'போலிச் செய்திகளை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்'' - நடிகர் பிரகாஷ் ராஜ்

போலிச் செய்திகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் போக்கு நிலவுகிறது என்று திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டம் பிபிசி சார்பில் சென்னையில் திங்கட்கிழமை தொடங்கியது. அதில் போலிச் செய்திகளின் தாக்கத்தை விவாதிக்கும் அமர்வில் பிரகாஷ் ராஜ் பங்கேற்றுப் பேசினார்.

போலிச் செய்திகள் விவகாரத்தில் சில சமூக ஊடக பயன்பாட்டாளர்களால் தனக்கு ஹிந்தி எதிர்ப்பாளர், நகர்ப்புற நக்சலைட், அற்பக் கும்பலைச் சேர்ந்தவன், இந்திய எதிர்ப்பாளர் என்று பல பட்டங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றைக் கடந்து போகும் பலம் தனக்கு இருக்கிறது என்றும் பிரகாஷ் கூறினார்.

போலிச் செய்திகள் பரவுதல் எனும்போது தனக்கு காட்டுத்தீ பரவும் ஞாபகம் வருவதாக கூறிய அவர், காட்டுத்தீ என்பது "பரவும் தீ" என்பது மட்டுமல்ல; பற்றிக்கொள்ள தயாராக இருக்கும் மரங்களும்தான்" என்றார் அவர்.

பிபிசி ஆய்வின் முழு அறிக்கை

போலிச் செய்திகளை பரப்புவது யார், அவர்கள் எப்படி பரப்படுகிறார்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கி பிபிசி மேற்கொண்ட ஆய்வின் முழு அறிக்கை இது.

நமது சமூகத்தில் போலிச் செய்திகளை பரப்புவது மட்டுமின்றி அதை உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாக இருக்கிறது என்று கூறிய அவர் ஒரு முறை தமது மனைவி அப்துல் கலாம் மறைவு தொடர்பாக பகிர்ந்த போலிச் செய்தி குறித்தும் நினைவுகூர்ந்தார்.

அப்துல் கலாம் மறைந்ததாக வந்த தகவலை சரிபார்க்காமல் அவர் பகிர்ந்தார் என்றும் அந்த செய்தியின் உண்மைத்தன்மையை கலாமின் உதவியாளரிடம் சரிபார்த்த பிறகு அது பற்றி தனது மனைவியிடம் விசாரித்ததாகவும் பிரகாஷ் ராஜ் கூறினார்.

அப்போது, போலிச் செய்தி என்பதை விட, "நமக்கு வந்த தகவலை உடனே பரப்புவது கடமைதானே" என்ற மனோபாவமே தனது மனைவியிடம் இருந்தது என்றும், அவரைப் போலவே, வரும் தகவலை சரிபார்க்காமல் பரப்பும் நிலையை பலரும் கொண்டிருந்ததை அறிய முடிந்தது என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

இதே போல விகடனில் தான் எழுதிய காலகட்டத்தில் நடந்த, மற்றொரு உண்மை சம்பவத்தையும் பிரகாஷ் ராஜ் நினைவு கூர்ந்தார்.

ஓர் ஊரில், அப்பா நிலையில் இருப்பவருடன் ஒருவருக்கு சண்டை. அந்த தந்தை தனது மகளை வெளிநாட்டில் வேலை பார்க்கும் மணமகனுக்கு திருமணம் செய்து மாமனார் ஊரில் குடிவைக்கிறார். ஒருநாள் திடீரென அந்த பெண் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தபோது காரில் வந்தவர்கள், உனது தந்தைக்கு உடல்நலமில்லை என்று கூறி, அந்த பெண்ணை அழைத்துச் சென்று 200 கி.மீ. தூரத்தில் விட்டு விடுகிறார்கள்.

அவரது ஊரிலோ அந்த பெண் ஊரை விட்டே ஓடி விட்டார் என்ற வதந்தி பரவியது. அந்த பெண் தட்டுத்தடுமாறி உதவி கேட்டு மாமனார் வீட்டுக்கு வந்தபோது, ஊரை விட்டே நீ ஓடிச் சென்றதால் இனி வீட்டுக்கு வர வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் கூறு விடுகிறார்கள். பிறகு தனது தந்தை வீட்டுக்கு சென்றால், வீட்டை விட்டு நீ ஓடி விட்டதாக வந்த செய்தி்யால் குடும்ப மானம் போய் விட்டது என்று கூறுகிறார்கள்.

இப்படித்தான் வதந்தியை உள்வாங்கிக் கொண்டு எதிர்வினையாற்றும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

மேலும் அவர், திடீரென பத்து, பதினைந்து மாடியில் உள்ள கட்டடத்தில் நிற்கும் யாரையோ பார்த்து கீழே இருப்பவர், அந்த நபர் கீழே குதிக்கப் போவதாக கதை கட்டி விடுவார். உடனே மாடியில் நிற்பவரை வேடிக்கை பார்க்க பத்து, பதினைந்து பேர் கூடுவார்கள். அந்த கதையை கட்டிவிட்டவர் அங்கிருந்து சென்றிருப்பார். அடிப்படையில், மனிதர்களுக்கு இருக்கும் மனநிலையே, தனக்கு நிறைய தகவல்கள் தெரியும். தான் மற்றவர்களை விட புத்திசாலி போன்று என்று காட்டுவதுதான். போலி செய்தியின் விளைவை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தர்க்கம் செய்வதை விட கிடைத்த தகவல்களை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் வலியுறுத்தினார்.

போலிச் செய்திகளின் தாக்கத்துக்கு இன்றைய அரசியல் நிலைமையும் ஒரு காரணம் என்றார் பிரகாஷ்ர ராஜ்.

"எல்லோரும் ஒரு சமூகத்தின் பலவீனத்தை இலக்கு வைத்து செயல்படுகிறார்கள். எங்காவது ஒரு கெடுதல் நடந்தால் அதை உடனே பரப்பி விட வேண்டும், அதை நம்பி விட வேண்டும் என்ற ஆபத்தான மனநிலையில் இருக்கிறார்கள். அதை மிகுந்த ஒருங்கிணைந்த முறையில் அவர்கள் செய்கிறார்கள்" என்றார் பிரகாஷ் ராஜ்.

உலகில் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கும் மேலான அரசியலை பார்த்தோமேயானால், வதந்தி, போலிச் செய்திகளால் ஏதோ வகையில் அவை தாக்கத்தை சந்தித்தவையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

"மனிதர்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும் ஒரு விஷயத்தை உடனே நம்பி விடுவார்கள். உதாரணமாக, திடீரென ரூ. 2,000 நோட்டில் ஒரு சிப் இருக்கிறது. அதனால் அது எங்காவது பதுக்கி வைக்கப்பட்டிருந்தால், அந்த சிப் காட்டிக் கொடுத்து விடும் என்று கூறினார்கள். அதை நம்பும் வகையில் அப்பாவி மக்களின் மனநிலை இருந்துள்ளது. அது எல்லா காலத்திலும் இருந்துள்ளது. ஆனால், இன்றைக்கு, ஒருங்கிணைந்த வகையில், அதை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். அது ஆபத்தானது. அது பற்றிய நிறைய பேசி, விவாதித்து, உணர வேண்டிய தேவை உள்ளது" என்று பிரகாஷ்ராஜ் கூறினார்.

தவறான விஷயத்தை பரப்புவதால், யாருக்கோ நேரும் விபத்து, மீண்டும் நமக்கே நேரலாம். ஞாபகமில்லாத சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம். ஒரு பொய்யை நம்பிக்கொண்டே பயணம் செய்கிறோம். போலிச் செய்தி பரப்புவோரை பிடிக்க வேண்டும், அவர்கள் பரப்பியது போலியான செய்தி என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை நமக்கு ஏற்பட வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் வலியுறுத்தினார்.

"இந்த தருணத்தில் பிபிசி தொடங்கியுள்ள போலிச் செய்திகளுக்கு எதிரான முயற்சி தொடர வேண்டும். இது மிகப்பெரிய சமூக பொறுப்புணர்வைக் கொண்டது" என்றார் பிரகாஷ் ராஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :