You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதார் தகவல்: சவால் விட்ட டிராய் தலைவர், நிகழ்த்தி காட்டிய ஆய்வாளர்
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மாவின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிட்டு சமூக ஊடகத்தில் ஆதார் குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார் ஃப்ரெஞ்ச் பாதுகாப்பு ஆய்வாளர்.
டிராய் அமைப்பின் தலைவர் ராம் சேவாக் ஷர்மா தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்- ஐ ட்விட்டரில் பகிர்ந்து, என் ஆதார் எண்ணை வைத்து கொண்டு எனக்கு என்ன தீங்கிழைத்துவிட முடியும் என்று நிரூபியுங்கள் என்று சவால்விட்டு இருந்தார்.
அதற்கு, ட்வீட்டரில் பதிலளித்த ஃப்ரெஞ்ச் பாதுகாப்பு ஆய்வாளர், இலியட் ஆல்டர்சன், ராம் சேவாக் ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொலைபேசி எண், பிறந்த நாள், மின்னஞ்சல் முகவரி - ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
இலியட் ஆல்டர்சன் ஆதாரில் உள்ள பாதுகாப்பு கோளாறுகளை தொடக்கத்திலிருந்தே சுட்டிகாட்டி வருபவர்.
இலியட் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், ஷர்மா ஒரு பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, உங்கள் அருகில் இருப்பவர் உங்கள் மகளாகவோ அல்லது மனைவியாகவோ இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆதார் அட்டைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
பொதுமக்களின் ஆதார் தகவல்கள் 13 அடி அகலம் கொண்ட கான்கிரீட் சுவர் கொண்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் ஆதார் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆதார் தரவுகளை ஹேக் செய்து ட்ராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மாவின் தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டதாக கூறப்படும் ஃப்ரெஞ்ச் பாதுகாப்பு ஆய்வாளரின் கூற்றுகளை முற்றிலும் நிராகரிப்பதாக ஆதார் அமைப்பு கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "ஆர்.எஸ். ஷர்மா கடந்த பல ஆண்டுகளாக அரசாங்க ஊழியராக உள்ளதால், அவரது முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் அரசாங்க துறைகளின் இணைதளங்களில் பொதுவெளியில் ஏற்கனவே உள்ளது. எனவே, இதுபோன்ற தகவல்களை திரட்டி ஒன்றாக வெளியிட்டுவிட்டு அது ஆதார் தரவுகளிலிருந்து பெறப்பட்டதாக கூறினால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆதரின் பாதுகாப்பு கடந்த எட்டாண்டுகளில் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :