உடலுறுப்பு கடத்தல்: மெக்சிகோ போலீஸ் விசாரணையில் ஒரு தம்பதி

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
உடல் உறுப்புகள் கடத்தல்
குழந்தைகளை அழைத்துச் செல்லும் வண்டியில் மனித உடல் உறுப்புகளை எடுத்துச் சென்ற ஒரு தம்பதியை மெக்சிகோ போலீஸார் விசாரித்து வருகின்றனர். குறைந்தது இவர்கள் பத்து பேரை கொன்றிருக்கலாம் என்ற நோக்கில் இவர்களை விசாரித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கைது செய்யப்பட்ட அந்த ஆண் மெக்சிகோ புறநகர் பகுதியில் தான் இருபது பேரை கொன்றதாக ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதி உடல் உறுப்புகளை விற்றிருக்கிறார்கள். ஆனால், யாருக்கென்று தெரியவில்லை என்று தெரிவிக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

செளதிக்கு சவால்

பட மூலாதாரம், AFP
துருக்கி அதிபர் எர்துவான் இஸ்தான்புல்லில் காணாமல் போன செளதி பத்திரிகையாளர் ஜமால் தொடர்பாக செளதி அரசுக்கு சவால் விடுத்துள்ளார். அதாவது அந்த பத்திரிகையாளர் தமது தூதரகத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டார் என செளதி நிரூபிக்க வேண்டுமென கூறி உள்ளார். ஜமால் தூதரகத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என ஊடகங்களில் செய்தி வந்ததை அடுத்து, தூதரகத்தை சோதனையிட துருக்கி அரசாங்கம் கோரி இருந்தது. இந்த கோரிக்கையை செளதி மறுத்துவிட்டது.


ஆயுதத்தை திரும்பபெறுதல்

பட மூலாதாரம், AFP
சிரிய கிளர்ச்சிப்படை இட்லிப் மாகாணத்தில் நிறுத்தி வைத்திருந்த தங்கள் கனரக ஆயுதங்களை திரும்ப பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. துருக்கி அரசு ஊடகம் ஏவுகணை உள்ளிட்ட கனரக ஆயுதங்களை அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தின் காரணமாக திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என் விவரிக்கிறது.

என் தொனியை கைவிடமாட்டேன்

பட மூலாதாரம், AFP
பிரேசில் நாட்டின் சர்ச்சைக்குரிய தீவிர வலதுசாரி அதிபர் வேட்பாளர் ஜயார் போல்சேனார்ரூ, இரண்டாவது சுற்று தேர்தலை முன்னிட்டு தம் வழக்கமான தொனியை கைவிடமாட்டேன் என கூறி உள்ளார். ஜயார் போல்சேனார்ரூ முதல் சுற்றில் 17 சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், பூரண வெற்றிக்கான 50 சதவீத செல்லும் வாக்குகள் பதிவாகவில்லை. இதனை அடுத்து நடக்கும் இரண்டாவது சுற்று தேர்தலில் இடதுசாரி தொழிலாளர் கட்சி வேட்பாளரை அவர் எதிர்கொள்வார். இனவெறிக்கு ஆதரவான கொள்கை உடையவர் போல்சேனார்ரூ.

மன்னிப்பு

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் நீதிபதியாக பதவியேற்றுள்ள பிரெட் கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். கேவனோவின் மேல் கூறப்பட்ட பாலியல் புகார்கள் "பொய் பிரசாரம்" என டிரம்பால் விவரிக்கப்பட்டு அதற்காக கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். தன்மீது பல பெண்களால் கூறப்பட்ட பாலியல் புகார்களை கேவனோவ் மறுத்து வந்தார். நீதிபதி கேவனோவின் நியமனம் செனட்டின் 50-48 என்ற கனக்கில் பெற்ற வாக்குகள் மூலம் உறுதியானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












