ஃப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் விலகல் ஏன்?

பின்னி பன்சால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பின்னி பன்சால்

தவறான நடத்தைப் புகாரில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தமது முதன்மை செயல் அதிகாரி பொறுப்பை விட்டு விலகினார்.

தீவிரமான தனிப்பட்ட தவறான நடத்தை குறித்து ஃப்ளிப்கார்ட்டும், வால்மார்ட்டும் விசாரணை நடத்தின. குற்றச்சாட்டுகளை பின்னி பன்சால் மறுக்கிறார். எனினும் விசாரணை முறையாக நடப்பதை உத்தரவாதம் செய்யவேண்டிய கடமை நிறுவனத்துக்கு இருக்கிறது என்று ஃபிளிப்கார்ட்டும் வால்மார்ட்டும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிற விவரங்கள்:

புகார் கொடுத்தவர் கூறுகிறவற்றை உறுதிப்படுத்தும் ஆதாரம் எதுவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சில சூழ்நிலைகளில் பின்னி செயல்பட்ட விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது உள்பட அவரது முடிவுகளில் சில குறைகள் இருந்ததை விசாரணை கண்டுபிடித்துள்ளது. இதனால்தான் அவரது பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாற்றம் குறித்து பின்னி சிறிது காலமாகவே திட்டமிட்டுவந்தார். அவருக்கு அடுத்து யார் வருவது என்பது குறித்து நாங்களும் ஆலோசித்து வந்தோம். இந்த முயற்சி தற்போது வேகமெடுத்துள்ளது.

Flipkart

பட மூலாதாரம், Getty Images

ஃப்ளிப்கார்ட்டின் முதன்மை நிர்வாக அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தொடர்வார். ஃப்ளிப்கார்ட்டின் வணிகத்துக்குள் தற்போது இணைக்கப்பட்டுவிட்ட மைந்த்ரா, ஜபோங் ஆகியவை தனித் தளங்களாகவே இயங்கும். இந்த இரு நிறுவனங்களுக்கும் ஆனந்த் நாராயணன் முதன்மை நிர்வாக அதிகாரியாக தொடர்வார். ஆனால், கல்யாணுக்கு கீழே இவர் செயல்படுவார்.

ஃபோன் பே தளத்துக்கு சமீர் நிகம் முதன்மை நிர்வாக அதிகாரியாகத் தொடர்வார். அவர், இயக்குனர் குழுவுக்கு நேரடியாக பதில் சொல்வார்.

நிறுவனம் முழுவதிலும் உள்ள தலைமைத்துவத்தின் மீதும் அதன் வலிமை மீதும், ஆழத்தின் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.

எதிர்காலத்தில் பொது வணிக நிறுவனமாக இது உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிற நிறுவனத் தலைமைகளுக்கு ஆதரவாகவே இருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :