சட்டப்பிரிவு 377: 'லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா?'

    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி தமிழ்

செப்டம்பர் 6, 2018, வியாழக்கிழமை முற்பகல். இந்திய உச்ச நீதிமன்ற வளாகம். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்குகிறது என்பதை அறியாத பலரும், "இன்று உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் சிறப்பான நிகழ்வு உண்டா?" என்றபடியே கேள்வி எழுப்பினார்கள்.

LGBT section 377

பட மூலாதாரம், Getty Images

தீர்ப்பை அறிந்துகொள்ள கூடியிருந்த LGBT எனப்படும் பாலின சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தால் உச்சநீதிமன்ற வளாகமே நிரம்பியிருந்தது.

வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்த ஊடக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு மட்டுமல்லாது, கடந்து செல்பவர்களின் குழப்பம் கலந்த வியப்புக்கும் காரணமாக இருந்தன.

ஒருபாலுறவு இனிமேல் குற்றமில்லை என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புச் செய்தி வெளியானதும், அங்கு கூடியிருந்த ஒருபாலுறவுக்காரர்கள் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கான செயல்பாட்டாளர்கள் உரக்கக் குரல் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

LGBT section 377

ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக்கொண்டனர்; சிலர் புன்னகைத்தனர்; சிலர் கண்ணீர்விட்டனர். ஆனால், அந்த புன்னகை, கண்ணீர் இரண்டுக்குமே ஒரே காரணம்தான். தீர்ப்பு தந்த மகிழ்ச்சிதான் அது.

'முத்திரைகள்,வசவுகள் எதுவும் பாதிக்காது'

சட்டப்பிரிவு 377க்கு எதிராக 2001இல் வழக்குத் தொடர்ந்த அமைப்புகளில் எய்ட்ஸ் பெத்பவ் விரோதி அந்தோலன் (AIDS Bhedbhav Virodhi Andolan) எனும் அமைப்பும் ஒன்று. ஆனால், அவர்களது மனுக்கள் அப்போது தள்ளுபடி செய்யப்பட்டன.

LGBT section 377

எனினும் வியாழக்கிழமை சமீபத்திய மனுக்கள் மீதான தீர்ப்பு குறித்து அறிய உச்ச நீதிமன்றம் வந்திருந்தார், அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர்.பி.எஸ்.சஹ்னி.

"100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. சுமார் 80% மக்கள் லிங்க வழிபாடு செய்யும் நாட்டில், தங்கள் பாலியல் விருப்பத்தேர்வுகளை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார் சஹ்னி.

LGBT section 377

"ஒருபாலுறவினர் பாலியல் இச்சைகளைத் தூண்டுபவர்கள் என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஆனால், ஒருபாலுறவில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள் என்கின்றது ஒரு ஆய்வு. ஒரு பெண் எப்படி வெளிப்படையாக பிறரின் பாலியல் இச்சைகளைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வார் என்பதை யாரும் எண்ணிப்பார்க்கவில்லை."

"முதலில் மோசமானவர்களாக ஒருபாலுறவினர் முத்திரை குத்தப்படுவார்கள். பின்னர் கண்டிக்கப்படுவார்கள். ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும். முத்திரைகள்,வசவுகள் எதுவும் ஒருபாலுறவினரை பாதிக்காது," என்கிறார் அவர்.

'சுதந்திரத்துடன் சுவாசிக்க முடியும்'

"இந்தச்சட்டபிரிவு இதுவரை எங்களை சுவாசிக்க விடாத ஒரு காற்று மாசு போல இருந்தது. ஆனால், எங்களால் இனிமேல் முழு சுதந்திரத்துடன் சுவாசிக்க முடியும்," என்று கூறுகிறார் தீர்ப்புச் செய்தியை அறிய உச்சநீதிமன்றம் வந்திருந்த ஒருபாலுறவுக்காரர்களின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் ரிதுபர்ணா போரா.

LGBT section 377
படக்குறிப்பு, ரிதுபர்ணா போரா

"ஆனால், மாசு எல்லா இடங்களிலும் இருப்பது உண்மைதான்," என்று அவர் எள்ளலாகக் கூறினார். அவர் காற்று மாசை மட்டும்தான் குறிப்பிட்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

'இதற்காகத்தான் காத்திருந்தேன்'

தீர்ப்பு நாளன்று காலை முதலே உச்சநீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தார் திருநங்கை ராபியா. சட்டபூர்வ வயதை எட்டிய இருவர் ஒருபாலுறவு கொள்வது தவறல்ல என்ற செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சியில் ராபியா எழுப்பிய கூச்சல் சுற்றிலும் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

LGBT section 377
படக்குறிப்பு, தீர்ப்பை நண்பர்களுடன் கொண்டாடும் ராபியா (மத்தியில்)

2013இல் ஒருபாலுறவு ஒரு குற்றச்செயல்தான் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குறிப்பிட்ட அவர், "ஒரு நாள் உச்ச நீதிமன்றம் எங்களைக் குற்றவாளி என்கிறது. ஒருநாள் நீ குற்றவாளி இல்லை என்கிறது. இதுதான் இறுதித் தீர்ப்பு என நம்புகிறேன். இதற்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன்," என்கிறார் ராபியா.

இதுநாள்வரை சந்தித்துவந்த தொல்லைகளில் இருந்து இந்தத் தீர்ப்பு எங்களை விடுவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ராபியா.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: