You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோயாற்றில் அணை கட்டினால் கர்நாடகத்துக்கான தண்ணீர் தடுக்கப்படுமா? #BeyondFakeNews
காவிரி நீர்ப் பிரச்னை, வனவிலங்குகள் துறை என பரவலாக வதந்தி பரப்புவோருக்கு போலிச் செய்திகள் உதவின என்று சூழலியலாளர் "ஓசை" காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிபிசியின் 'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டம் தொடர்பான அமர்வில், ஓசை காளிதாஸ் பேசுகையில், சூழலியலில் தான் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மோயாறு அணை
"எல்லா துறை போலவே, சூழலியலிலும் அவ்வப்போது தவறான தகவல் வந்து கொண்டே இருக்கும். மற்றவற்றில் கூட இது தவறாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், சூழலியலில் அந்த எண்ணத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலி தகவல் பரவும்" என்றார் அவர்.
உதாரணமாக, கர்நாடகத்துடனான தமிழகத்தின் காவிரி நீர் பெறும் போராட்டங்கள் நடந்த காலகட்டத்தில், "கர்நாடகத்துக்கு அச்சம்: ஊட்டியில் அணை கட்ட இளைஞர்கள் முடிவு" என்றும், "தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகத்துக்கு மோயாறு போகிறது. அங்கே அணை கட்டி விட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தேவையில்லை. இதனால் நடுங்கிக் கொண்டிருக்கிறது கர்நாடகம்" என்ற தகவல் தொடர்ச்சியாக பகிரப்பட்டது.
ஆனால், உண்மை என்னவெனில் "மோயாறு கர்நாடகத்துக்கே செல்லாது. மோயாறு நீர் முழுவதும் தமிழகத்திலேயே ஓடுகிறது" என்று கூறிய காளிதாஸ், லட்சக்கணக்கில் பகிரப்பட்ட அந்த செய்தியைப் படித்தவர்கள் பலரும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யவில்லை என்றார்.
"சூழலியலில் அனைவரும் இயற்கை ஆர்வலர்கள். ஆனால், மரம் நடுவதுடன் நமது இயற்கை ஆர்வத்தை நிறுத்திக் கொள்கிறோம். அதே சமயம், அணுஉலை, மணல் பிரச்னை, மீத்தேன் பிரச்னை என அரசின் திட்டங்களை எதிர்க்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், உடனே அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக செய்திகள் வேகமாக பகிரப்படும். வெளிநாட்டு சதியால் அவர்கள் செயல்படுவதாக கூறப்படும்" என்று காளிதாஸ் சுட்டிக்காட்டினார்.
- Live: போலிச் செய்தியை கண்டுபிடிக்க 6 மந்திரங்கள் #BeyondFakeNews
- தேசியவாதத்தின் பெயரால் பரப்பப்படும் போலிச் செய்திகள் #BeyondFakeNews
- போலிச் செய்திகளை எதிர்கொள்ள உங்களுடன் கரம் கோர்க்கும் பிபிசி
- தவறான தகவல் பரப்பலுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை முன்னெடுக்கும் பிபிசி
- 'போலிச் செய்தி’ என்ற சொல்லாடல் எப்போது தொடங்கியது?
வேறுபாடு
ஜீவகாருண்யத்துக்கும் வனவிலங்கு மேலாண்மைக்கும் இடையே வேறுபாடு புரியாதபோது, சிலர் போலிச் செய்திகளைப் பகிர்வதும் உண்டு என்று கூறி சில நிகழ்வுகளை காளிதாஸ் நினைவுகூர்ந்தார்.
"கோயம்புத்தூரில் மதுக்கரை மகாராஜா என்ற பெயர் கொண்ட யானை, பிரச்னைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டது. முகாமுக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த யானை உயிரிழந்து விட்டது. ஆனால், இன்றுவரை மயக்க ஊசி போட்டு அந்த யானை கொல்லப்பட்டது என்றே செய்தி பகிரப்படுகிறது.
