ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

இந்திய நாணயம்

பட மூலாதாரம், Indraneel Chowdhury/NurPhoto via Getty Images

    • எழுதியவர், சமீர் ஹாஸ்மி
    • பதவி, இந்திய வணிக செய்தியாளர், பிபிசி

டாலர் மதிப்பு வலுவாகியிருப்பது 2018ம் ஆண்டு உலக நாடுகளின் வளரும் நாணய சந்தையை மிகவும் பாதித்திருக்கிறது.

இவ்வாறு பாதிப்பு அடைந்திருக்கும் நாணயங்களில் ஒன்றான இந்தியாவின் ரூபாய், கடந்த சில மாதங்களில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

2018ம் ஆண்டு இந்திய நாணயம் அதன் 15 சதவீத மதிப்பை இழந்து, ஆசிய நாடுகளில் மிகவும் மோசமான மதிப்பு வீழ்ச்சி கண்ட நாணயமாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் 11ம் தேதி வரை ஒரு டாலர் ரூ.67 என்பதில் இருந்து ரூ. 74.4 என இந்திய ரூபாயின் மதிப்பு மிக விரைவான வீழ்ச்சி கண்டது.

மக்கள்

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP/Getty Images

இந்திய அரசு மீது பொது மக்களின் கோபம் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலகலாம் என்று தகவல்கள் வெளிவந்த நிலையில் புதன்கிழமை இந்திய நாணயம் மீண்டும் ஒரு டாலருக்கான மதிப்பு ரூ. 74 என்று பதிவானது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்போடு, இந்தியாவின் நிதி சந்தைகளில் இருந்து விரைவான வெளிநாட்டு முதலீடுகள் இத்தகைய பெரும் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உலகில் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு புதிய சவால்களை கொண்டு வந்துள்ளது.

பணவீக்கம்

இந்தியா ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காண்பது பணவீக்கம் அதிகரிக்கின்ற அழுத்தத்தை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் மிக பெரிய கவலையாக உள்ளது.

மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு தேவையான சுமார் 80 சதவீத எரிபொருள் தேவை இறக்குமதி மூலமாகதான் நடைபெறுகிறது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் எரிபொருளுக்காக இந்தியா அதிக டாலர் செலவு செய்ய வேண்டியுள்ளது.

இருமடங்கு பாதிப்பை வழங்கும் வகையில் சுதந்திரமாக வீழ்ச்சியடையும் ரூபாயும், அதிகரிக்கும் எண்ணெய் விலையும் செப்டம்பர் மாதம் 5.3 சதவீதத்தை தொட்டுள்ள நிலையில், மேலும் அதிக பணவீக்கத்திற்கு வழிவகுக்கும்.

உணவு பொருட்களின் குறைவான விலைவாசி காரணமாக, கடந்து இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கு குறைவாக இருந்து வந்தது.

ஆனால், இது விரைவில் மாறிவிடும். அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைவாசியால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகமாகி சந்தையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையேற செய்யும்.

ரூபாய் மதிப்புவீழ்ச்சியை உணவு பொருட்களின் விலைவாசி குறைவாக இருந்தது மென்மைப்படுத்தியுள்ளது. இந்நிலை மாறுகின்றபோது, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 5 சதவீதம் வாக்கில் சில்லறை பணவீக்கம் இருக்குமென எதிர்பார்க்கலாம் என்கிறார் 'கேர்' (சிஎஆர்இ) தர மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமை பொருளியலாளர் மதன் சப்நவிஸ்.

வட்டி வீதங்கள்

ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP/Getty Images

வட்டி விகிதங்களை கடந்த 4 ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி நிலையாக வைத்திருந்த்து. ஆனால், அதிகரிக்கின்ற பணவீக்கத்தை சமாளிக்க ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் முக்கிய கடன் வட்டிவீதத்தை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்து நிதி சந்தையில் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கொள்கை மீளாய்வு கூட்டத்திற்கு பிறகும் இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக வீழச்சியடைந்து வருவதால், டிசம்பர் தொடக்கத்தில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம் என்று பலர் கூற தொடங்கிவிட்டனர்.

இதனால், வீடு மற்றும் கார் கடன் வட்டி விகதங்களை அதிகரிக்கும். அதன் விளைவாக வாடிக்கையாளரின் செலவுகள் பாதிக்கப்படும்.

அதிக வட்டி விகிதமும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு பெருநிறுவன கடன்

டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தைகளில் இருந்து இந்திய நிறுவனங்கள் திரட்டியுள்ள வெளிப்புற கடன்களை திரும்ப செலுத்துகின்ற தொகை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின்படி, சுமார் 221 பில்லியன் டாலர் வரை இருக்கும் இந்தியாவின் வெளிப்புற குறுகியகால கடன்கள், குடியுரிமை அல்லாதவர்களின் வைப்புத்தொகைகள், நிறுவனங்களின் வெளிநாட்டு வணிக கடன்களின் காலம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.

மோதி

பட மூலாதாரம், EPA

கடன் வாங்குவோர் இந்த கடன்களை மீளாய்வு செய்து, அதிக வட்டியோடு பெற வேண்டியிருக்கும். இது அவர்களின் லாபத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தங்கள் இருப்புநிலைக் கடன்களில் ஏற்கனவே அதிக கடன்தொகை காரணமாக இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை அவர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்கிறார் சப்நாவிஸ்.

இறக்குமதி

டாலருக்கு நிகராக பலவீனமான மதிப்போடு ரூபாய் இருப்பது, இறக்குமதி பொருட்களையே நம்பியிருக்கும் மின்னணு, பொறியியல் மற்றும் வேதியல் துறைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கை
இலங்கை

சுமார் 65 சதவீத மின்னணு பொருட்களின் தேவையை நிறைசெய்வதற்கு இந்தியா இறக்குமதியை சார்ந்துள்ளது. இதில் பெரும்பாலும் சீனாவை சார்ந்துள்ள இந்தியாவுக்கு ஏற்படும் வர்த்தக பற்றாகுறை ஒரு காலாண்டுக்கு மேலாகவே உள்ளது.

உலகில் விரைவாக வளர்ந்து வருகின்ற திறன்பேசி சந்தையில் நிலவும் அதிக போட்டியால், குறைவான லாபத்தில் செயல்பட்டு வரும் செல்பேசி தயாரிப்பாளர்கள் மீது ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அழுத்தங்களை வழங்கி வருகிறது.

செல்பேசி

பட மூலாதாரம், Getty Images

இறக்குமதி பொருட்களின் விலையுயர்வை தாங்க முடியாமல் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவது பற்றி அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

மின்னணுத்துறை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு, குறிப்பாக நடுத்தர மற்றும் சிறிய நிறுவங்களும் தள்ளாடி வருகின்றன.

கடந்த சில மாதங்களில் தனது லாபங்களை எல்லாம் இழந்துவிட்டதாக பிபிசியிடம் கூறியுள்ளார் எல்இடி விளக்குகளை தயாரிக்கும் எவர்கிரீன் பொறியியல் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் ராவ்.

ரூபாயின் மதிப்பு இன்னும் சரிவடையுமானால், வரும் மாதங்களில் தாரிப்புகளை குறைக்க வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்படும் என்று அவர் மேலும் கூறினார்.

ஏற்றுமதி

இந்திய நாணயத்தின் மீது படர்ந்துள்ள இருண்ட மேகத்தால் நன்மைகளும் இருக்கவே செய்கின்றன.

கப்பல்

பட மூலாதாரம், Frédéric Soltan/Corbis via Getty Images

ஏற்றுமதி சார்ந்து இருக்கின்ற தகவல் தொழிற்நுட்ப சேவை, மருந்து மற்றும் ஜவுளித்துறைகளுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நேர்மறையான வளர்ச்சியாகும்.

கடந்த சில ஆண்டுகளில் மந்தமாகவே இருந்து வந்த இந்தியாவின் ஜவுளித்துறை இந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

இந்த நிதியாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்றுமதி மதிப்பு 136.10 பில்லியன் டாலரை தாண்டியது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த ஏற்றுமதியை விட இது 16 சதவீதம் அதிகமாகும்.

2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஏற்றுமதியின் மதிப்பு 350 பில்லியன் டாலரை தாண்டும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

உலக வர்த்தகத்தில் எதிர்மறை பாதிப்பை வழங்கும் அமெரிக்கா சீனாவோடு நடத்தும் வர்த்தகப் போரை அதிகரித்து வருவதோடு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கிடைக்கும் முழு நன்மையை எற்றுமதியாளர்கள் பெற்று கொள்ள முடியாது போய்விடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக ஏற்றுமதியில் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது பிரச்சனையாகும். இது லாபமடைய அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தாலும், வர்த்தகப்போர் இந்த நன்மைய நீர்த்துப்போக செய்துவிடும் என்கிறார் சோஃபாத்.

பணபுழக்க பற்றாகுறை

ஏழைகளை இலக்கு வைத்து சமூக நலவாழ்வு திட்டங்களுக்கு அதிக செலவுகளை அரசு செய்து வருகிறது.

மோதி

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பண மதிப்பு வீழ்ச்சி பணபுழக்க பற்றாகுறையை (வருவாய் மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளியை) விரிவடைய செய்து அரசு நிதியை இந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை செய்துள்ளது.

யுபிஎஸ் எனப்படும் சுவிஸ் தரகு நிறுவனத்தின்படி, ஜிஎஸ்டி வரி வசூலிப்பிலுள்ள தீமைகள் மற்றும் அதனை பிரித்து வழங்குவதோடு மாநில நிதி நிலையும் சேர்த்து நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது, இந்த நிதியாண்டில் இந்திய அரசின் பட்ஜெட் பற்றாகுறை மதிப்பீடான 5.9யை விட 6.5 சதவீதமாக பணபுழக்க பற்றாகுறை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பணபுழக்க பற்றாகுறை வளர்ச்சிக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் அழுத்தத்திற்கு உள்ளாகி, பணபுழக்க பற்றாகுறையை கட்டுப்பாட்டில் வைக்க அரசு முக்கிய செலவினங்களை குறைக்க வேண்டியிருக்கும்.

அரசியல் பாதிப்பு

பண மதிப்பு வீழ்ச்சி கண்டிருப்பது இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலை 2019ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

நவம்பர் மாதம் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

பண மதிப்பு வீழ்ச்சி தொடருமானால் பணவீக்கம் அதிகரிப்பதோடு, விலைவாசிகளும் உயரும். இத்தகைய நிலை இந்த தேர்தல்களில் மோடியின் நோக்கங்களை பாதிப்படைய செய்யும்.

வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பது, இந்தியாவின் விவசாய துறையை உயிர்ப்பிக்க செய்தல் என கடந்த தேர்தலின்போது, வழங்கிய பொருளாதார வாக்குறுதிகளை நிறைவேற்ற மோதி தவறிவிட்டார் என்று விமசகர்கள் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் விலைவாசி மற்றும் ரூபாயின் மதிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் நிலையாகாவிட்டால், 2019ம் ஆண்டு இன்னுமொரு 5 ஆண்டுகளுக்கு தன்னை தேர்வு செய்ய தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் நரேந்திர மோடியின் பிரசாரம், இத்தகைய நிலைமையை நியாயப்படுத்தும் நிலைக்கு தள்ளிவிடும் என்கிறார்கள் அரசியல் ஆயர்வாளர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: