கருணை கொலை வழக்கு : சிறுவனின் சிகிச்சைக்கு குவியும் உதவி கரங்கள்
இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி - கருணை கொலை வழக்கு : சிறுவனின் சிகிச்சைக்கு குவியும் உதவி கரங்கள்

பட மூலாதாரம், Scott Olson
ஒரு சிறுவனை கருணைக் கொலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அச்சிறுவனுக்கு மருத்துவம் மற்றும் பராமரிப்பு நிதி உள்ளிட்டவற்றை வழங்க பலரும் நீதிமன்றத்தில் அனுமதி கோரியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிதியை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற அறையில் இருந்த சிறுவனின் தந்தையை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
கடலூரில் தையல் தொழிலாளியாக இருக்கும் திருமேனி, 10 வயதான வாய் பேச முடியாத, அடிக்கடி வலிப்பு ஏற்படுவதோடு, மூளை பாதிக்கப்பட்டுள்ள தன் மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த மருத்துவ நிபுணர்கள் குழு, சிறுவனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறியது.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த தனியார் மறுவாழ்வு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாதிக்கப்பட்டுள்ள சிறுவனை டிரிகர் பாய்ண்ட் தெரப்பி என்ற இயன்முறை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது, தொழிலதிபர் ஜான் ஆபிரகாம் என்பவர் சார்பில் 1 லட்சம் ரூபாய் வரைவோலையை சிறுவனின் மருத்துவ செலவுகளுக்காக அவரது தந்தையிடம் வழக்கறிஞர் விவேகானந்த் வழங்கினார். அதே போல, வழக்கறிஞர் கணேஷ், ருக்மணி வேணுகோபால் ஆகியோர் பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்தனர். இதனையடுத்து, சிறுவனின் தந்தை, வழக்கறிஞர்களை நோக்கி கைக்கூப்பி நன்றி தெரிவித்ததாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தி இந்து (ஆங்கிலம்) : கங்கை நதியை பாதுகாக்க போராடியவர் மரணம்

பட மூலாதாரம், SANJAY KANOJIA
கங்கை நதியை பாதுகாக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து வந்த ஜி.டி அகர்வால் மாரடைப்பால் காலமானார் என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவருக்கு வயது 86.
உத்தர்காண்டில் கங்கை நதியோரம் நீர்மின் திட்டங்கள் செய்படுத்துவதற்கு எதிராக இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கங்கை நதி மாசுபடுவது மற்றும் அங்கள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக சிறப்பு சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் என்று அகர்வால் வயியுறுத்தி வந்தார்.
அவர் தேன் கலந்த எலுமிச்சை சாறு மட்டுமே பல நாட்களாக குடித்து வந்தார் என்று கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் என மேலும் அச்செய்தி கூறுகிறது.

தினமலர் - தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை மீட்பு

பட மூலாதாரம், David McNew
பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை புதரில் வீசி சென்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போரூர் அடுத்த காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் மாநகராட்சி மின்சார கூடுகாட்டில் உள்ள மழைநீர் வடிகால் அருகே, நேற்று முன்தினம் இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அங்கு அருகில் உள்ள கடையில் காவலாளியாக பணிபுரியும் ரவி என்பவர் சென்று பார்த்த போது, பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையின்ர் அக்குழந்தையை மீட்டு சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர் டிராவல் பேகில் குழந்தையை எடுத்துவந்து, புதரில் வீசிவிட்டு, உடன் வந்த ஆண் நண்பருடன் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன என அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