ஆனால், உண்மையில் அந்த யானைக்கு ஊசி போடுவதற்காக ஒரு மருத்துவர் நின்ற காட்சியை, எவ்வளவு கொடூரமாக இந்த நபர் யானையை கொல்ல தயாராகிறார் என்று சமூக ஊடகத்தில் செய்தி பதிவு செய்தார்கள். அதனருகே, ஒரு குழந்தைக்கு பக்கத்தில் ஒரு மருத்துவர் ஊசி போடுவதை, எவ்வளவு கொடூரமாக இந்த மருத்துவர் குழந்தையை கொல்லப்போகிறார் என்று செய்தி போட்டால் அது எவ்வளவு அபத்தமாக கருதப்படுமோ அந்த அளவுக்கு அந்த யானைக்கு செலுத்தப்பட்ட ஊசி சம்பவம். நமக்கு அக்கறை யானையை காப்பாற்றுவது.
ஆனால், அதன் இயல்பு புரியாமல், யானை மீது இருக்கும் அக்கறையால், ஒரு மேலாண்மை உந்துததலால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள்" என்றார் காளிதாஸ்.
அதுபோலவே, நீலகிரியில் மனிதர்களை கொல்லும் புலி பற்றிய செய்தி வந்தபோதும் தவறாக தகவல் பரப்பப்பட்டது என்றார் காளிதாஸ்.
ஊட்டியில் இருபத்தியோரு நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கைய ஒரு புலி முடங்கச் செய்தது. மூன்று பேரை அது கொன்றது. நான்காவதாக ஒருவரை அது கொல்லலாமோ என்ற பீதி தீவிரமானது. தவிர்க்க முடியாத சூழலில் அந்த புலியை கொல்கிறார்கள். ஆனால், அந்த புலியை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக மயக்க மருந்து கொடுத்து அதை பிடித்திருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பினார்கள் என்றார் காளிதாஸ்.
இந்திய காடுகளில் ஒரு புலி
இந்திய காடுகளில் ஒரு புலியை மயக்கமாக்கி பிடிக்க முடியுமா என்பதை முதலில் அறிந்து கொண்டு அது பற்றி கருத்து பகிர வேண்டும். உயிருடன் அந்த புலியை பிடிக்கலாமே என்றெல்லாம் பலரும் தகவல் பகிர்ந்தார்கள். சூழலியலில் அடிப்படை புரிதலின்றி இப்படியும் தகவல் பகிர்கிறார்கள் என்று காளிதாஸ் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இதுபோல, ஊட்டி அருகே ஐந்து தலை நாகம் தென்பட்டது என்று பிரபல பத்திரிகையில் தகவல் பகிரப்பட்டது. அந்த படத்தை தான் பதிவு செய்ததாக அந்த பத்திரிகையாளர் கூறியிருந்தார். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அந்த நல்ல பாம்பு, ஒரு தலையா, இரண்டு தலையா என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டு, கடைசியில் ஐந்து தலை நாகம் என்று கூறினார்கள். ஆனால், அத்தகைய நாகம் இல்லை. என்று காளிதாஸ் குறிப்பிட்டார்.
இன்றைக்கும் புலி, சிங்கம் போன்ற விலங்குகள் வாழும் உதகை வனப்பகுதியில் என்று பிரபல நாளிதழில் செய்தி வருகிறது. சிங்கம், இந்தியாவின் கிர் வனப்பகுதியைத் தவிர வேறு எங்கும் இல்லை என்பதை அறியத் தவறுகிறோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இயற்கை சூழலியல் பற்றிய அடிப்படை தகவலின்றி, புரிதலின்றி நாம் தகவல்களை நம்புவதால்தான் இது நேர்கிறது. இயற்கைக்கு எதிராக அரசு பல திட்டங்களை முன்னெடுக்கும்போது, அதை விவாதிக்க யாரும் முனைப்பு காட்டுவதில்லை. அதை எதிர்ப்பவர்களுக்கு எதிரான தகவல்கள் வேகமாக சமூக ஊடகங்களில் பரப்பபடுகின்றன. தனி மனிதர்கள் அதனால் காயப்படுத்தப்படுகிறார்கள். அத்தகைய மோசமான சூழ்நிலையைத்தான் சூழலியில் ஆர்வலர்கள் எதிர்கொள்கிறார்கள் என்று காளிதாஸ் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :