You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டில் பிரசவம் பார்ப்பது பாதுகாப்பானதா? என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
திருப்பூரில் யூ-டியூப் காணொளிகளை பார்த்து பெண் ஒருவருக்கு அவரது கணவரும், கணவரின் நண்பரும் பிரசவம் பார்த்த நிலையில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வீட்டில் பிரசவம் பார்ப்பது பாதுகாப்பானதா? இதை மருத்துவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
அந்த காலத்தில் எல்லாம் வீட்டில்தானே பிரசவம் பார்க்கப்பட்டது? என்று நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. பெண்களுக்கு மறுஜென்மம் என்று கூறப்படும் பிரசவகாலம் குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?
பிபிசி தமிழிடம் பேசிய பிரபல மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ், இது முட்டாள்தனமானது என்கிறார்.
"யாருக்கு அதிக ரத்த போக்கு ஏற்படும் என்பதை கணிக்கவே முடியாது. அதற்கு ஏற்றாற்போல மருத்துவமனைகளில் ரத்தம் தயாராக வைக்கப்பட்டிருக்கும். வீட்டில் இதெல்லாம் யார் செய்வார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார் மருத்துவர் கமலா.
நவீன மருத்துவம் இல்லாத அந்த காலத்தில் ’மருத்துவச்சி’ வந்து வீட்டில் பிரசவம் பார்த்து வந்தார். மருத்துவச்சி என்றால் படிப்பறிவில்லாத மருத்துவர் என்று சொல்லலாம். சரியாக பிரசவம் நடைபெற்றால் சிசு உயிர் பிழைக்கும். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும். அதனால்தான் பிரசவத்தை பெண்களுக்கு மறுஜென்மம் என்று கூறுகின்றனர்.
அச்சுறுத்துகின்றனவா மருத்துவமனை செலவுகள்?
பிரசவம் என்றாலே அதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகிறது. இதற்கு பயந்து வீட்டிலே பிரசவம் பார்க்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய போது, "அரசு மருத்துவமனைகளில் செலவில்லாமல் அல்லது குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். பிரசவித்தலின் போது மருத்துவமனையை அணுகுவதே சரியானது. மருத்துவமனையில் ஆகும் செலவை பார்த்தால், உயிர் போனால் பரவாயில்லையா?" என்று கேட்கிறார் மருத்துவர் கமலா.
சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்?
பெண்களுக்கு சுகப்பிரசவமாக சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார் மருத்துவர் கமலா.
நல்ல உடற்பயிற்சி
காலை எழுந்தவுடன் நல்ல சூழலில் பிராணாயாமா, அதாவது மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மொட்டை மாடியிலோ, வீட்டுத் தோட்டத்திலோ அதிகாவையில் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
உடல் அசைவு அவசியம்
தரையில் அமர்ந்து காய்கறிகள் நறுக்குவது, தரையில் அமர்ந்து உண்ணுவது போன்ற பழக்கங்களை பின்பற்ற வேண்டும். கீழே அமர்ந்து எழுந்தால்தான் இடுப்பு எலும்புகள் இடையில் உள்ள ஜவ்வுப்பகுதி விரிவடைந்து பிரசவத்தின்போது, குழந்தையின் தலை எளிதாக வெளிவர உதவும்.
தற்போதைய காலகட்டத்தில் டைனில் டேபிளில் அமர்ந்து உண்ணுவது, மேடையில் வைத்து நின்று கொண்டே காய்கறி நறுக்குவது என்று அனைத்தும் மாறிவிட்டதாக மருத்துவர் கமலா குறிப்பிடுகிறார்.
அதனாலேயே பலருக்கும் பிரசவத்தின்போது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்கிறார் அவர்.
சத்தான உணவுகள்
நல்ல இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை வகையையாவது எடுத்துக் கொள்வது அவசியம். முலைக்கீரை, அரக்கீரை போன்று அவரவர் உடலுக்கு ஏற்ற ஏதேனும் ஒரு கீரை வகையை உட்கொள்ளலாம்.
அதேபோல தினமும் பழம் எடுத்துக் கொள்வதை பழகிக் கொள்ள வேண்டும். ஆப்பிள், திராட்சை மற்றும் வாழைப்பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும்,மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, யோகா செய்வது, நிம்மதியான தூங்குவது அவசியம்.
ஆனால், இவையெல்லாம் செய்தாலும் சில சமயங்களில் பிரசவத்தின்போது சில சிக்கல் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கும் என்கிறார் ஹோமியோபதி மருத்துவரான ஷ்யாமளா.
வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட பெண், அதிகளவிலான ரத்தப்போக்கால் இறந்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட அவர், வலிப்பு, அல்லது அதிர்ச்சி காரணமாக கூட இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்.
தற்போதுள்ள காலகட்டத்தில் வீட்டில் பிரசவம் பார்ப்பது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்கிறார் அவர்.
எப்போது சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது?
குழந்தையின் தலை பெரிதாக இருந்து பிறப்புறுப்பு மூலம் வெளியே வர முடியாத சூழல் இருந்தால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்.
வயிற்றில் குழந்தை தலைகீழாக இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படும்.
குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றியிருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
99 சதவீதம் சுகப்பிரசவம் வேண்டும் என்றாலும், சில சமயங்களில் தாய், சேய் இருவரையும் காப்பாற்ற வேண்டும் என்றால் சிசேரியன் செய்வது அவசியமாகிறது என்கிறார் மருத்துவர் ஷ்யாமளா.
இன்று அதிகளவில் சிசேரியன் மூலமாகவே குழந்தை பிறக்கிறது. காரணம் என்ன?
இன்று நம் வாழ்க்கைமுறை பெரிதும் மாறிவிட்டது. சரியான நேரத்தில் தூங்குவதில்லை, ஜங்க் உணவு உண்ணுவது, போதிய உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் என்று நம் வாழ்க்கை மாறிவிட்டது. இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
மேலும், கேட்க அதிர்ச்சியாக இருந்தாலும், சில பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர் என்கிறார் அவர். சுகப்பிரசவத்தினால் ஏற்படக்கூடிய வலியை நினைத்து அஞ்சும் இத்தலைமுறையினர், சிசரியன் வேண்டும் என்று நினைக்கின்றனர்.
குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுத்தவுடன், மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று கொள்வது சிறந்தது என்றும் மருத்துவர் ஷ்யாமளா குறிப்பிடுகிறார்.
அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்டதே..??
சில தசாப்தங்களுக்கு முன்னால் வீட்டில் பிரசவம் பார்க்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அப்போது தாய் சேய் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது அது பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பிரசவம் பார்க்கும் போது நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த காலத்தில் இருந்தது போல தற்போது ஏதுமில்லை. எல்லாமே மாறியுள்ளது. எனவே தற்போதுள்ள சூழலில் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதே நல்லது என்றும் மருத்துவர் ஷ்யாமளா தெரிவித்தார்.
மகப்பேறு வீடியோக்கள்
யூ டியூபிற்கு சென்று பார்த்தால், வெளிநாடுகளில் வீட்டிலேயே பெண்கள் பிரசவிக்கும் பல வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. தண்ணீருக்கு அடியில் குழந்தை பெற்றுக் கொள்வது, கணவர் மட்டுமே உடன் இருந்து மனைவி குழந்தை பெற்றுக் கொள்வது என்று பல வீடியோக்கள் உள்ளன.
ஆனால், அவையெல்லாம் இங்கு எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறியே.
இருப்பினும், தற்போதைய காலகட்டத்திலும் நம் ஊர்களிலேயே சிலர் வீட்டில் பிரசவம் பார்த்து, தாயும் சேயும் நலமாக இருந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :