கருணாநிதிக்கு அஞ்சலி: கூட்ட நெரிசலில் இருவர் மரணம்: 41 பேர் காயம்

கருணாநிதிக்கு அஞ்சலி: கூட்ட நெரிசலில் சிலர் காயம்

தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் காயமடைந்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்தவண்ணம் இருந்தனர். அங்கு, பொதுக்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், முக்கியப் பிரமுகர்களுக்கான வழியிலும் பொதுமக்கள் புக ஆரம்பித்தனர். இதையடுத்து கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ராஜாஜி ஹாலின் சுவர்களை ஏறிக்குதித்தும் சிலர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைய முயற்சித்தனர். இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை தடியடி நடத்தியது.

இதற்குப் பிறகு ஏற்பட்ட நெரிசலில் பலர் சிக்கி கீழே விழுந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் 42 பேர் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் அந்த மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி இளங்கோ பிபிசியிடம் தெரிவித்தார்.

கருணாநிதிக்கு அஞ்சலி: கூட்ட நெரிசலில் இருவர் மரணம்: பலர் காயம்

பட மூலாதாரம், Getty Images

சற்று நேரத்திற்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க. ஸ்டாலின், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹால் வளாக சுவற்றை ஏறிக்குதித்து வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டுமென்றும் தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் திட்டமிட்டபடி இறுதி ஊர்வலத்தை 4 மணிக்கு நடத்த முடியுமென்றும் கூறியிருக்கிறார். உங்கள் சகோதரனாகக் கேட்கிறேன், தயவுசெய்து கலைந்துசெல்லுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, இதே போன்ற நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ரயில் மூலம் சென்னை வந்தவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை காலமான கருணாநிதியின் உடல் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்கு அவரது உடல் புதன்கிழமை அதிகாலையில் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.

காலை முதல் ராஜாஜி அரங்கத்தில் அதிக அளவில் திரண்ட தொண்டர்களை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறை தீவிரமாக ஈடுபட்டது.

காணொளிக் குறிப்பு, கருணாநிதி வாழ்கை பயணம் - 3 நிமிடம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :