மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தில் ஒலித்த ‘ஜெயலலிதா’ பெயர்- ஏன்? எதனால்?
இடஒதுக்கீடு கோரி மஹாராஷ்ட்ராவில் நடந்துவரும் மராத்தா சமூகத்தினரின் போராட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் ஓங்கி ஒலிக்கிறது.

இடஒதுக்கீடு கேட்டு நேற்று நடந்த போராட்டத்தில், போராட்டக்காரர் ககாசாஹெப் ஷிண்டே ஆற்றில் விழுந்து மரணித்ததை அடுத்து, அப்போராட்டம் கலவரமாக மாறியது. இதனை தொடர்ந்து நடந்த கல்வீச்சில் போலீஸார் ஒருவர் மரணித்தார்.
இன்றும் அங்கு பந்த் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
மராத்தா மக்களின் போராட்ட வரலாறு
மஹாராஷ்ட்ரா மக்கள் தொகையில் முப்பது சதவீதம் இருக்கும் மராத்தா மக்கள் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
நில உடைமை சமூகமாக இருந்த மராத்தாக்கள், மாற்றமடைந்த நவீன பொருளாதார கொள்கைகளினால் பாதிக்கப்பட்டனர்.
விவசாயமும் அதுசார்ந்த பொருளாதாரமும் பிரதானமாக இருந்த போது பொருளாதாரத்தில் முன் வரிசையில் நின்றவர்கள், சேவை துறை முக்கியத்துவம் பெற்ற பிறகு பொருளாதார இழப்பை சந்திக்க தொடங்கினர்.

மராத்தாக்கள் மஹாராஷ்ட்ராவில் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்
இடஒதுக்கீடு வேண்டும் என்பதால் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கடந்த ஒரு தசாப்த காலமாக போராடி வருகிறர்கள். இந்த கோரிக்கையை முன் வைத்து கடந்த காலங்களில் மாபெரும் பேரணிகளையும் நடத்தி இருக்கிறாகள்.
இட ஒதுக்கீடு அளித்த காங்கிரஸ்
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் 2014 ஆம் ஆண்டு 16 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு மராத்தா சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மராத்தாக்கள் பின் தங்கியவர்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் அப்போது நீதிமன்றம் கூறிய காரணம். அதுமட்டுமல்லாமல், மொத்த இடஒதிக்கீடு விழுக்காடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற காரணத்தையும் அப்போது நீதிமன்றம் அடிகோடிட்டு காட்டியது.

அதன் பின் மராத்தா மக்கள் இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி வீதிக்கு வந்து போராட்டம் நடத்த தொடங்கினர். பேரணி, ஆர்ப்பாட்டம் என்று அவ்வபோது வெவ்வேறு வடிவங்களில் நடந்த போராட்டம் இப்போது உச்சத்தை எட்டி உள்ளது.
மராத்தா போராட்டக்காரர்கள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் பந்தர்பூரில் கலந்து கொள்ளவிருந்த மஹாபூஜையை தவிர்த்தார்.
ஓங்கி ஒலிக்கும் ஜெயலலிதா பெயர்
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு கொள்கையை மஹாராஷ்ட்ரா பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவர், "மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த போது, மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக் கூடாது என்ற காரணம் சொல்லி தடைவிதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் நாம் தமிழகத்தை பார்க்க வேண்டும். அவர்கள் மொத்த இடஒதுக்கீடு 70 சதவீதம் வரை தருகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் ஜெயலலிதா எடுத்தது போன்ற காத்திரமான நடவடிக்கையை மஹாராஷ்ட்ராவை ஆள்பவர்கள் எடுக்க வேண்டும் என்கிறார்கள் போராட்டக்காரகள்.
எப்படி தமிழகத்திற்கு மட்டும் சாத்தியமானது?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சொக்கலிங்கம், "ஜெயலலிதா 69 சதவீத இட ஒதுகீட்டை உறுதி செய்து அட்டவணை 9 இல் சேர்த்துவிட்டார். அட்டவணையில் 9 சேர்க்கப்பட்டு விட்டால், அந்தச் சட்டமோ, சட்டப் பிரிவுகளோ செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது என்று அரசமைப்புச் சட்டத்தின் 31 பி பிரிவு கூறுகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்று அட்டவணை 9 ஐ கேள்வி எழுப்ப முடியும் என்கிறது."
இந்த 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- இந்திய பெருங்கடலின் மத்தியில் ஒரு 'பேய் தீவு' : சுவாரஸ்ய தகவல்கள்
- பாகிஸ்தான் வாக்குப்பதிவில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி
- வரலாறு காணாத வெப்பம் - தென் கொரியாவில் வசிக்கும் தமிழர்களின் நிலை என்ன?
- ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்தது ஏன்?
- சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












