You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹீலர் பாஸ்கர் கோவை மத்திய சிறையில் அடைப்பு
சுகப்பிரசவம் நிகழ எளிய வழி காட்டும் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி ஒன்றை கோவையில் நடத்த இருப்பதாக விளம்பரம் செய்ததால் கைது செய்யப்பட்ட நிஷ்டை அமைப்பின் நிர்வாகி ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரையும் வருகின்ற 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாநகர 7வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.
திருப்பூரில் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு முயற்சித்து ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் கிருத்திகா கடந்த வாரம் உயிரிழந்தார். இந்நிலையில் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு முயல்வது சரியானதுதானா? அறிவுபூர்வமானதா? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. அலோபதி மருத்துவர்கள் வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை என்ற அமைப்பு வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 26 ம் தேதி கோவையில் நடைபெறும் எனவும் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் பயன் பெறலாம் எனவும் விளம்பரம் செய்து இருந்தது. இந்த விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பு ஹீலர் பாஸ்கர் என்பவரால் நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் , இந்த விளம்பரம் குறித்து அவரிடம் வீட்டிலேயே சுகப்பிரசவம் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், இது குறித்து ஊடகங்களிடம் பேச விருப்பமில்லை என தெரிவித்த ஹீலர் பாஸ்கர், தமிழக டி.ஜி.பி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் கேட்டால் மட்டுமே உரிய விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் அவரையும், அவரது அலுவலகத்தையும் படம் எடுக்க அனுமதியில்லை எனவும் பேட்டியளிக்கவும் தனக்கு விருப்பமில்லை எனவும் ஹீலர் பாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க ஆகஸ்ட் 26ம் தேதி ஓரு நாள் பயிற்சி என்ற நிஷ்டை அமைப்பின் சர்ச்சைக்குரிய விளம்பரம் குறித்து சுகாதாரதுறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அந்த விளம்பரம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
நிஷ்டை என்ற அமைப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து ஆய்வு செய்து இருப்பதாகவும், அந்த அமைப்பு குறித்து முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குர் பானுமதி தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் பிரசவம் பார்ப்பது குறித்து தெரிவித்த அவர்,கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனையில்தான் பிரசவம் நடைபெற வேண்டும் என்றார்.மகப்பேறு மரணங்கள் தமிழகத்தில் குறைந்திருப்பதாகவும்,பிரசவ கால மரணங்களை தடுக்க அரசு மருத்துவமனைகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
நிஷ்டை அமைப்பு மீது காவல்துறையில் சுகாதாரத்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினரும் புகாரின் பேரில் நிஷ்டை அமைப்பின் நிர்வாகியான ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலவசமாக பிரசவம் பார்க்க பயிற்சி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா 5,000 ரூபாய் நன்கொடை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், ஹீலர் பாஸ்கர் மீது 420 , 511 என்ற பிரிவுகளில் குனியமுத்தூரில் போலீசில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் ஹீலர் பாஸ்கர் கைதை வரவேற்று ஒரு தரப்பினர் பதிவிட்டு வந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக பேசியதாலும், மருந்தில்லா மருத்துவம் குறித்து வலியுறுத்தியதாலும்தான் அவர் கைது செய்யப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :