பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் உண்மையில் உடற்பயிற்சியா?
- எழுதியவர், பூமிகா ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வீட்டில் உணவு சமைப்பது, சுத்தம் செய்வது, துணி துவைப்பது, குழந்தைகளை பராமரிப்பது ஆகியவற்றை செய்யும் பெண் சுறுசுறுப்பானவரா? இல்லை, அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் பெண்கள் சுறுசுறுப்பானவர்களா?

பட மூலாதாரம், Getty Images
வீட்டு வேலையை செய்து முடித்துவிட்டு, அலுவலகத்திலும் சென்று வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி, பல மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றுபவராக இருந்தாலும் சரி... நீங்கள் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான பெண் என்று சொல்லிவிடமுடியுமா என்றால், கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது!
உடற்பயிற்சி செய்யவில்லையா என்று பெண்களிடம் கேட்டால், வீட்டிலுள்ள வேலைகளை செய்வது போதாதா? என்ற கேள்வியை படபடப்பாக கேட்கும் பெண்களே அதிகம். குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதைவிட உடற்பயிற்சி செய்வது என்ன பெரிய விஷயம்? நேரத்திற்கு பிடித்த கேடு என்பதே பல பெண்களின் கருத்தாகவும் இருக்கலாம்.
இன்னும் சிலரோ, வீட்டு வேலைகள் செய்து களைத்துவிடுகிறோம், பிறகு எதற்கு உடற்பயிற்சி என்ற கேள்விகளும் அடிக்கடி நாம் கேள்விப்படுவதே. ஆனால், இது போன்ற எண்ணங்களும், அடிப்படை புரிதல் இல்லாத கேள்விகளுமே நோய்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
டெல்லியை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷாலினி சிங்கலிடம் பெண்களின் உடற்பயிற்சி பற்றி பேசினோம். பெரும்பாலான பெண்கள், அவர்கள் செய்யும் வேலையே உடல் ஆரோக்கியத்திற்கு போதுமானது என்று நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அது தவறு என்று கூறுகிறார் டாக்டர் ஷாலினி.
கிராமங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புற பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். நகரில் வசிக்கும் பெண்கள், வேலை அதிகமாக இருந்தால் பணியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள். நகரப் பெண்கள் செய்யும் வேலையில் முழு உடலும் இயங்குவதில்லை. முழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காதபோது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருதமுடியாது."

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார அமைப்பு அறிக்கை என்ன கூறுகிறது?
லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னல் என்ற சஞ்சிகையில் வெளியான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கையிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் ஏழை நாடுகளில் இயல்பாக செயல்பட வேண்டிய வயதுவந்தவர்களில் நான்கில் ஒருவர் மந்தமாக இருக்கின்றனர். சில நாடுகளிலோ, மூன்றில் ஒருவர் குறைவாக செயல்பட்டு மந்தமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆண்களைவிட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
அதிகம் செயல்படாதவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படுவர்களின் மூளையின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 43 சதவிகித பெண்களும், 23.5 சதவிகித ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல்படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது
உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் எல்லா செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்றவற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.
வயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது, இவை மூன்றும் நடைபெறும்.

பட மூலாதாரம், Getty Images
ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல்பாட்டிற்கான பலன்களை கொடுத்துவிடாது. முழு உடலும் செயல்படும்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
யார் எந்த அளவு மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
- 5 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் வாரந்தோறும் 60 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
- 19 முதல் 64 வயதுடையவர்கள் வாரந்தோறும் 150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 150 நிமிட மிதமான ஏரோபிக் பயிற்சிகள் செய்யலாம், உடல் வலிவு பெற வேண்டும் என்றால், வாரத்தில் இருமுறை உடற்பயிற்சி செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images
மிதமான ஏரோபிக் உடற்பயிற்சிகள்
வேகமான நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், ஸ்கிப்பிங், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போன்றவை மிதமான செயல்பாடு கொண்ட ஏரோபிக்ஸ் பயிற்சிகள் என்று கருதப்படுகின்றன.
என்.எச்.எஸ் அறிக்கையின் படி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு கீழ்கண்ட நன்மைகள் ஏற்படும்:
- இதய பாதிப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்களின் ஆபத்து 35 சதவிகிதம் குறைகிறது.
- இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்து 50 சதவீதம் குறைகிறது.
- பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் ஆபத்து 50 சதவிகிதம் குறையும்.
- மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 20 சதவீதம் குறைகிறது.
- அகால மரணம் ஏற்படும் ஆபத்து 30 சதவிகிதம் குறைகிறது.
- எலும்புகளில் நோய்கள் ஏற்படும் ஆபத்து 83 சதவிகிதம் குறைகிறது.
- மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து 30 சதவிகிதம் குறைகிறது.
ஆனால் பெண்கள் மந்தமாக செயல்படுவது ஏன்?
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆண்களைவிட பெண்கள் சற்று மந்தமாகவே செயல்படுகிறார்கள்.
இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது அம்மாவின் பொறுப்பு. இவற்றில் வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு. வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப்படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப்படுகிறது.
இதைத்தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது.
எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பளிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே, இன்றைய வாழ்க்கைமுறையே சுறுசுறுப்பாக இருப்பதற்கு முக்கிய பிரச்சனையாக இருப்பதாக கூறுகிறார். உரிய நேரத்தில் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம் என்று டாக்டர் ஷாலின் கூறுகிறார்.
- இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து
- நீரிழிவு
- உடல் பருமன்
- ரத்த அழுத்தம்
- கொழுப்பு தொடர்பான பிரச்சனைகள்
- தசைகளில் வலி
உடலுழைப்பை நீண்ட நேரமாக தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கும் பெண்களை அதிகம் செயல்படாதவர்கள் என்று சொல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய கலாசாரத்தின்படியும், நமது பழக்க வழக்கங்களின்படியும், பெண்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்குவது சுலபமானதில்லை. இன்று இயந்திரமயமான நிலையில், பெண்கள் அதிக நேரம் வீட்டு வேலைகளை செய்தாலும், முழு உடலும் இயங்குவதில்லை. எனவே செய்யும் வேலையிலேயே கொஞ்சம் விவேகமாக முழு உடலும் இயங்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.
காய்கறி வாங்குவதற்கு நடந்தே செல்லலாம். வாஷிங் மெஷினில் துணி துவைக்கும்போது, அதன் அருகிலேயே ஒரு சிறிய பலகையை போட்டு அதில் ஏறி இறங்கி உடற்பயிற்சி போல் செய்யலாம்.
சமையலறையில் நின்று கொண்டே வேலை செய்யும்போது, கால்களை மடக்கி நீட்டி சற்று இயக்கலாம். மாவு பிசைவது கைகளுக்கு பயிற்சி கொடுக்கும் சிறந்த வேலை.
வெளியில் செல்லும்போது, லிப்டுகளில் செல்வதை தவிர்த்து படிகளை பயன்படுத்துவதால் கால்களும், உடலும் சுறுசுறுபாக இயங்கும், உடலில் வெப்பம் ஏற்படும், வேர்வை வரும், இதயம் துடிக்கும், மூச்சு பயிற்சியாகவும் இருக்கும். இதுதானே சுறுசுறுப்பாக இருக்க தேவையானவை?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












