தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: காவல்துறையிடம் விசாரிக்க சிபிஐ முடிவு
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Facebook/Getty Images
இது குறித்து சிபிஐ தலைமையக உயரதிகாரி பிபிசி தமிழிடம் கூறுகையில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வழக்கு பதிவு செய்துள்ளோம். தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
12 பிரிவுகளில் வழக்கு
"தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் பன்னிரண்டு பிரிவுகளின் கீழ் இருபது அமைப்புகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். விரைவில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள், அவர்களை தூண்டிய நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்படும்" என்று சிபிஐ உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்தும் புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ உயரதிகாரி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஒரு குழுவினர் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முகாமிட்டுள்ளார்கள். அவர்களின் வழக்கை சென்னையில் உள்ள சிபிஐ மண்டல அலுவலகத்தின் கண்காணிப்பாளரும் தமிழக காவல் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ. சரவணன் மேற்பார்வையிட்டு வருகிறார்.
விசாரணை அதிகாரி யார்?
இந்த வழக்கை சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர். ரவி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே தூத்துக்குடி சம்பவத்தின்போது காவல்துறை ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் ஹரிஹரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள். இதையடுத்து இந்த வாரம் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தவுள்ளதாக சிபிஐ உயரதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.


`ஸ்டெர்லைட் கலவரம்`
பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பாட்டுக்கு எதிராக அதன் தொழிற்சாலை அமைந்துள்ள தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images
அதற்கு ஆதரவாக திரண்ட உள்ளூர்வாசிகள், தூத்துக்குடி வியாபாரிகள் சங்கம், மீனவர் சங்கம், வீராங்கனை குழு, நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர் என சிறப்பு துணை தாசில்தார் காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கம், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் நபர்கள் உள்ளிட்ட சுமார் பத்தாயிரம் பேர், மே 22-ஆம் தேதி காலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் திரண்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரைக் கொல்லும் ஆயுதங்களுடன் வந்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் வளாகத்தை நோக்கி வரும் வழியில், அங்கிருந்த அரசு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தீ வைத்து விட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை கொல்லும் நோக்குடன் இந்த குழுவினர் வந்ததாக மாவட்ட சிறப்பு துணை தாசில்தார் பி. சேகர் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் செயல்பாடு, மாநில அரசின் அணுகுமுறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கை மாநில காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் துறையினர் (சிபிசிஐடி)விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அமர்வு இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது.
அப்போது, 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதுவும், மாநிலக் கட்டுப்பாட்டுக்குள் தான்வரும். எனவே, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












