ரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன?

பட மூலாதாரம், BERTRAND GUAY / getty images
ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்த்துக் கொள்ள இந்தியாதான் பரிந்துரை செய்தது என்று ஃபிரான்ஸின் முன்னாள் அதிபர் ஃபிரான்சுவா ஒலாந்த் தெரிவித்துள்ளது இந்தியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மீடியாபார்ட் ஊடகத்திடம் பேசிய ஃபிரான்சுவா ஒலாந்த், தன்னுடன் வாழும் நடிகை ஜூலி காயே நடிக்கும் படத்தை தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து தமக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரிலையன்ஸ் குழுமம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றும் கூறியுள்ளார்.
"எங்களுக்கு இந்த விஷயத்தில் கூற எதுவும் இருக்கவில்லை. அம்பானியுடன் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய டஸ்ஸோ நிறுவனத்துக்கு இந்திய அரசுதான் ரிலையன்ஸ் குழுமத்தை பரிந்துரை செய்தது. டஸ்ஸோ நிறுவனம் எங்களுக்கு அளித்த பேச்சுவார்தையாளரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்."
" அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் எனக்கு ஆதாயம் எதுவும் இருப்பதாகக் கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஜூலி காயே நடிக்கும் படத்துக்கு இந்த விவகாரத்துடன் தொடர்பு இருக்கும் என்று நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை," என்று ஃபிரான்சுவா ஒலாந்த் கூறியுள்ளார்.
நடிகை ஜூலி காயே மீடியா பார்ட் நிறுவனத்துக்கு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அவரது விளக்கம் பின்வருமாறு.

பட மூலாதாரம், Arnold Jerocki / Getty images
'மை ஃபேமிலி' தயாரிப்பு நிறுவனம், எனக்கு பங்கு இருக்கும் விஸ்வைர் நிறுவனம் மூலம் இந்த படத் தயாரிப்புக்கு ரிலையன்ஸ் நிதியளிக்க வேண்டும் என்று அணுகியது. அதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்யும் பிற நிறுவனங்களைப் போலவே ரிலையன்ஸ் 10% அளவுக்கு தயாரிப்புச் செலவை அளிக்க ஒப்புக்கொண்டது. (உண்மையில் அது 16%)
அந்தப் படம் பிரான்சில் படப்பிடிப்பில் இருக்கும்போதுதான், அதன் தயாரிப்பாளர் அனில் அம்பானியை எங்களுக்கு அறிமுகம் செய்தார்.
'டு தி டாப்' எனும் ஆங்கில மொழிபெயர்ப்புடைய தலைப்பைக் கொண்டுள்ள அந்த பிரெஞ்சு படத்தில் ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் 1.6 மில்லியன் யூரோ முதலீடு செய்தது.
ஜூலி காயே மற்றும் ரிலையன்ஸ் இடையேயான தொழில்கூட்டு குறித்து, ஃபிரான்சுவா ஒலாந்த் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை தந்திருந்த ஜனவரி 24, 2016 அன்று அறிவிக்கப்பட்டது.
ரஃபேல் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஒலாந்த் முன்னிலையில் ஜனவரி 25, 2016 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.
ரஃபேல் விமானம் வாங்க இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாதது இதுவரை பிரான்சில் ஒரு பிரச்சனையாகவில்லை என்றும், போர் விமானங்களை தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்திருப்பதுதான் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது என்றும் மீடியாபார்ட் ஊடகத்தைச் சேர்ந்த ஆண்டன் ரோகட் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"பிரான்ஸ் அதிபராக இருந்த ஒலாந்த் இந்தியா சென்ற அதே நாளில், ஜூலி காயே நடிக்கும் திரைப்படத்தில் முதலீடு செய்வது குறித்து ரிலையன்ஸ் ஏன் அறிவிக்க வேண்டும், இந்தியாவில் வெளியாகாத படத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆர்வம் கட்ட வேண்டிய தேவை என்ன ஆகிய இரு கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை," என்றும் அவர் தெவித்தார்.
"பிரெஞ்சு சட்டப்படி தனது தொழில் கூட்டாளியை தேர்வு செய்ய டஸ்ஸோ நிறுவனத்துக்கு உரிமை உள்ளது, எனினும், ரஃபேல் ஒப்பந்த முடிவில் அதிகாரிகள் தலையீடு உள்ளது அனைவருக்கும் தெரியும்," என்றும் ஆண்டன் ரோகட் கூறினார்.
இந்நிலையில் ஃபிரான்சுவா ஒலாந்த்தின் கூற்றை அடுத்து ஃபிரான்ஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், DASSAULT RAFALE
ஃபிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி கையெழுத்தான ரஃபேல் ஒப்பந்தத்தில் 36 ரஃபேல் விமானங்களை வழங்குவது மற்றும் அதன் தரம் ஆகியவை குறித்து மட்டுமே ஃபிரான்ஸ் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும், கூட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் ஃபிரான்ஸ் அரசாங்கத்துக்கு எந்த ஈடுபாடும் இல்லை என ஃபிரான்ஸ் தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்தியாவின் விதிப்படி, பொருத்தமான இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் ஃபிரான்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது; மேலும் இந்த நிறுவனங்களுடன் சேர்ந்து அவை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான திட்டத்தின் அனுமதியை ஃபிரான்ஸ் நிறுவனம் பெறும்."
"அதன்படி இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பல தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் ஃபிரான்ஸ் நிறுவனம் இடையே ஏற்கனவே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தை சேர்த்துக் கொள்ளுமாறு இந்தியா பரிந்துரை செய்தது என்ற முன்னாள் ஃபிரான்ஸ் அதிபர் ஒலாந்தின் கூற்றை இந்தியா பரிசீலனை செய்து வருகிறது" என இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"வணிக ரீதியான முடிவுகளில் இந்திய அரசோ அல்லது ஃபிரான்ஸ் அரசோ தலையிடவில்லை" என அவரது டிவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை வங்கி கணக்கு திவாலான ஒரு நிறுவனத்துக்கு பிரதமர் மோதி வழங்கியுள்ளது ஒலாந்தின் கூற்று மூலம் தெரியவந்துள்ளது. அவருக்கு நன்றி என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
ரஃபேல் விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதி இது குறித்து ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் உள்ளது என்று கூறியுள்ள ராகுல் காந்தி, "பிரான்ஸ் முன்னாள் அதிபர் இந்தியப் பிரதமர் மோதியை ஒரு திருடர் என்று கூறியுள்ளார். ஆனால், இது குறித்து மோதி எதுவுமே பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது," என்று கூறியுள்ளார்.
ஒலாந்த் கூறுவதை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் கூறியது பொய் என மறுத்து உண்மை என்னவென்று கூறவேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












