காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் பெரும் நிதி

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இன்றும் அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியும், தலைவர்கள் மருத்துவமனை வந்தது குறித்தான செய்தியும்தான் முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது.

தினமணி: 'காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ 15,167 கோடி'

காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் ரூ.15,167 கோடி இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

23 காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்திருப்போரின் ரூ.15,167 கோடி பணம் உரிமை கோரப்படாமல் இருக்கிறது. இதில் அதிகப்பட்சமாக பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யிடம் ரூ.10,509 கோடி உள்ளது. அதற்கடுத்து 22 தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.4657 கோடி உரிமை கோரப்படாமல் இருக்கிறது.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களில், ஐசிஐசிஐ புருடென்சியல் லைப் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.807.4 கோடியும், ரிலையன்ஸ் நிப்பான் லைப் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.696.12 கோடியும், எஸ்பிஐ லைப் காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.678.59 கோடியும், ஹெச்டிஎஃப்சி ஸ்டான்டர்ட் லைப் நிறுவனத்திடம் ரூ.659.3 கோடியும் உரிமைகோரப்படாமல் உள்ளது என்று காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ-விடம் இருக்கும் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஜெயலலிதா மரணம் - அப்பல்லோவை பார்வையிட்ட விசாரணை குழு'

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் சிகிச்சை பெற்ற சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, அறை எண் 2008 ஆகிய பகுதிகளை பார்வையிட்டதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'சென்னையில் தி.மு.க. தொண்டர் தற்கொலை'

கருணாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் தி.மு.க. தொண்டர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மேலும் 3 பேர் இறந்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் ராஜு (வயது 63). எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க. தீவிர தொண்டரான இவர், திருவொற்றியூர் வட்ட செயலாளராக 3 முறை பதவி வகித்தவர். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளராகவும் இருந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ராஜு மனம் உடைந்தார். இதனால் அவர், கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் ராஜு வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'காரில் இருந்த பெட்ரோல் கேன் வெடித்ததில் 4 பேர் காயம்'

கட்சிப் பதவி பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த நிர்வாகி, டிடிவி தினகரன் வீடு எதிரே அவரது உருவபொம்மையை எரித்தார். அப்போது தீ காருக்குள் பரவி அதிலிருந்த பெட்ரோல் கேன்கள் வெடித்துச் சிதறின. இதில், 4 பேர் காயம் அடைந்தனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் நகர செயலாளராக இருந்தவர் பரிமளம் என்ற புல்லட் பரிமளம்.

இவரை கடந்த 27-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கிய துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வேறு ஒருவரை அந்தப் பதவியில் நியமித்தார்.

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு நேற்று மதியம் பரிமளம் சென்றார். காருக்குள் வைக்கோலால் செய்யப்பட்ட தினகரனின் உருவபொம்மை, 2 கேன்களில் பெட்ரோல் மற்றும் அரிவாள் இருந்துள்ளது.

தினகரன் வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு தினகரனை பார்க்க பரிமளம் சென்றார். அவரை தினகர னின் கார் டிரைவர் பாண்டித்துரை, புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பரிமளம், தினகரனுக்கு எதிப்பு தெரிவித்தவாறு தனது காருக்குள் வைத்திருந்த உருவபொம்மையை எடுத்து எரித்துள்ளார். அப்போது, காருக்குள் தீ பரவி அதிலிருந்த பெட்ரோல் கேன்கள் வெடிகுண்டுபோல வெடித்துச் சிதறின. இதில் பாண்டித்துரை, டார்வின் மற்றும் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் பரமசிவம், பரிமளம் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :