உணவக கழிப்பறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 17 வயது பெண்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

பாலியல் வல்லுறவு

தென் ஆப்ரிக்காவில் உணவக விடுதியில் 17 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார் என்று எழுந்த குற்றச்சாட்டு அந்நாட்டு மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இருபது வயது இளைஞர் கழிப்பறைக்கு சென்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து பலவந்தமாக இழுத்து ஆண்கள் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்தார் என்று கூறப்படுவதாக காவல் துறை தெரிவிக்கிறது.

சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அமைப்பொன்று அந்நாட்டில் ஒரு நாளுக்கு 110 பாலியல் வல்லுறவு சம்பவம் நடப்பதாக கூறுகிறது.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அர்ஜென்டினா பொருளாதாரத்தையும் அதன் சந்தையையும் விரைவாக மீட்க ஏற்கெனவே முடிவு செய்த தொகையைவிட அதிகமாக நிதியளிக்க உலக நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

36 மாத நிதி தொகுப்பாக அந்நாட்டிற்கு 57.1 பில்லியன் டாலர்கள் அளிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக 50 பில்லியன் டாலர்கள் அளிக்க முடிவு செய்திருந்தது உலக நாணய நிதியம். அர்ஜென்டினா நாணய மதிப்பு மோசமான சரிவை சந்தித்திருக்கிறது. வறட்சியின் காரணமாக விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இரு அரசு தீர்வு

இஸ்ரேல் பாலத்தீன பிரச்சனைக்கு இரு அரசு தீர்வை தாம் இப்போது நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பாலத்தீனத்திற்கான அமெரிக்க கொள்கையிலிருந்து கடந்த ஆண்டு டிரம்ப் விலகினார். அவர் ஒரு அரசு தீர்வே தமக்கு மகிழ்வை தரும் என்று கூறி வந்தார். இப்படியான சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை சந்தித்தப் பின், அவர் இரு அரசு தீர்வு குறித்து பேசி உள்ளார்.

காவல்துறையில் ஊடுருவிய கடத்தல்காரர்கள்

மெக்ஸிகோவில் காவல்துறையில் போதை பொருள் கடத்தல்காரர்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, அந்நாட்டு ராணுவம் காவல்துறையை கைப்பற்றி உள்ளது. மெக்சிகோ கடற்கரை நகரமான அகபுல்கோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அகபுல்கோவில் காவல் தலைமையகத்தில் நுழைந்த கடற்படை, அங்கிருந்த போலீஸிடமிருந்த தளவாடங்கள், குண்டு துளைக்காத ஆடைகள் ஆகியவற்றை கைப்பற்றி 700 போலீஸ் அதிகாரிகளை நிராயுதபாணியாக ஆக்கியது. இனி அந்த நகரை ராணுவம் கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.

சீனா தலையீடு

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலில் 'தலையிடுவதற்கு' சீனா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.

"அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சீனாவை எதிர்க்கும் முதல் அதிபர் நான் என்பதால் என்னையோ அல்லது எங்களையோ தேர்தலில் தோல்வியடைய செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்" என்று புதன்கிழமையன்று நடந்த ஐநா கூட்டத்தில் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :