ரஃபேல் பேரம் பற்றி விசாரிப்பதை தடுக்கவே சிபிஐ இயக்குநர் அகற்றம்: ராகுல்காந்தி

ராகுல்காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஊடகங்களிடம் பேசும் ராகுல்காந்தி (கோப்புப் படம்)

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா காலவரையற்ற விடுப்பில் செல்லப் பணிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரஃபேல் போர் விமான பேரத்தில் நடந்த முறைகேட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் பங்கு பற்றி விசாரிக்காமல் தடுக்கவே அவர் விடுப்பில் அனுப்பப்பட்டார் என்றார்.

"பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் சேர்ந்தே சிபிஐ இயக்குநரை நியமிக்கவும், அகற்றவும் முடிவெடுப்பார்கள். இங்கே, நடு இரவில் சிபிஐ இயக்குநர் அகற்றப்படுகிறார். இது தலைமை நீதிபதிக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் அவமதிப்பு. சட்டவிரோதம்" என்று ராகுல்காந்தி கூறினார்.

மேலும் "சிபிஐ இயக்குநர் அகற்றப்பட்டது மட்டுமல்ல. அவரது அறை சீல் வைக்கப்பட்டது. வழக்கு விசாரணையை எதிர்கொண்டுவரும் ஒருவரிடம் சிபிஐ அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஏனெனில் அவரை பிரதமர் கட்டுப்படுத்த முடியும். தனக்கு எதிராக வழக்கு வராமல் பார்த்துக் கொள்ள முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல்காந்தி இந்தியாவின் தேசிய நிறுவனங்கள் ஒவ்வொன்றின் மீதும் மோதி தாக்குதல் தொடுத்துவருவதாகவும் ஆனால், அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி கொடுத்துவிட்டார் மோதி என்று சத்தமாக சொல்வோம் என்றும் அவர் கூறினார்.

"பிரதமரின் மனநிலை புரிகிறது. சிபிஐ விசாரணை அவரது அரசியல் வாழ்க்கையை கெடுத்துவிடும் என்று அவருக்குத் தெரிகிறது. பிரதமர் ஊழலில் ஈடுபட்டுவிட்டார். இப்போது பீதியில் இருக்கிறார்" என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

விடுப்பில் அனுப்பப்படுவதற்கு முன்னதாக முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அலோக் வர்மாவை சந்தித்து ரஃபேல் பேரம் குறித்து விசாரிக்கும்படி எழுத்துமூலமாக வேண்டுகோள் விடுத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: