You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘நிவாரண முகாம்களில் 54 ஆயிரம் பேர்’ - வெள்ளத்தில் மிதக்கும் கேரளா
இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: 'நிவாரண முகாம்களில் 54 ஆயிரம் பேர்' - வெள்ளத்தில் மிதக்கும் கேரளா
கனமழையால் கேரளாவில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: `30 ஏக்கர் காப்பு காடு மீட்பு'
முக்கியத்துவம் வாய்ந்த சட்டப் போராட்டம் ஒன்றில் வென்று நன்மங்கலம் வனசரகத்தில் 30 ஏக்கர் காப்புக் காட்டை மீட்டுள்ளது தமிழக வனத் துறை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. 1975 ஆம் ஆண்சு சென்னை காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட இடம் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்து தமிழ்: 'தமிழக மீனவர்கள் 27 பேர் கைது'
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.
"புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயலில் இருந்து 42 நாட்டுப் படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்களில், ஏம்ப வயலைச் சேர்ந்த சி.பழனிக்கு சொந்தமான படகில் 8 மீனவர் களும் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாலை பகுதியைச் சேர்ந்த எம்.கிருஷ்ணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒ.ஆறுமுகம் ஆகியோருக்குச் சொந்தமான படகில் தலா 7 பேர் வீதம் 14 பேர் என மொத்தம் 22 பேர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதேபோன்று, ஜெகதாப் பட்டினத்தில் இருந்து சி.கணேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 27 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களது 4 நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இவர்களை அங்குள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப் பாணம் சிறையில் அடைக்க உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினமணி: 'அனில் அம்பானிக்கு சாதகமாக மோதி'
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு சாதகமாக பிரதமர் நரேந்திர மோதி செயல்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை, ஜெய்ப்பூரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி வைத்து பேசியராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது இந்தியாவில் அந்த விமானங்கள் தயாரிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், பிரதமர் மோதி இந்த விவகாரத்தில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார். இது ஊழல் ஆகும்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரஃபேல் போர் விமானத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் தற்போது 3 மடங்கு அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பிரதமரின் ஊழலை வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்ததாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :