தினகரன் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர் ஒருவர் டிடிவி தினகரனின் வீட்டின் முன் தன் காரை நிறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக தெரியவந்துள்ளது.

அடையாறில் உள்ள தினகரனின் வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு, பெட்ரோல் குண்டு வீசியதாக அமமுக முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளம் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சுப்பையா ஆகியோர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில், தினகரனை பார்க்க வந்த பரிமளத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது, அவரது காருக்குள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து, அவரின் ஓட்டுனர் வீசினார் அதை தடுக்க முயன்ற தினகரனின் புகைப்படக்கலைஞர் டார்வின் மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்தனர் என்று அமுமகவைச் சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக வெற்றிவேல் தெரிவித்தார். ''கடந்த மாதம் பரிமளம் கட்சியில்இருந்து நீக்கப்பட்டார். அதிருப்தியில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதில் அவரும் காயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாண்டியன் மற்றும் டார்வின் அப்போலோ மருத்துவமனையில் உள்ளனர். தினகரனை பார்ப்பதற்காக ஆர்கே நகரில் இருந்துவந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும் காயமடைந்துள்ளார்,'' என்று வெற்றிவேல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :