You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலி செய்திகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி? பிபிசி நிகழ்வில் பேசிய கருத்துகள் #BeyondFakeNews
பிபிசி உலக சேவையால் நடத்தப்பட்ட Beyond Fake News நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பேசியதிலிருந்து சில முக்கிய கருத்துக்கள்
சென்னை
- போலிச் செய்திகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் போக்கு நிலவுகிறது என்று சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
- "வதந்திகளுக்கு போலி செய்திகள் என்ற புதிய பெயரை நாம் தற்போது கொடுத்துள்ளோம். செய்தியின் ஆதாரங்களை செய்தியில் குறிப்பிட இயலாத பட்சத்தில் ஏன் ஒரு செய்தியை வெளியிடுவதை தவிர்ப்பதில்லை?" என்றார் குஷ்பு.
- "போலிச் செய்திகளை தடுக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தொலைக்காட்சி ஊடகங்கள் பெரிதும் சமூக ஊடகங்களை நம்பி இருப்பதனால் போலி செய்திகள் அதிகம் பகிரப்படுகின்றன". என்று தெரிவித்தார் பிஜேபி நாரயணன்.
- "ஒருவர் கதை கேட்க அதிக சுவாரஸ்யம் காட்டுவதால், மற்றவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிவு இருக்காது. சிலர் எதைக் கொடுத்தாலும் க்ளிக் செய்து படிப்பார்கள்" என்றார் உளவியலாளர் ஷாலினி
- "வாட்ஸ் ஆப்பில் செய்தியின் ஆதாரம் எது எங்கிருந்து தொடங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வழி வேண்டும். ஃபார்வார்ட் செய்திகள் அதிகமாக வலம் வருகின்றன. இதெல்லாம் நமக்கு இலவசமாக கிடைக்கிறது. ஒரு செய்தியை ஃபார்வார்ட் செய்ய 10 அல்லது 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயுங்கள், ஒரு ஃபார்வார்ட் செய்திகூட வராது" என்று தெரிவித்தார் பாண்டே
- "போலிச் செய்திகள், நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உண்மைச் செய்தி போல தெரியும் உதாரணமாக ஊட்டி அருகே அணை கட்டப்படுவதாகவும் அது கட்டப்பட்டு விட்டால், காவிரி நீர் கர்நாடகாவிற்கு செல்லாது என்றும் ஒரு செய்தி சமூக ஊடகத்தில் பரப்பட்டது" என்றார் சூழலியலாளர் ஓசை காளிதாஸ்
- "போலிச் செய்தியைத் தடுப்பது என்பதை விட, அது போலிச் செய்தி என்று நிரூபித்தால் போதும் அது நீர்த்துப் போய் விடும்." என்றார் செயற்பாட்டாளர் பாஸ்கர்
டெல்லி
- ''தற்போது மிகவும் திட்டமிடப்பட்டு போலிச் செய்திகள் உருவாக்கம் மற்றும் பரவுவது ஆகியவை நடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் நோக்கங்கள் உள்ளன. இவ்வாறான சூழல் முன்பு இல்லை'' என டெல்லியில் நடந்த #BeyondFakeNews பிபிசி கருத்தரங்கில் பேசிய நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்தார்.
- ''காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை போலிச் செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகவும் ஒருங்கிணைந்த செயல்பாடு உள்ளதாக நான் கூறமாட்டேன். உண்மையை விட வேகமாக போலிச் செய்திகள் பரவுகிறது. பாஜகவை பொறுத்தவரை அவர்களிடம் அதிக அளவில் பணம் உள்ளதால், எஸ் சி ஓ பணிகளில் அவர்களால் வேகமாக இயங்க முடிகிறது'' டெல்லி #BeyondFakeNews நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். அக்கட்சியின் சமூக ஊடக விவகாரங்களில் பொறுப்பாளருமான திவ்யா ஸ்பந்தனா.
- "அரசியல் கட்சிகள் தகவல்களை சரிபார்த்த பின்னரே செய்திகளை பகிருகின்றனர்" என பாஜகவின் தொழில்நுட்ப பிரிவின் பங்கஜ் ஷுக்லா தெரிவித்தார்.
புனே
"தற்போது இந்தியாவில் நடைபெறும் அனைத்தும் ஒழுங்கற்ற முறையிலேயே நடக்கின்றன. சில வலதுசாரி இணையதளங்கள், போலிச் செய்திகளை பரப்பி வருகின்றன. அவர்களுக்கு யாரோ பண உதவி வழங்குகிறார்கள்." என மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார் முன்னாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சௌஹான்
- ''இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் பத்திரிக்கையாளர்களாக மாற வேண்டும். ஊடகத்தில் செய்திகள் சட்டவிதிகள் இருப்பதுபோல சமூக ஊடகத்திலும் செய்திகளை பகிரும் போதும் அவற்றை கண்காணிக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும்'' என மும்பை கருத்தரங்கில் பேசிய சமூக செயற்பாட்டாளரான விஷ்வாம்பர் சவுத்திரி தெரிவித்தார்.
- ட்ரோலிங் எனப்படும் கேலிகளை அதன்மூலமாகவே கட்டுபடுத்த முடியும் என்றார் மஹராஷ்டிராவின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்யஜித் டாம்பே.
ஹைதராபாத்
- "மஹாபாரதத்தில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக கிருஷ்ணன் பரப்பிய பொய்யால் துயருற்ற துரோணரை பாண்டவர்கள் கொன்றனர். இது மஹாபாரதப் போரின் போக்கை மாற்றிய முக்கிய நிகழ்வு என்று குறிப்பிட்டார் ஹைதராபாதில் நடந்த #BeyondFakeNews கருத்தரங்கில் பேசிய மத்திய தகவல் ஆணையர் மாடபூஷி ஸ்ரீதர்
அமிர்தரஸ்
- ''அரசியலில் போலிச் செய்திகள் குறிப்பிட்ட அளவில் வினையாற்றுவது போல பல்கலைக்கழகங்களிலும் அவற்றின் பங்கு உள்ளது. தற்போது போலிச் செய்திகள் பகிரப்படுவது திட்டமிட்ட ஒரு செயலாக நடைபெறுகிறது'' என்று தெரிவித்தார் இந்த கருத்தரங்கில் பேசிய பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவரான ஹசன் ப்ரீத்.
- பெண்கள் பல நூற்றாண்டுகளாக கேலிகளை சந்தித்து வருகின்றனர் ஆனால் இப்போதுதான் ஆண்கள் அதனை உணருகின்றனர் என்று தெரிவித்தார் நிகழ்ச்சியில் பங்குகொண்ட ஆராய்ச்சியாளர் கோமல் ஜேபி சிங்
அகமதாபாத்
- "போலி செய்திகள் பகிரப்படுவது சமூக ஊடகத்தினால் அதிகரித்தது. அது சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கும் வித்திட்டது" என நவ் குஜராத் சமயின் ஆசிரியர் அஜெய் உமாத், தெரிவித்தார்.
- "போலி செய்திகளுக்கு ஊடகங்கள் பொறுபில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். போலி செய்திகளுக்கு ஊடகங்களும் பொறுப்பு" என்று தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் ஓசா.
- "ட்ரோலிங் ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்துகளை நீங்கள் பதிவு செய்தால் அதற்காக கேலி செய்யப்படுகிறீர்கள். பிஜேபி ஆதரவாளர்கள் அதிகமான தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதாக தெரிகிறது" என்று தெரிவித்தார் ஆல்ட் நியூஸ் அர்ஜீன் சித்தார்த்.
லக்னெள
- போலி செய்திகளை பரப்புவர்கள் தேசித்திற்கு எதிரானவர்கள் என்று லக்னெளவ் நிகழ்ச்சியில் பேசிய உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
- "பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உரிய சட்டத்தை கொண்டு வருவதன் மூலம், போலிச் செய்திகளை தடுக்க முடியும்." என உத்தர பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் ஷர்மா தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :