You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்?
18 ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 9 பேரையும் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக விளங்கிய ராஜ்குமார் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது சந்தன மரக்கடத்தல் வீரப்பன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றால் கடத்தப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர்.
108 நாட்கள் கழிந்த பிறகு, கர்நாடக - தமிழக அரசுகள் நடத்திய பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நவம்பர் 15ஆம் தேதியன்று ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் 14 பேரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், 2004ஆம் ஆண்டில் வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தர்மபுரி அருகே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பனுடன் இருந்தவர்கள் என கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, நாகராஜ், முத்துசாமி, கல்மண்டி ராமன், மாறன், சத்தியா, அமிர்தலிங்கம், ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ரமேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் நீதிபதி கே. மணி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராஜ்குமார் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள் என அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்திருக்கக்கூடிய நடிகர் ராஜ்குமாரிடமுமோ அவருடைய மனைவி பார்வதம்மாவிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லையென்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் அணிவகுப்பு நடந்தபோதும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேஸட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, பிற ஆதாரங்களும் பத்து மாதங்கள் கழித்தே அளிக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் கூறினார்.
இந்தக் கடத்தல் சம்பவத்தின்போது வீரப்பனுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய அரசுத் தூதர்களின் (நக்கீரன் கோபால், பழ.நெடுமாறன், பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) புதுவை சுகுமாரன்) சாட்சியங்களும் பெறப்படவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஒன்பது பேர்தான் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் ஏதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளித்து அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.
பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து, நீதிமன்றத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்