இந்தியர்களின் டிண்டர் டேட்டிங் கதைகளை நீங்கள் அறிவீர்களா? #100IndianTinderTales

#100IndianTinderTales - இந்த விஷயத்துக்கு பின்னணியில் இருப்பவர் இந்து ஹரிகுமார். யார் இவர்? இந்த ஹேஷ்டேக் சொல்லும் சேதி என்ன?

இந்து ஹரிகுமார் இந்தியர்களின் ஆன்லைன் டேட்டிங் அனுபவங்களை சித்திரம் தீட்டியிருக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், தன்னுடைய இந்த திட்டத்தை தாம் செயல்படுத்த உந்துதலாக இருந்தது எது? எப்படி இத்திட்டம் வளர்ந்தது என்பதை விளக்கினார்.

''நீ நிச்சயம் ஒரு ஐரோப்பியரை காதலிக்க வேண்டும்'' இந்த வார்த்தைகளை என்னுடன் வீட்டில் வசிக்கும் ரஷ்ய தோழி கூறியதும்தான் நான் டிண்டரை பயன்படுத்த முடிவு செய்தேன்.

எனக்கு வயது 35. வியன்னாவில் யாருடன் உறவில் இல்லை. உண்மையில் மிகவும் விருப்பமற்று இந்திருந்தேன். நான் காதலில் விழுவதற்கு வாய்ப்பையே இல்லை என உணர்ந்திருந்தேன். ஆகவே யாரையும் சந்தித்தலும் கூட அதனால் யாதொரு பயனும் இல்லை என நினைத்திருந்தேன். மேலும், எனக்கு ஜெர்மனிய மொழியும் தெரியாது. ஆகவே டிண்டரில் யாரவது எனக்கு ஏற்ற துணையாக இருப்பார்கள் என நினைத்து நான் வலது- ஸ்வைப் செய்தால் சம்பந்தப்பட்ட ஆண் உடலுறவுக்காக என் வீட்டு வாசலில் வந்து நிற்பாரோ என கவலை கொண்டிருந்தேன்.

விமான பயணத்துக்கு பின்னால் களைப்பும், வேறு வேலை இல்லாதா சமயமொன்றில் நான் அந்த டேட்டிங் செயலியை தரவிறக்கி பயன்படுத்த துவங்கினேன். இது உள்ளூர்வாசியை மட்டும் சந்திக்க ஏற்ற தளம் மட்டும் இல்லை, நான் பிரவுன் நிறம் கொண்டவள் என்பதால் வெள்ளை இனத்தவர் பிரதானமாக வசிக்கும் அந்நாட்டில் எனக்கான 'டேட்டிங் வாய்ப்பு' அதிகமானதாக இருந்தது.

அடுத்த சில வாரங்களுக்கு, நான் அருங்காட்சியகம், காபி கடைகள் போன்றவற்றுக்குச் சென்றுகொண்டிருந்தேன். கேக், மது, வண்ணக்கலைப்படங்கள் மற்றும் வேடிக்கை பேச்சுகளோடு அந்நாட்கள் கழிந்தது.

வியன்னாவில் நான் மூன்று மாதங்கள் கழித்தபிறகு, இந்தியாவிலும் டிண்டரை முயற்சி செய்து பார்க்க முடிவு செய்தேன்.

அது டெல்லியாகவோ மும்பையாகவோ இருக்கட்டும் ஒரே மாதிரி நடந்தது. எனக்கு ஏற்ற துணை அமையவில்லை. நான் கவர்ச்சிகரமான ஓர் அந்நியராக நீடிக்கவில்லை.

எனக்கான ''டேட்டிங் வாய்ப்பு'' குறைந்துவந்தது நான் ஒரு சமுக பரிசோதனையை செய்வதற்கு உந்தித்தள்ளியது. நான் மக்களிடம் அவர்களது டிண்டர் டேட்டிங் கதைகளை எனக்கு அனுப்புமாறு கேட்டேன். அவை நான் விளக்க வண்ணப்படமாக தீட்ட முடியும் என நம்பினேன்.

பேராசையோடு #100IndianTinderTales (நூறு இந்திய டிண்டர் கதைகள்) என அதற்கு பெயரிட்டேன். ஆனால் முதலில் எனக்கு நம்பிக்கையில்லை. மக்கள் எப்படி முற்றிலும் அந்நியமான ஒருவரிடம் தங்களது அந்தரங்க கதைகளை பகிர்வார்கள் என யோசித்தேன். ஆனாலும் எனது முயற்சியை தொடர்ந்தேன்.

மொபைல் மூலமாக அழைப்பு விடுத்தேன், பேஸ்புக்கில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அனைத்து பெண் வெறுப்பையும் சித்திரம் தீட்ட முயன்றேன்.

டிண்டரில் எனக்கு ஏற்ற ஓர் நபர் கிடைத்தபோது வாய்வழி புணர்ச்சி தொடர்பான ஓர் கேள்விக்கு நான் அளித்த பதிலுக்கு அந்நபர், '' இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க டிண்டர் ஏற்ற தளம் அல்ல. இப்படி பதிலளித்தால் குணமற்ற பெண் என முத்திரை குத்தப்படுவாய்'' என்றார்.

நான் டிண்டரில் அவர் எனக்கு சரியானவர் இல்லை என இடதுபுறமாக ஸ்வைப் செய்து விட்டு வரையத் துவங்கினேன். அதுதான் இத்தலைப்பில் என்னுடைய முதல் சித்திரமாக அமைந்தது.

இறுதியில் இந்தியாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் இருக்கும் இந்தியர்கள் தங்களது கதைகளை என்னிடம் பகிர துவங்கினார்கள். இதன் முடிவாக ஆன்லைன் டேட்டிங் என்பது அவர்கள் நினைத்தது போல எளிதானதாக இல்லை என்பது தெரியவந்தது.

என்னுடைய வயதையொத்த நகர பெண்கள் டிண்டரில் சகஜமாக டேட்டிங் மேற்கொள்வதில் பதட்டமும் அவமானமும் கொண்டிருந்தனர். என்னுடைய நண்பர்கள் என நினைப்பார்கள்; எனது குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள்? '' நான் பலருடன் உடலுறவு கொள்ளும் நடத்தை குறைந்த பெண்ணாக மாறி வருகிறேனா?'' மற்றும் ''நான் விவாகரத்தானவளாயிற்றே, எனது குழந்தைகள் என்ன ஆகும்'' என்றெல்லாம் விதவிதமான கவலைகள் கொண்டிருந்தார்கள்.

இளவயதினர் சிலர் சலித்து போன சமயங்களில் டிண்டரில் அனுபவம் கொள்ள துவங்கினர்.

அதில் சிலருக்கு, இவ்வகையான உறவுகள் எப்போதும் நிஜ வாழ்வில் உறவாக மலரப்போவதில்லை எனினும் அவர்களுக்கு இவை மிகவும் முக்கியம். வேறு சிலருக்கு, திருமணம் ஏற்பாடுக்கு ஒப்புக்கொள்வதற்கு முன்னதாக இவ்வகையான உறவுகளை புரிந்து கொள்ளும் வழியாக அமைகிறது. வேறு சிலருக்கு விரைவான ஓர் உறவுக்கானதாக டிண்டர் அமைகிறது.

ஆனால் இவர்கள் அனைவரிடமும் நான் பார்த்த பொதுவான இணைப்பு என்னவெனில், அவர்கள் அனைவருக்கும் அவர்களது மொபைல் அந்தரங்கமானதாகவும், முன்முடிவற்ற சுதந்திர வெளிக்கான இடமாகவும் இருக்கிறது. அங்கே அவர்களால் தங்களது பொழுதுபோக்குக்கான விஷயங்களை தேடவும் குறிப்பாக உறவுகளை தேடவும் உதவுகிறது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தான் உயரம் குறைவாக இருந்ததால் பல முறை டேட்டிங் உறவுக்கு நிராகரிக்கப்பட்ட பின்னர், ஓர் ஆண் தன்னுடன் டேட்டிங் செய்ய ஒப்புக்கொண்ட கதையை பகிர்ந்தார்.

'' நான் முதலில் உடலுறவு கொள்ள அழைப்பு விடுக்க முடிவு செய்தேன் ஆகவே அவர் என்னை நிராகரிக்க முடியாது என கருதினேன். ஆனால் அவர் என்னைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்பினார். முடிவாக நாங்கள் டேட் செய்ய முடிவெடுத்தோம். எங்கள் இருவரிடமும் பொதுவான விருப்பங்கள் நிறைய இருந்தது மேலும் அவருக்கு எனது உயரம் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை. அது எனக்கு மிகப்பெரிய விஷயம். நாங்கள் தற்போது நான்கு மாதங்களாக டேட்டிங்கில் இருக்கிறோம். இதற்கு முன்னர் என் வாழ்க்கையில் நான் இப்படி மகிழ்வாக இருந்ததில்லை'' என்றார்.

ஓர் ஆண் ஓரினச்சேர்க்கையாளர் டிண்டர் மூலம் தன் காதலனை கண்டறிந்ததை விளக்கினார்.

'' வெளிப்படையாக நாங்கள் ஒருவொருக்கொருவர் 'ஐ லவ் யூ' எனச் சொல்லிக்கொள்ள முடியாது. ஆகவே, நாங்கள் ஒரு குறியீடு மூலம் சொல்லிக்கொண்டோம். மேசையோ அல்லது வேறு எந்த தளமோ நாங்கள் We Will Rock You (வி வில் ராக் யூ) பாட்டின் தாளங்களை போடுவோம். அது எங்களுக்கு முக்கியமான ஒலியாக இருந்தது'' என்றார்.

இந்தியாவில் பாலிவுட் ஒரு மிகப்பெரிய செல்வாக்கை கொண்டிருக்கிறது. பெண்கள் அங்கே இன்னமும் செக்ஸ் பொருளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தியர்கள் இன்னமும் செக்ஸ் குறித்து ரகசியம் காப்பவர்களாவே இருக்கின்றனர். ஆகவே பல பெண்கள் தங்களது தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதை பார்க்க மிகவும் மகிழ்வாக இருந்தது.

'' எனது இதயத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் முற்றிலும் அந்நியமான ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வழிவகை அமைத்த டேட்டிங் தான் என் வாழ்க்கையில் செய்தவற்றில் மிகவும் குதூகலம் ஏற்படுத்திய ஒன்றாக இருந்தது. இவை தான் என்னை வாழ வைக்கிறது. நாங்கள் சந்தித்த பின்னர் ஒருநாள் இரவு முழுவதும் ஒரு நொடிகூட தூக்கம்கொள்ளாமல் செலவழித்தோம். நான் அதிகாலை வேளையில் கார் மூலம் என் வீட்டுக்கு சென்றேன். அப்போது என் முகம் முழுவதும் புன்னகை நிறைந்திருந்தது, என் மேனி பொலிவாக இருந்தது. ஆனால் குற்றஉணர்வு முழுமையாக இல்லை'' என ஒரு பெண் கூறினார்.

கடந்த இரண்டு வருடங்களாக, நான் டேட்டிங் மற்றும் பாலியல் உறவு தொடர்பாக வெவ்வேறு திட்டங்களுக்காக பல தனிநபர் கதைகளை சேகரித்தேன். நான் இன்னமும் டிண்டர் டேட்டிங் நாள்கள் தொடர்பான கதைகளை முற்றிலும் அந்நியமானவர்களிடம் கேட்டு வருகிறேன்.

பெண்கள் காதல் வாய்ப்புக்காக மட்டுமின்றி தங்களை கண்டடைவதற்கும் புதிய ஆண்களை சந்திக்க விரும்புவதாக தங்களது விருப்பங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.

#100IndianTinderTales நூறு இந்தியன் டிண்டர் கதைகள் என்பது பெண்கள் தங்களது டேட்டிங் மற்றும் பாலியல் கதைகளை வெளிப்படையாக பேசுவதற்கான தளமாக உருவாகியிருக்கிறது.

காதலை தேடாத பாலியல் உறவு, காதலை தேடும் பாலியல் உறவு பாலியல் பேச்சுக்கள், பாலியல் ரீதியிலான செய்தி பரிமாற்றங்கள், உடல்ரீதியான தாக்குதல்கள், திருமணத்தாண்டிய பாலியல் உறவுகள், ஓரினச்சேர்க்கை மற்றும் உடல்பருமனால் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் விவாதித்தார்கள்.

அவர்கள் ஒரு சிறிய பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கியுள்ளனர். தங்களது உடலையும் மனதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாலியல் உணர்வுள்ள ஒரு உயிரினமாக தங்களை கருதினர். தங்களது கதைகளை வெட்கப்படாமல் அல்லது சங்கடப்படாமல் அவர்கள் பகிர முன்வந்திருப்பது 'நானும்' (ME TOO) என வெளிப்படையாக பகிரும் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது.

#100IndianTinderTales நூறு இந்திய டிண்டர் கதைகளைச் சேர்ந்த சில படங்கள் ஜெர்மனியில் உள்ள குன்ஸ்தல்லே ப்ரீமேன் அருங்காட்சியகத்தில் காதல் என்பது என்ன? எனும் கண்காட்சியின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது. இக்கண்காட்சி 27 ஜனவரி 2019 வரை நடக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :