You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்தது ஏன்?
தில்லிக்கு ஒரு நாள் பயணமாக திடீரென்று நேற்று வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் தவிர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு திரும்பினார்.
முன்னதாக தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், உடல் நலமில்லாத தமது சகோதரரை மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல ராணுவ விமானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கியதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க டெல்லி வந்ததாக தெரிவித்தார். மேலும், இது அரசுப் பயணமோ, அரசியல் பயணமோ அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செளத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்துக்கு மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா.மைத்ரேயனுடன் பன்னீர்செல்வம் சென்றார். ஆனால், வரவேற்பறையில், நிர்மலா சீதாராமனை சந்திக்க மைத்ரேயனுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சில நிமிடங்கள் இருவரும் அங்கு காத்திருந்த நிலையில், நிர்மலா சீதாராமனின் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சரை சந்திக்க மைத்ரேயனுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி கூறியதாக பன்னீர்செல்வம் தெரிவித்ததாக தமிழ் ஊடகம் ஒன்றின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. அதை மீண்டும் தமது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்காட்டிய நிர்மலா சீதாராமனின் அலுவலகம், நிர்மலாவை பன்னீர்செல்வம் சந்திக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்துவதாக கூறியது.
இதற்கிடையே, சில நிமிடங்கள் பாதுகாப்பு அமைச்சர் அலுவலக வரவேற்பறையில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், மைத்ரேயனுக்கு இதுபற்றிய தகவல் கிடைத்ததால், அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்துக்கு பன்னீர்செல்வம் சென்றதாக கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்து மைத்ரேயனும் சென்றார்.
இதேவேளை, நிர்மலா சீதாராமனை சந்தித்து விட்டு மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக உறுப்பினர்கள் சிலர் அங்கு காத்திருந்தார்கள். அவர்களிடம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரடியாக விமான நிலையம் சென்ற தகவல் குறித்து தெரிவிக்கப்பட்டதும் அவர்களிடையே ஒருவித பரபரப்பு நிலவியது.
கடந்த திங்கட்கிழமை இரவு பன்னீர்செல்வம் டெல்லி வந்தபோது, அவருக்கே ஆச்சர்யமளிக்கும் வகையில், முப்பதுக்கும் அதிகமான அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்பு அளித்தார்கள்.
இதுபோன்ற வரவேற்பை முன்பு முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் வகித்தபோது அதிமுக உறுப்பினர்கள் வழங்கினார்கள். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி கைமாறிய பிறகு அவருக்கு மட்டுமே விமான நிலைய வரவேற்பு கிடைத்து வந்தது.
இந்நிலையில் பல அரசியல் ஊகங்களுக்கு இடையில் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட டெல்லி பயணம் அவர் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விடையில்லாத கேள்விகள்
நிர்மலா சீதாராமன் அனுமதி அளிக்காமலே, நேரம் ஒதுக்காமலே அவரது அலுவலகத்துக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஏன் சென்றார்? சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் என்று பன்னீர்செல்வம் முன்கூட்டியே கேட்டிருந்தாரா? மைத்ரேயனை சந்திக்க நேரம் ஒதுக்கிய நிர்மலா சீதாராமன் ஏன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டும் நேரம் ஒதுக்கவில்லை? ஓ.பி.எஸ். சந்திக்க அனுமதிக்க மறுக்கப்பட்டாலும், மைத்ரேயன் மட்டும் நிர்மலாவை சந்தித்தாரா? நன்றி சொல்வதற்காக துணை முதல்வர் ஏன் இவ்வளவு தூரம் பறந்து வந்து நேரில் செல்லவேண்டும்? உண்மையில் பன்னீர்செல்வம் எதற்காக டெல்லி வந்தார்? இதுபோன்ற கேள்விகளுக்கு அதிமுக தரப்பில் பதில் அளிக்க யாரும் இல்லை.
ஓ.பி.எஸ்.சின் இந்த பயணம் முழுவதற்குமான சாட்சியாக இருந்த மைத்ரேயனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், உரையாடலைத் தொடர அவர் விரும்பவில்லை.
இந்த நிலையில், டெல்லிக்கு திடீர் பயணம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலேயே சென்னைக்கு திரும்பியுள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதையும் தாங்கும் இதயம்...
இதனிடையே சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது 'எதையும் தாங்கும் இதயம்' இருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :