இந்திய பெருங்கடலின் மத்தியில் ஒரு 'பேய் தீவு' : சுவாரஸ்ய தகவல்கள்
- எழுதியவர், நீலிமா வள்ளங்கி
- பதவி, ஜூலை 25, 2018
அந்தமானிலுள்ள தொலைத்தூர மற்றும் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் குடியேற்றமான ராஸ் தீவு, அதன் உரிமையாளரான இயற்கையிடமே மீண்டும் சென்றுள்ளது.

பட மூலாதாரம், NEELIMA VALLANGI
இந்தியாவின் வியத்தகு தீவுகள்
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் 572 வெப்பமண்டல தீவுகளை கொண்ட ஒரு தீவு கூட்டமாகும். இவற்றில் 38 தீவுகளில்தான் மக்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை விட தென்கிழக்கு ஆசியாவிற்கு நெருக்கமாக இந்த தீவுகள் அமைந்துள்ளன.
வியப்பளிக்கும் கடற்கரைகள், செழுமையான கடல்வாழ் உயிரினங்கள், சிறந்த பவளப்பாறைகள் மற்றும் இதுவரை யாரும் செல்லாத பெரிய பழங்காலக் காடுகள் இத்தீவுகளின் அடையாளமாகும்.
ஆனால், இத்தகைய வியத்தகு பார்வைகளுக்கு அப்பால், ஒரு இருண்ட கடந்த காலமும் உள்ளது.

பட மூலாதாரம், NEELIMA VALLANGI
காலனிய குடியேற்றத்தின் மர்மமான எச்சங்கள்
இந்த தீவுகளில் ஒன்றான ராஸ் தீவு, முழுமையற்ற, கண்கவர் பேய் நகரமாக உள்ளது, இங்குதான் 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் குடியேற்றத்தின் சிதிலங்கள் எஞ்சியுள்ளன.
1940 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட இந்த தீவுக்கு இயற்கை மீண்டும் உரிமை கோரி எடுத்துக்கொண்டது.
சொகுசான மாளிகைகள், மிக பெரியதொரு தேவாலயம், நடமாடும் அறைகள், கல்லறை ஒன்று என அனைத்தும் காடுகளால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டன.

பட மூலாதாரம், NEELIMA VALLANGI
தனிமைப்படுத்தப்பட்ட காலனி
1857 ஆம் ஆண்டில், ஓர் எதிர்பாராத இந்திய எழுச்சிக்கு எதிர்வினையாற்றிய பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை சேர்ந்த கலகக்காரர்களுக்கு தண்டனை அளிக்கும் இடமாக இந்த தொலைதூரத் தீவுகளை தேர்ந்தெடுத்தது.
பிரிட்டிஷ் முதன்முதலில் 1858 ஆம் ஆண்டில் 200 இந்திய கைதிகளுடன் இத்தீவுக்கு வந்தபோது உட்செல்லமுடியாத வகையில் அடர்ந்த காடாக இது காணப்பட்டது.
0.3 சதுர கிலோமீட்டருக்கும் சற்றே அதிகமான பரப்பை கொண்ட ரோஸ் தீவில் தண்ணீர் இருந்ததன் காரணமாக பிரிட்டிஷாரின் முதலாவது கைதிகள் தங்குமிடமாக இது மாற்றப்பட்டது.
அடர்த்தியாக காணப்பட்ட காடுகளை சுத்தம் செய்யும் கடுமையான பணியை கைதிகளிடம் கொடுத்த அதிகாரிகள் அதுவரை கப்பலிலேயே தங்கியிருந்தனர்.

பட மூலாதாரம், NEELIMA VALLANGI
புதிய தொடக்கம்
கைதிகளை தங்கவைக்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ராஸ் தீவிலிருந்த கைதிகள் அருகில் இருக்கும் தீவுகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கும், ராணுவ குடியிருப்புகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
எனவே, ராஸ் தீவானது நிர்வாகத்தின் தலைமையகமாகவும், உயரதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாங்கும் பிரத்யேகமான இடமாகவும் மாறியது. ஏனைய தீவுகளிருந்த தண்ணீர் சார்ந்த பிரச்சனையின் காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக இருந்த நிலையில், செழித்து காணப்பட்ட ராஸ் தீவில் மிகப் பெரிய விடுதிகளும், டென்னிஸ் மைதானங்களும் அமைக்கப்பட்டன.

பட மூலாதாரம், NEELIMA VALLANGI
இறுதி வெளியேற்றம்
தொலைதூரத்தில் இருக்கும் இந்த சிறிய தீவில் டீசல் ஜெனரேட்டர் மூலம் மின் நிலையம் செயல்பட்டதால், சுற்றிலுமுள்ள பல தீவுகள் துன்பத்தில் மூழ்கியிருந்தாலும் ராஸ் தீவு ஒளிமயமான சொர்க்கத்தைப் போல காட்சியளித்தது.
1938 ஆம் ஆண்டு ராஸ் தீவில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் 1942 முதல் இத்தீவின் செயல்பாடு வெகுவாக குறைந்தது.
அதன்பிறகு ஜப்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இங்கிருந்து பிரிட்டிஷ் வீரர்கள் தப்பித்து சென்றாலும், மீண்டும் இப்பகுதியானது அவர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. அதன் பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ராஸ் தீவானது அதன் இயல்பான நிலையை அடைந்தது.

பட மூலாதாரம், NEELIMA VALLANGI
இயற்கை அதன் போக்கை நோக்கி செல்லும்
தீவின் இடிபாடுகள் அதன் கடுமையான மற்றும் கொடூரமான காலனித்துவ காலம் குறித்த ஒரு சிறிய பார்வையை வழங்குகிறது.
களிமண் கூரைகள், சலசலப்பு மிகுந்த பஜார், இத்தாலிய ஓடுகள் மற்றும் கறை படிந்த கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவை எல்லாம் மறைந்துவிட்டன. ஆனால், ஆணையாளரின் பங்களா, மற்ற அதிகாரிகளுக்கான விடுதிகள், பிரஸ்பைடிரியன் சர்ச் மற்றும் மற்ற பெயரிடப்படாத சுவர்கள் மற்றும் தடையின்றி நீண்டு வளரும் ஆலமரத்தின் விழுதுகள் ஆகியவை அப்படியே உள்ளன.
வறண்டுபோன வேட்டை திட்டங்கள்
பொழுதுபோக்குக்காக வேட்டையாடுவதற்காக 1900களின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள் பல்வேறு வகையான மான்களை அந்தமான் தீவுகளில் அறிமுகப்படுத்தினர்.
இயற்கையாக இங்கிருந்த மான்களை வேட்டையாடுவதற்கான விலங்குகள் இல்லாததால், அவற்றின் எண்ணிக்கை அபரிதமாக அதிகரித்ததுடன், தாவரங்களை அதிகளவில் உண்டதன் காரணமாக பின்னாளில் அப்பகுதியில் புதிய காடுகள் உருவாவதை மட்டுப்படுத்தும் நிலைக்கு சென்றது.
தற்போது முயல்கள் மற்றும் மயில்களோடு இணைந்து மான்களும் ராஸ் தீவின் அடையாளங்களுள் ஒன்றாக பார்வையாளர்களை மகிழ்விக்கின்றது.

பட மூலாதாரம், NEELIMA VALLANGI
எதிர்காலத்தை பற்றிய ஒரு பார்வை
கீழ்மட்ட அதிகாரிகளின் பொழுதுபோக்குகளுக்காக கட்டப்பட்ட படத்தில் காணப்படும் இந்த விடுதியில், அக்காலத்தில் நடனமும் இசையும் ஆக்கிரமித்திருந்த நிலையில், தற்போது உடைந்த சுவர்களை கொண்ட அந்த கட்டடத்தில் பறவைகளின் ஒலியே எஞ்சியுள்ளது.
இந்திய காலனித்துவத்தின் இருண்ட வரலாற்றை கொண்ட இந்த காலனி மூடப்பட்டு கிட்டத்தட்ட எட்டு தசாப்தகாலங்கள் ஆகியுள்ளன. ராஸ் தீவு இப்போது இந்திய பெருங்கடலில் மறந்துவிட்ட ஒரு பகுதியாகும். மேலும், மனிதர்கள் ஓரிடத்தைவிட்டு சென்றவுடன் நீண்ட காலம் கழித்து, அவர்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு கிளர்ச்சியூட்டும் பார்வையை இது வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












