திருமணத்துக்கு வெளியே உறவு - சட்டப் பிரிவு 497: அன்று முதல் இன்று வரை

திருமணத்துக்கு வெளியே உறவு - சட்டப் பிரிவு 497: அன்று முதல் இன்று வரை
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி

திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது.

பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் 158 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி திருமணமான பெண் ஒருவருடன், அவரது கணவரின் அனுமதியின்றி வேறு ஒரு ஆண் உறவுகொண்டால், அது தண்டனைக்குரிய குற்றம்.

அந்த உறவில் ஈடுபட்டிருந்த பெண் குற்றவாளியாக பார்க்கப்படமாட்டார். ஆனால், அவருடன் உறவில் இருந்த ஆண் அவரைக் குற்றம் செய்யத் தூண்டியவராகவே பார்க்கப்படுவார்.

இந்த சட்டப்பிரிவின்கீழ் வேறு ஒருவரின் மனைவியுடன் உறவில் இருந்த ஆணின் மனைவி தன் கணவர் மீது வழக்குத் தொடுக்க முடியாது.

அதே ஆண் திருமணமாகாத அல்லது கணவரை இழந்த பெண்ணுடன் உறவில் இருந்தாலோ, திருமணமான பெண்ணின் கணவரின் அனுமதியுடன் உறவு கொண்டிருந்தாலோ அது குற்றமாகாது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், DEA / C. BALOSSINI / getty images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

இந்தச் சட்டப்பிரிவின்கீழ் இதுவரை எத்தனை ஆண்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான தரவுகள் எதுவும் இல்லை.

இந்த வழக்கு இப்போது ஏன்?

கடந்த ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் வசிக்கும் இந்தியரான, 41 வயதாகும் ஜோசஃப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். இது ஆண்கள் பெண்கள் இருவருக்கும் எதிரான சட்டம் என அவர் கூறினார்.

பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் வகையில் திருமணமான பெண்கள் அவர்களது கணவரின் சொத்து எனும் பொருளை இந்தச் சட்டம் கொடுப்பதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ipc 497

பட மூலாதாரம், ullstein bild / getty images

அவரது 45 பக்க மனுவில் பாலின சமத்துவம் குறித்து பல்வேறு உலக ஆளுமைகள் கூறியிருந்த கருத்துகளை அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.

இதற்கு முன் இந்த சட்டம் எதிர்க்கப்பட்டுள்ளதா?

1954இல், பெண்களை தண்டிக்காமல் இருப்பதால் இந்த சட்டம் பாரபட்சமானது என்று தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த சட்டப்பிரிவு அரசமைப்புசாசனப்படி செல்லாது என்று 1985 மற்றும் 1988இல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணமான பெண் ஒருவர் தாம் உறவு வைத்திருந்ததாக குற்றம்சாட்டி ஒரு ஆண் மீது தன் கணவர் இந்தச் சட்டப்பிரிவின்கீழ் வழக்குத் தொடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால், 'திருமண உறவைக் குலைக்கும் வெளி ஆட்களைத் தண்டிக்கவே இந்தச் சட்டம்' என்று உச்ச நீதிமன்றம் அப்போது கூறியது.

சட்டத் சீர்திருத்தங்களுக்காக 1971 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இரு குழுக்களும், பெண்களையும் தண்டிக்கும் வகையில் இந்தச் சட்டப்பிரிவு மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தன.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

2011இல் வேறு ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் திருமணமான பெண்ணை அவரது கணவரின் சொத்தாக இந்தச் சட்டப்பிரிவு கருதுகிறது என்று கூறியது.

அரசின் நிலை என்ன?

இந்தியாவில் 'பிறன் மனை புணர்தல்' என்பது தொடர்ந்து குற்றமாகவே நீடிக்க வேண்டும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு விரும்புகிறது.

"திருமணமான பெண்ணுடன் உறவுகொள்வதை குற்றமில்லை என்றாக்கினால் திருமண உறவின் புனிதம் கெட்டுவிடும், " என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த சட்டப்பிரிவு பெண்களுக்கும் பாலின சமத்துவத்துக்கும் எதிராக உள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

"உடலுறவு கொண்ட ஒரு நபரை மட்டும் குற்றவாளியாக்குவது அறிவுக்கு முரணானது. பெண்கள் திருமணத்துக்கு வெளியே உறவு கொள்ள மாட்டார்கள் என்று கருதுவது நிறுவனமயமாக்கப்பட்ட பாரபட்சம்," என்கிறார் இதற்கு எதிரான மனுவைத் தாக்கல் செய்துள்ள ஜான்.

"முந்தைய மனுக்களை தள்ளுபடி செய்தபோது பெண்ணை பாதிக்கப்பட்டவராகவும், அவருடன் உறவில் இருந்த ஆணைத் தூண்டியவராகவும் கூறப்படுவது புரிந்துகொள்ள முடியாதது," என்று அவர் கூறுகிறார்.

இந்தச் சட்டம் பெண்கள் ஆண்களின் சொத்து எனும் ஆணாதிக்க சிந்தனைப்படி அமைந்துள்ளது என்கின்றனர் பிற விமர்சகர்கள்.

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், Bildagentur-online / getty images

அந்தரங்க உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விருப்பத்துடன் இரு சட்டபூர்வ வயதை அடைந்தவர்கள் உடலுறவு கொள்வது அவர்கள் அந்தரங்க உரிமை என்பதால், இந்த சட்டப்பிரிவு 497 அந்தத் தீர்ப்புடன் எப்படிப் பொருந்தும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

"நாம் யாருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சட்டம் சொல்லக்கூடாது," என்கிறார் சட்டப் பேராசிரியரான ராஷ்மி காலியா.

"திருமண உறவுக்கு வெளியே உறவு கொள்வது சரியா தவறா என்பதைவிட, விரும்பும் நபருடன் பாலுறவு கொள்ள சுந்திரம் உள்ளதா இல்லையா என்பதே முக்கியக் கவலை," என்கிறது எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி சஞ்சிகை.

வேறு எந்த நாடுகளில் இத்தகைய சட்டம் உள்ளது?

இதே போன்றதொரு சட்டத்தை 2015இல் தென்கொரிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இது சுய நிர்ணய உரிமைக்கு எதிரானது என்று அப்போது அந்த நீதிமன்றம் கூறியது.

பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் திருமணத்துக்கு வெளியே உறவு கொள்வது குற்றமாக இல்லை.

20க்கும் மேலான அமெரிக்க மாகாணங்களில் திருமணமான பெண்ணுடன் உறவு கொள்வது குற்றமாகவே கருதப்படுகிறது.

"குறியீட்டு அளவிலான காரணத்துக்காக மட்டுமே திருமணமான பெண்ணுடன் உறவு கொள்வது குற்றமாகவே கருதப்படுகிறது. இதை அமல்படுத்தி உண்டாகும் சேதங்கள் எதுவும் யாருக்கும் இல்லை. அதை ரத்து செய்து அரசியல் விளைவுகளை எதிர்கொள்ள யாரும் தயாரில்லை," என்கிறார் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக உள்ள திபோரா ரோட்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :