஒத்திவைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












