திருமணத்திற்கு வெளியே உறவு: உச்ச நீதிமன்ற வழக்கின் பின்னணி என்ன?

திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என சிலர் கருதுகின்றனர். இந்த சட்டத்தின்படி, வேறொருவரின் மனைவியுடன் பாலியல் உறவு கொண்ட ஒரு ஆண் மட்டுமே இந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட முடியும். எனவே இந்த சட்டப்பிரிவை இருபாலருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இத்தாலியில் வசிக்கும் ஜோசஃப் ஷைன் என்ற வெளிநாடுவாழ் இந்தியர் 2017 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் சட்டப்பிரிவு 497இன் கீழ், திருமணத்திற்கு வெளியே கொள்ளும் உறவைக் குற்றமாகக் கருதும் சட்டம் இருபாலருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, சட்டப்பிரிவு 497இல் மாற்றங்களைச் செய்தால் அது சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடும், சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியது.

இதுபற்றி கூறும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நந்தி, "இந்த வழக்கின் முடிவு மேலும் பல வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். திருமண உறவில் பாலியல் பலாத்காரம், திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், இருவரின் சம்மதத்தோடுதான் பாலியல் உறவு கொள்ளவேண்டும்" என்று கூறினார்.

"அதேபோல, சட்டப்பூர்வ வயது வந்த இருவர், தம்பதிகளாக இல்லாவிட்டாலும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால், அதற்கு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படக்கூடாது" என்று கோரப்பட்டது.

1860ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், சுமார் 157 ஆண்டு பழையது. இச்சட்டத்தின் கீழ், ஆண் ஒருவர், வேறொரு திருமணமான பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து புகார் அளித்தால், திருமணத்திற்கு வெளியே உறவு சட்டத்தின் கீழ், பாலியல் உறவு கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படுகிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம், சில சமயங்களில் சிறைதண்டனையும் அபராதமும் சேர்த்து வழங்கப்படும்.

எனினும், ஒரு திருமணமான ஆண், திருமணமாகாத பெண் அல்லது விதவை கைம்பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டால் அது இந்தச் சட்டப்பிரிவின்படி குற்றமாக கருதப்படாது.

தற்போது இந்த மனுவை தாக்கல் செய்திருக்கும் மனுதாரரின் கோரிக்கை என்னவென்றால், வயது வந்த இருவர் தங்கள் சம்மதத்துடன் உறவு கொள்ளும்போது, அதில் ஆணுக்கு மட்டும் தண்டனை ஏன், தண்டனை விதிக்கப்பட்டால் அது இரு பாலினருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக ஆணுக்கு மட்டும் ஏன் தண்டனை விதிக்க வேண்டும், பெண்ணுக்கு ஏன் பாரபட்சம் காட்டப்படவேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

497ஆம் பிரிவின்படி, சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது கணவர், 'சொத்து' என்று பார்ப்பதால்தான் தனது சொத்தை பிறர் தீண்டியதற்காக வழக்கு தொடுக்க முடிகிறது, ஆனால் ஒரு பெண்ணை ஒரு உடைமையாக மட்டுமே பார்க்கமுடியாது என்கிறார் வழக்கறிஞர் கருணா நந்தி.

"கணவர், தனது மனைவி மீது வழக்கு தொடுக்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள், இவ்வாறு செய்வதால் பெண்களின் மீதான உரிமையை காட்டுகிறார் என்று கருதப்படுகிறது. ஏனெனில் பெண்களின் விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் இங்கு கவனம் கொடுக்கப்படுவதில்லை."

"இது 1860 ஆம் ஆண்டின் சட்டம் என்பதோடு, விக்டோரியன் அரசு மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. திருமணத்திற்கு வெளியே உறவு என்பது சரி என்று யாருமே வாதாடவில்லை. ஆனால், இதை சட்டப்படி குற்றமாக கூறி வழக்கு தொடுப்பது சரியானதா என்பது விவாதத்திற்குரிய விஷயம்."

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சட்ட அமர்வு, இந்த பொதுநல மனுவை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு இந்த ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதியன்று மாற்றியது.

1954, 1985 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளும், அடல்ட்ரி குறித்த கேள்விகள் எழுப்ப்பட்டன. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் விசாரித்த ஒரு வழக்கில், ஆண் மட்டுமே ஏன் இந்த சட்டப்படி ஏன் குற்றவாளியாக கருதப்படவேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :