You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை: வந்தது புதிய சட்டம்
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'லஞ்சம் கொடுத்தால் தண்டனை'
லஞ்சம் வாங்குபவருக்கு மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பவருக்கும் முதல் முறையாக தண்டனை வழங்கப்பட உள்ளது. இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
லஞ்சம் வாங்குவது மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாகும். லஞ்சம் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படுவது, இதுவே முதல்முறை ஆகும். அதற்காக இந்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அரசின் பொறுப்புடைமையை அதிகரிக்கவும், சட்டத்தின் ஷரத்துகளை கடுமை ஆக்கவும் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று மசோதாவை தாக்கல் செய்த இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: '75000 கனஅடி நீர் திறப்பு: வெள்ள எச்சரிக்கை'
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 75,000 கன அடி நீர் செவ்வாய்க்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளதை அடுத்து, காவிரி கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
தி இந்து: 'நாடு திரும்ப விரும்பும் மல்லையா'
விஜய் மல்லையா நாடு திரும்பும் எண்ணத்துடன் இருக்கிறார் என்று அமலாக்கத் துறை கருதுவதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து நாளிதழ். வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்குகளில் தொடர்புடைய மல்லையா பிரிட்டனில் தற்போது வசிக்கிறார்.
தினமணி: சிங்கக் குட்டிக்குபெயர் 'ஜெயா'
வண்டலூர் பூங்காவில் உள்ள பெண் சிங்கக் குட்டிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக ஜெயா' என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பெயர் சூட்டிய செய்தி தினமணி நாளிதழில் பிரதானமாக இடம்பிடித்துள்ளது.
பிகார் மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு காண்டாமிருகம் விரைவில் வாங்கப்பட உள்ளது என்று பழனிசாமி பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
'முதல்வர் - துணை முதல்வர் ஒற்றுமையாக உள்ளனர்'
முதல்வரும், துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழின் மற்றொரு செய்தி. கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சகோதரர்களாக உள்ளனர். மற்றவர்கள் எதிர்பார்ப்பது போன்று அவர்கள் பிரிவது எந்தக் காலத்திலும் நடக்காது என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்து தமிழ்: 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதா?'
தகவல் அறிவும் உரிமைச் சட்டம் தொடர்பாக தலையங்கம் எழுதி இருக்கிறது இந்து தமிழ் நாளிதழ்.
"அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2005-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். மன்மோகன் சிங் அரசு மேற்கொண்ட புரட்சிகரமான முடிகளின் ஒன்று அது. அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் கேட்டுப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அதிகார வரம்பை மேலும் பல துறைகளுக்கு விரிவுபடுத்த வேண்டிய தேவைகள் இருக்கும் நிலையில், இதை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டியவை. 'தேர்தல் ஆணையகப் பதவியைப் போல தகவல் அறியும் சட்டப்படியான ஆணையர்கள் பதவி, அரசியல் சட்டத்தால் உருவாக் கப்பட்டது அல்ல, எனவே ஆணையர்களின் ஊதியம், படிகள், பதவியாண்டு போன்றவற்றைத் தீர்மானிக்கும் உரிமை அரசுக்கு வேண்டும்' என்று மத்திய அரசு வாதிடுகிறது. இது மிகவும் குறுகிய கண்ணோட்டமாகும்." என்று விவரிக்கிறது அந்த தலையங்கம்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :